ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 30 வரை 160 நேரடி தமிழ் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 14 தமிழ் படங்கள் வெளியானது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், கார்த்தி, விக்ரம் போன்ற நடிகர்கள் நடித்த படங்களுக்கோ, பிரபலமான இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு, ஆர்ப்பாட்டமான உற்சாக துள்ளல், எல்லா இடங்களிலும் அந்தப் படம், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் பற்றிய உரையாடல்கள் கடந்த 10 நாட்களாக இடையறாது நடந்து வருகிறது.
கனா’, ‘எப்ஐஆர்’ படங்களின், இணை இயக்குநரும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள லப்பர் பந்து படம்தான் இதனை நிகழ்த்தி வருகிறது.
கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார்’, மற்றும் ‘ரன்பேபி ரன்’, தண்டட்டி போன்ற படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
11 நாட்களில் ரூ. 20 கோடி வசூல்!
செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அபரிமிதமான வரவேற்பை பெற்றது.
முதல் நாளில் லட்சம் என்ற அளவில் தொடங்கிய வசூல் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, வார இறுதியில் படத்துக்கு ஹவுஸ் ஃபுல் என்ற அளவில் புக்கிங் இருந்தது. கடந்த 11 நாட்களில் திரையரங்குகள் மூலமாக சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது லப்பர் பந்து.
சுமார் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் இந்தளவு வெற்றி பெற காரணம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனசெல்வன் படத்தில் இடம்பெற்ற பொட்டு வச்ச தங்க குடம் பாடலும், விஜயகாந்த்தும் சரியான முறையில் சரியான இடத்தில் பயன்படுத்தப் பட்டு இருப்பதே காரணம் என்பது பெரும்பான்மையான பார்வையாளர்கள், விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.
அவரை கொண்டாட வைக்க வேண்டும் என்று நினைத்தேன்!
‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் படத்தின் பாடல், புகைப்படங்கள் என வைத்து கொண்டாடியது ஏன் என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
அதில், “கடந்த 7-8 ஆண்டுகளாக விஜயகாந்த் சாருக்கு சமூக வலைதளத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்போம். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதில் இருப்பவரை எப்படி கொண்டாட வேண்டும் என நினைத்தேனோ, அதை மட்டும் செய்ய நினைத்தேன். அவ்வளவு தான்.
ஒரு படம் பண்றேன், அதில் விஜயகாந்த் சார் இருப்பார், ‘பொட்டு வச்ச’ பாடல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அவை அனைத்தையும் வைத்து ஒரு வாரமாவது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டை உருவாக்க வேண்டும் என யோசித்தேன்.
அவை அனைத்துமே ட்ரெண்ட்டிற்கு தான். ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டது, அதை அனைவரும் பற்றிக் கொண்டார்கள். அதே ட்ரெண்ட்டை வைத்து மீண்டும் அவரை கொண்டாட வைக்க வேண்டும் என நினைத்து செய்தேன்.
அதுமட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தை கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்தக் காட்சிகள் அனைத்தையும் வைத்தேன். ஏனென்றால் நான் தீவிரமான விஜயகாந்த் ரசிகன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
விஜயகாந்த் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நேரடி வாக்குவாதம் செய்ததுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்களை நாக்கை துருத்தி கை நீட்டி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பானது.
அதன் பின்னர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானார். அதை தான் மறைமுகமாக கடந்த 7 – 8 ஆண்டுகளாக என குறிப்பிடுகிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள், தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், அவர் இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அந்தப் பாடலின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் வேட்டையன் டிரைலர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : தேங்காய் வெல்ல லட்டு
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!
பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!