போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு டெல்லியில் நாளை (ஏப்ரல் 2) நேரில் ஆஜராகவுள்ளதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தி.மு.கவில் இருந்து ஜாபர் நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், தலைமறைவான அவரை கடந்த மார்ச் 9ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நண்பர்களான அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நாளை ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரம்ஜானுக்கு பிறகு நான் நேரில் ஆஜராகிறேன் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு, இயக்குநர் அமீர் மெயில் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவகாசம் கேட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறியுள்ள இயக்குநர் அமீர், தற்போது தான் டெல்லியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் ”நான் தற்போது டெல்லியில் தான் உள்ளேன். ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் எந்தவித அவகாசமும் கேட்கவில்லை. கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் எனது தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையையும் எடுத்துக் கூறுவேன், 100 சதவீதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்” என அமீர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அருணாச்சலில் அத்துமீறும் சீனா : ஜெய்சங்கர் விளக்கம்!
உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி!