திரைப்பட விமர்சனம்: விட்னஸ்!

Published On:

| By Kavi

அ. குமரேசன்

தமிழ் சினிமா முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. பல்வேறு சமூகப் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இந்த உண்மைகளையெல்லாம் பேசுகிற படங்கள் வராதா என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. இதற்கொரு விட்னஸ் அளிக்கிற படம்தான் இந்த ‘விட்னஸ்‘.

புரையோடிப் போயிருக்கும் சமூக நிலைமைகளையே கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் தீபக். அந்தக் கதைதான் இந்தப் படத்தின் நாயகம். கதாநாயகன் போலீஸ் அதிகாரி என்றால் அவனுடைய குடும்பத்தில் ஏதாவது இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும், அதனால் அவன் ஆவேசத்தோடு எதிரிகளைப பந்தாடக் கிளம்புகிறான் என்கிற மாதிரியான கதைகளையே பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு, இப்படி கதையையே நாயகப் பாத்திரமாகப் பார்ப்பது அரிதான அனுபவமாகிறது. கதையின் செய்தியோ மனதைக் குடையும் குற்றவுணர்ச்சியைத் தருகிறது.

சாலையில் குப்பை பெருக்கும் துப்புரவுத் தொழிலாளி இந்திராணியின் மகன் பார்த்திபன். நீச்சல் குள பயிற்றுநரான பார்த்திபன் ஒரு அடுக்ககக் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கி விடப்படுகிறான்.

அதற்குக் காரணம் வேறு என்ன  சாதிதான் – அவன் ஒரு ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதுதான். இந்தக் கட்டாயப்படுத்த்தப்பட்ட வேலையில் எதிர்நீச்சல் போட முடியாத அவன் மூச்சுத் திணறி உயிரிழக்கிறான்.

இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைப்பதற்கே ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. பார்த்திபன் சாவுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை கோரும் போராட்டம் தெருவில் தொடங்குகிறது, பின்னர் நீதிமன்றக் கதவைத் தட்டுகிறது.

நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் சமுதாயத்தின் சீழ்பிடித்த குதர்க்கங்களை ஒப்பனைப் பூச்சுகள் இல்லாமல் காட்டுகின்றன.

கழிவுத் தொட்டியை சுத்தப்படுத்தும் வேலையில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற தடை வெறும் எழுத்தாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் மனிதர்கள்தான் இறக்கிவிடப் படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்த வேலையைச் செய்யக்கூடிய நவீன எந்திரம் எதுவும் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க, அந்த வேலையைச் செய்ய வேண்டியவர்கள் யார் என்றால் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே. இதெல்லாம் நீதிமன்ற விசாரணையில் அலசப்படுகின்றன. ஒருவேளை மிக நவீன எந்திரமே வந்து விட்டாலும் கூட, அதை இயக்குகிற வேலை இதே மக்களிடம்தானே தரப்படும் என்ற சிந்தனை ஏற்படுகிறது. காரணம் அதை முடிவு செய்வது சட்ட விதிகள் அல்ல, சமூக விதிகள்!

இந்த உழைப்புச் சுரண்டலையும் சமூக ஒடுக்குமுறையையும் பாதுகாக்க உடந்தையாக இருக்கிற காண்ட்ராக்ட்-சப்காண்ட்ராக்ட் பின்னல் அமைப்புகளையும் படம் சுட்டிக்காட்டுகிறது.

அத்துமீறி பேசுகிற ஒரு அதிகாரியின் கன்னத்தை பதம் பார்க்கிறது இந்திராணியின் கை. அதன் விளைவு, அலுவலகக் கணினியில் சம்பள பட்டியலில் அவருடைய பதிவு எண் காணாமல் போகிறது! இப்படிப்பட்ட தில்லுமுல்லுகள் மூலமாகத்தானே இந்த மக்கள் கை உயர்த்த விடாமல் தடுக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு நம்பிக்கையூட்டி போராட்டக் களத்தில் திரளச் செய்யும் சங்கத் தோழர் பெத்துராஜ் சிறையில் அடைக்கப்படுகிறார். இதன் மூலம் ஆதரவுக் குரல்கள் அடங்கிப் போகும் என்று காவல்துறையினரும் அவர்களைத் தூண்டிவிட்டவர்களும் நினைத்திருக்க, இயக்கத் தோழர்கள் தொடர்ந்து பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

கழிவகற்றும் பணிக்கு முறையான ஏற்பாடுகளை செய்தால் கூடுதலாக செலவாகுமே என்று கணக்குப் போட்டு பார்த்திபனை தொட்டிக்குள் இறக்கிவிடும் அடுக்கக நிர்வாகி, “ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவர்கள் உள்ளே இறங்கினால் நாங்களா பொறுப்பு,” என்று கேட்கிறார், “ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டது நீங்களா அவர்களா,” என்ற எதிர்க் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

இப்படிப்பட்ட கேள்விகளை பொருட்படுத்தாதே என்று மரத்துப் போக வைப்பதுதானே சாதியம்? இத்தகைய வசன ஊசிகள் படத்தில் ஆங்காங்கே முன்னுக்கு வந்து குத்துகின்றன.

