கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் அதிகமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகாமல் நீண்ட காலம் முடங்கி இருந்த அஜீத்குமாரின் வரலாறு, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் போன்ற படங்களின் வரிசையில் துருவ நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தது.
தற்போது வெளியீட்டு தேதியை அறிவித்த தயாரிப்பு தரப்பு, அதை உறுதிப்படுத்தும் விதமாக துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டுள்ளது. அதற்கு விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் இம்முறையாவது திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற பயமும் திரையரங்குகள் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.
அதுகுறித்துத் திரையுலகை சார்ந்த பைனான்சியர்கள் வட்டாரத்தில் கேட்ட போது,
”இப்படம் மீது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பதினைந்து கோடி மற்றும் மற்ற கடன்கள் சுமார் முப்பது கோடி ஆகியவற்றுக்கான வட்டி எல்லாமுமாக சேர்த்து சுமார் ஐம்பது கோடி ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும்.
துருவ நட்சத்திரம் படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உள்ளிட்ட வியாபாரம் இதுவரை முடிவடையவில்லை.
படத்தின் மொத்த பட்ஜெட்டுக்கு இணையாக 40 கோடி ரூபாய் என்று அதிகபட்ச விலையை தயாரிப்பாளர் கூறியதால் வியாபாரம் முடிவடையவில்லை.
இந்த நிலையில் படத்தின் முன்னோட்டத்துக்கு தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து படத்தின் ஓடிடி வியாபார மதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு கிடைத்துவிட்டால், அத்தொகையை வைத்து பெரும்பகுதிக் கடனை அடைத்துவிடலாம்.
மீதமுள்ள, தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகைக்கு நான் பொறுப்பேற்றுகொள்கிறேன் என படத்தின் இயக்குநர் கவுதம்மேனன் ஒப்புதல் கடிதம் கொடுத்திருக்கிறார்.
கடன் கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனமும் அதை ஏற்றுக்கொள்வதாக உறுதிகொடுத்திருக்கிறதாம். அதேநேரம் டிஜிட்டல் வியாபாரமும் நல்லபடியாக நடந்துவிடும் என்பதால் இம்முறை படம் நிச்சயம் வெளியாகிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி: அமைச்சர் ரகுபதி
பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநரிடம் விளக்கம் அளித்த சென்னை கமிஷனர்!