மலக்குழி மரணம் : விட்னஸ் படம் எப்படி?

சினிமா

தொழில் நுட்ப வளர்ச்சி திரைப்பட தயாரிப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அடித்தட்டு மக்கள் பிரச்சினைகளை வலைதள தொடராக, திரைப்படங்களாக தயாரிக்கவும் அதனை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டு சேர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

அந்த வாய்ப்பை வணிக நோக்கம் இன்றி தூய்மை தொழிலாளர்களின் மறுபக்கத்தை அவர்களின் வாழ்வியலை அவர்களுக்காக நாளும் போராடும் களப் போராளிகள் பங்கேற்று நடித்திருக்கும் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது விட்னஸ்.

நமது அன்றாட வாழ்வில் தெருக்கூட்டும், குப்பைகளை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களை பார்க்கிறோம்.

நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையை சமரசமின்றி பதிவு செய்து அதிர வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் தீபக்.

படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் மாணவன், திடீரென மலக்குழிக்குள் அடைப்பை எடுக்க இறங்கி மரணம் அடைகிறான். அவனுடைய மரணத்துக்குக் காரணம் சொகுசாக வாழ விரும்பும் மேட்டுக்குடி மக்கள்.

மகனின் எதிர்பாராத, திடீர் மரணத்தை ஏற்க இயலாத தாய், இடதுசாரி இயக்கத்தவருடன் இணைந்து தன் சக்திக்கும் மீறி நியாயம் கேட்டு இனி இதுபோன்றதொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதற்காக போராடுகிறார்.

இறுதியில் என்னவாகிறது? என்பதைச் பரபரப்புடன் சொல்கிறது விட்னஸ் படம்.

குப்பை கூட்டும் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் ரோகிணி. படம் நெடுக அவர் தவிக்கும் தவிப்பு படம் பார்க்கும் பார்வையாளனை பதற வைக்கிறது.

அவருக்கு துணையாக, உதவி செய்யும் இணையாக உயர் வகுப்பை சேர்ந்த நேர்மையான பாதையை விரும்புபவராக ஷ்ரத்தா ஸ்ரீநாத், படம் இயல்பாக நகர உதவுகிறார்.

அவருக்கும் அவர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்குமான வாக்குவாதங்கள் சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பு.

witness cinema review

பெத்துராஜ் தோழராக வரும் மத்திய சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் செல்வா, பரிசல் செந்தில்நாதன் உள்ளிட்ட நிஜ களப்போராளிகளைப் பயன்படுத்தி படத்தின் உண்மைத் தன்மையை வலுப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வக்கீலாக நடித்திருக்கும் சண்முகராஜன் வேடமும் நடிப்பும் சிறப்பு. அடித்தட்டு மக்களுக்கான ஆறுதல்.

அழகம் பெருமாள், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முதலாளித்துவத்தின் கோர முகங்களை தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளனுக்கு கடத்தியிருக்கிறார்கள்.

தினசரி அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடும் தோழர்களைத் தெரியும் அவர்களுக்கு உரமாக கண்ணுக்குத் தெரியாத போராளிகளாக இருக்கும் அவர்களுடைய மனைவியரின் பிரதிநிதியாக இந்தப்படத்தில் வரும் சுபத்ரா ராபர்ட், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கலங்க வைத்திருக்கிறார்.

ரமேஷ் தமிழ்மணியின் இசையில் கபிலனின் பாடல் வரிகள் திரைக்கதைக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

ஜே.பி.சாணக்யா மற்றும் முத்துவேல் ஆகியோரின் திரைக்கதை களநிலவரத்தை கச்சிதமாக சொல்ல உதவியிருக்கிறது. ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் தீபக்,

அடித்தட்டு மக்களை அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து படம் பிடித்தது போல் படமாக்கியிருக்கிறார்.

இந்திய அரசியலில் அரசு எந்திரம் பெரு முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலை செய்வதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தீர்ப்பு சொல்லும் இறுதிக்காட்சி அபாரம்.

சோனி லைவ் வலைதளத்தில் இத்திரைப்படம் இன்று (டிசம்பர் 9) வெளியாகியுள்ளது.

இராமானுஜம்

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்!

ஸ்டாலினுக்கு அசோக் வரதன் ஷெட்டி- உதயநிதிக்கு ககன் தீப் சிங் பேடி: ஆயத்தமாகும் அமைச்சகப் பணிகள்!

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *