தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த ஜெயில் படம் ரிலீஸானது. இதனையடுத்து அவர் அநீதி என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன்,
“தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான்.
தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்புதான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.
எப்போது சினிமாவிற்கானபுரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுதுதான் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும்.
நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: ஆகஸ்ட் 31-ல் ரிலீஸ்!