”அண்ணன் டெல்லி கணேஷ் இறப்புச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்” என நடிகர் வடிவேலு உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக கடந்த 9ஆம் தேதி இரவு காலமானார்.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தவெக தலைவரும், நடிகருமான விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி கணேஷுடன் படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் வடிவேலு உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி கணேஷ் அண்ணன்தான் காரணம்!
அவர், “எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசனும் ஒருவர். அதிக படங்களில் ஒன்றிணைந்து நடிக்க முடியவில்லை என்றாலும் சீனா தானா, மிடில் கிளாஸ் மாதவன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நாங்கள் இணைந்து நடித்தது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
‘நேசம் புதுசு’ படத்தில் வரும் ‘என்ன கையை பிடிச்சு இழுத்தியா?’ என்ற, காலத்திற்கும் நிலைத்து நிற்கும் காமெடிக்கு டெல்லி கணேஷ் அண்ணன்தான் காரணம்.
ஒருநாள் அவரை சந்தித்தபோது, அவர் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூறினார். ‘நேசம் புதுசு’ படத்தில் இதை பயன்படுத்தலாம் என நினைத்து, உடனே அவருக்கு போன் செய்து அனுமதி கேட்டேன். அன்போடு என்னை கண்டித்துவிட்டு உடனே அனுமதி கொடுத்துவிட்டார். அவர் அனுமதிக்கவில்லை என்றால் இன்று அந்த காமெடியே இருந்திருக்காது. இந்நேரத்தில் அதை நினைவுகூர பெருமையுடன் கடமைப்பட்டுள்ளேன்.
நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை!
அவரின் யதார்த்தமான நடிப்பையும், அன்பையும் நான் இழந்துவிட்டேன். நாங்கள் இணைந்து பணியாற்றியதும், அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளையும் என்னால் மறக்கவே முடியாது.
அண்ணன் டெல்லி கணேஷ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், எதார்த்தத்தின் உச்சமாய் திரையில் வெளிப்படும். அவரிடம் நீங்கள் அற்புதமான குணச்சித்திர நடிகர் என்பேன், அவரோ எனக்கு நடிக்கவே தெரியாது என்பார். அவரை நினைக்கையில் என்னை அறியாமலேயே அவரது எதார்த்தத்திற்குள் நானும் நுழைகிறேன்.
டெல்லி கணேஷனாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அற்புதமான நடிகனை நாம் இழந்துவிட்டோம். பகத் பாசிலுடன் நான் இணைந்து நடிக்கும் மாரீசன் படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் நடைபெற்று வருவதால் என்னால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என வடிவேலு தெரிவித்தார்.
இறுதி அஞ்சலி!
சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களும், விசிக தலைவர் திருமாளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் நேற்று முதல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு டெல்லி கணேஷ் உடல் எடுத்து செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsSA : இந்திய அணி போராடி தோல்வி… காரணம் என்ன?
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடி – யில் பணி!