‘ நல்ல கதை இல்லையெனில் வேலை வீண் ‘- தமிழில் நடிக்காதது குறித்து சமந்தா சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

நல்ல கதை இல்லையெனில் நடிப்பது வீணாகி விடுமென்று நடிகை சமந்தா தமிழ்படங்களில் நடிக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூஸ் 18 சேனலுக்கு சமந்தா பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ்ப்படங்களில் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

தனது பேட்டியில் சமந்தா கூறியதாவது, “நான் எனது வாழ்க்கையில் முக்கிய கட்டத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொரு படமும் கடைசி படம் போல நினைக்க வேண்டும். நான் நடிக்க தேர்வு செய்யும் படங்கள் அப்படி ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தவில்லை என்றால் 100 சதவிகிதம் நான் அப்படி உணரவில்லை என்றால் நான் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. தற்போது இயக்குநர் ராஜ் அண்டு டிகே உடன் இணைந்து ரக்த் பிரமாண்ட் என்ற நெட் சீரிசில் நடிக்கிறேன்.

தி பேமிலி மேன் படத்தின் மூலம் இதற்கு முன் நான் செய்யாத ஒன்றை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சிட்டாடல், ஹனி பனி போன்ற தொடர்களில் நடித்தது சவாலாக இருந்தது. ராஜ் அண்டு டிகே இருவரும்தான் எனக்கு சவால் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு நடிகையாக மெனக்கெட்டு நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவேன். அப்படியில்லையென்றால், ஒவ்வொரு நாளும் நடிக்க செல்வதே வீணாகி விடும். அதனால், நான் நடிக்கக்கூடிய கதையை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சமந்தா தெலுங்கு படங்களான சாகுந்தலம் , குஷி போன்ற படங்களில் நடித்தார்.இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. தமிழில் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு, தமிழ்படம் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. இப்போது, சமந்தா பேசியிருப்பதை பார்த்தால், அவரை வைத்து படத்தை இயக்க தமிழ் இயக்குநர்களுக்கு திறமை இல்லையா? என்கிற ரீதியில் அல்லவா இருக்கிறது என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share