Witness Movie Review

படம் தனி மனிதர்களைக் காட்டவில்லை. மாறாகப் பல பிரதிநிதிகளை சாட்சியாக்கிக் காட்சிப்படுத்துகிறது. மாறாத சமூக வன்மத்திற்கு பலியாகிறவர்களின் பிரதிநிதி பார்த்திபன். இனியும் அடங்கியிருக்க முடியாது என்று போராடப் புறப்படுகிறவர்களின் பிரதிநிதி இந்திராணி. மற்றவர்களின் ஆதரவுத் தளத்தை இழக்க வேண்டியிருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல் இவர்களுக்காகக் களம் காண்கிறவர்களின் பிரதிநிதி அந்தத் தொழிற்சங்கத் தோழர்.

மற்றவர்களிலும் பார்த்திபன்களின் அநியாய மரணத்திற்கு நாமும்தானே ஏதோ ஒரு வகையில் பொறுப்பு என்று மனசாட்சியோடு உறுத்தலடைகிறவர்களின் பிரதிநிதி அடுக்ககத்தில் குடியிருக்கும் கட்டட வடிவமைப்பாளரான அந்தப் பெண். இது இப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வக்கிரம் ஏறிப்போனவர்களின் பிரதிநிதிகளாக கழிவகற்றும் காண்ட்ராக்ட் நிறுவன முதலாளி, அடுக்கக நிர்வாகி, அரசாங்க அதிகாரி.

மரணக்குழிகளான மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறக்கிவிடப்படுவது எப்போது முடிவுக்கு வரும்? அதற்கான வைராக்கியம் அரசுக்கு வருகிறபோதுதான். நீதிமன்றத்தில் இதைச் சொல்கிறார் வழக்குரைஞர். அப்படிப்பட்ட நவீன கழிவு வெளியேற்றத்திற்கான தொழில்நுட்பத்தோடு கூடிய திட்டத்தை வடிவமைப்பாளர் ஒப்படைக்க, அதற்கு நிறையச் செலவாகும் என்று கட்டுமான நிறுவன நிர்வாகம் அதை நிராகரிப்பது அந்த வைராக்கியத்தின் தேவையை உணர்த்துகிறது..

பார்த்திபனின் அம்மாவாக ரோகிணி நடிப்பில், சமூக அக்கறை உள்ள ஒரு திரைக் கலைஞர் என்ற பங்களிப்பும் கலந்து வெளிப்படுகிறது. சங்கத் தலைவராக வருகிற ஜி. செல்வா, மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தோடு இணைந்திருப்பவர். இவர்களது இந்தப் பங்களிப்பு நம்மை உண்மை வாழ்க்கைக்கு அருகில் கொண்டு செல்கிறது.

இவர்களோடு இணைந்து செயல்பட வருகிற பெண்ணாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். வழக்குரைஞராக வாதாடும் சண்முக ராஜன், ஒரு போராளிக்கு வாழ்க்கைப்பட்டதன் சுமையை ஏற்றுக்கொள்ளும் இணையராக சுபத்ரா ராபர்ட், சக போராளியாக பரிசல் செந்தில்நாதன், அதிகாரியாக அழகம் பெருமாள். அடுக்கக நிர்வாகியாக ஸ்ரீநாத், பார்த்திபனாக தமிழரசன்  உள்ளிட்டோரின் நடிப்பும் பார்வையாளர்களை உண்மைக்குப் பக்கத்தில் அழைத்துச் செல்லத் துணை செய்கிறது.

நாயகமான கதைக்குரிய திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் ஜே.பி. சாணக்யா, முத்துவேல். பின்னணியில் கருத்தைத் தாங்கி ஒலிக்கும் கபிலன் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ரமேஷ் மணி. இயக்குநர் தீபக் ஒளிப்பதிவாளராக கேமராவையும் இயக்கியிருக்கிறார்.

கற்பனை மூட்டத்திலும் மூழ்கிவிடாமல், வெறும் ஆவணப் பதிவாகவும் சுருங்கிவிடாமல்,  உள்ளதை உள்ளபடி பேச வந்திருக்கிறது இந்த படம். சம்பளத்தை வாங்காமல் போகமாட்டேன் என்று இந்திராணி அலுவலகத் தரையில்  அமர்ந்துகொள்ள, அவரை அப்புறப்படுத்தும் மூர்க்கங்கள் தொடர, அங்கிருக்கும் மற்ற தொழிலாளிகள் அவருக்கு ஆதரவாகத் தாங்களும் தரையில் அமர்கிறார்கள்.

உணர்ச்சிவசப்பட வைக்கிற இந்த இடமும் உள்ளதை உள்ளபடி பேசுவதுதான். இப்படிப்பட்ட காட்சிகளைக் கூடுதலாக இணைத்திருந்தால், சிந்தனைக்குரிய கதையோடு ரசனைக்குரிய சில காட்சிகளையும் சேர்த்திருந்தால் படத்தின் ஈர்ப்பு கூடுதலாகியிருக்குமே என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது.

ஆயினும் படம் கூறும் செய்தியின் கனம் அந்த எண்ணத்தை மறக்கடிக்கிறது.

சினிமா என்றால் அதில் கலாப்பூர்வமான வெளிப்பாடு வேண்டாமா? நீதிமன்ற விசாரணையின் தீர்ப்பு நாளில் நடக்கிற அந்தக் கடைசிக் காட்சி, சமுதாயத்தின் இறுகிப்போன உண்மை நடப்பை அழுத்தமாகக் காட்டுகிற கலை வெளிப்பாடுதான்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பானின் புதிய திட்டம்!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel