அனிமல் போன்ற படங்களை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது. தற்போதைய காலக்கட்டத்தில் படத்தின் இயக்குநர்களைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும் என எழுத்தாளர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். writer javed akhtar criticize animal movie
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் டிசம்பர் 1 அன்று இந்தியில் வெளியான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் இதுவரை 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சந்திப் வாங்கா இயக்கிய இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனை நிரம்பிய திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று படம் வெளியான அன்றே விமர்சனங்கள் எழுந்தன.
பெண்களை மலிவாக சித்தரிப்பது, பெண் கதாபாத்திரங்களை ஆண்களின் இச்சைக்கும், வக்கிர எண்ணங்களுக்கு அடி பணிந்து போக வேண்டும் என்கிற கருத்தியலை உருவாக்கும் வகையிலான காட்சிகளை தான் இயக்கிய முதல் படமான அர்ஜுன் ரெட்டியில் இயக்குநர் சந்திப் வாங்கா காட்சிப்படுத்தியிருந்தார். அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கிலும் அதே ஆணாதிக்கத்தை அதிகப்படுத்தி இருந்தார்.
தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள அனிமல் படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தை காட்டிலும் ஒரு படி அதிகம் ஆணாதிக்கம், வக்கிரத்தை அதிகப்படுத்தி ஆண் கதாபாத்திரம் மூலம் பேசியிருக்கிறார் சந்திப் வாங்கா.
பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஷாருக்கானின் பதான், ஷவான் படங்களுக்கு இணையாக இந்தத் திரைப்படம் நிகழ்த்தியிருக்கும் வசூல் சாதனை ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வணிகமாக அனிமல் படத்தின் வசூல் பாலிவுட்டில் கொண்டாடப்பட்டு வந்தாலும் படைப்பு ரீதியாக படத்திற்கு எதிரான கருத்துகள், விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன.
சமூகவலைத்தளங்களில், ஊடகங்களில் விமர்சகர்களால் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வந்த சூழலில், இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான ஜாவித் அக்தர் அனிமல் போன்ற படங்களை ஆதரிப்பது, வசூலைக் குவிப்பது அபாயகரமானது எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்ரா மாநிலத்தில் நடைபெற்ற ஒன்பதாவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜாவித் அக்தர்” பொறுப்புணர்வுடன் கதாநாயக பிம்பம் உருவாக்கப்பட வேண்டும். இன்றைய திரைக்கதை எழுத்தாளர்கள் அதுகுறித்து சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் குழப்பங்கள் நிலவுகிறது” என்றவர்,
அனிமல் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை குறிப்பிட்டு பேசிய அவர் “ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் தனது ஷூவை நாக்கால் துடைக்க சொல்வதும், அந்தப் பெண்ணை அடிப்பது, துன்புறுத்துவது சரி என்று சொல்லும் வகையில் காட்சிப்படுத்திய திரைப்படத்தை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது. தற்போதைய காலக்கட்டத்தில் படத்தின் இயக்குநர்களைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பார்வையாளர்கள்தான், எதைப் பார்க்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். புறக்கணிப்பது பார்வையாளர்களின் கையில் தான் இருக்கிறது. இன்று சில இயக்குநர்கள் மட்டுமே நல்ல சினிமாவை படமாக்குகிறார்கள். நீங்கள் எவ்வளவு நாட்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் சினிமாவின் தலைவிதி அமையும்” என்றார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லி குடியரசு தின விழாவில் கோவை பழங்குடியின தம்பதி: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!
அயோத்தி ராமர் கோவில் போறீங்களா? – சேகர் பாபு முக்கிய அறிவிப்பு!
writer javed akhtar criticize animal movie