why leo trailer released on sun tv you tube

லியோ டிரைலர்: சன் தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் வெளியானது ஏன்?

சினிமா

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்களின் கவனம் முழுவதும் லியோ படத்தின் மீது குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிகமான குடும்ப பார்வையாளர்களை கொண்டுள்ள முதன்மையான நடிகர்களாக விஜய், ரஜினிகாந்த் இருவரும் உள்ளனர்.

சமீப காலங்களாக இவர்கள் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஆபாச வசனங்களும், வன்முறை காட்சிகளும் நிரம்பியதாக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடத்தப்படும். அந்த வாரத்தில், அந்த நாளில் பிற முன்னணி நடிகர்கள் பற்றிய செய்திகள், பட அறிவிப்புகள் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் தவிர்க்கப்படும்.

ஆனால் லியோ படத்தின் டிரைலர் வெளியீடு தனியார் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் வெளியாகிறது அதன் மீதான கவனத்தை திசை திருப்ப முன்னணி நடிகர்கள் தங்களை பற்றிய செய்திகளை வெவ்வேறு வடிவங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியிட வைத்து லியோ டிரைலர் பற்றிய விவாதங்களில் தங்கள் ரசிகர்கள் ஈடுபடுவதை தவிர்க்க செய்தனர். லியோ டிரைலர் சன் தொலைக்காட்சி வலைத்தளத்தில் வெளியானது ஏன், டிரைலர் பொது தளத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என பார்க்கலாம்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படம், அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் பாடலாக ‘நான் ரெடி’ என்ற பாடலை படக் குழு வெளியிட்டது. லியோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் சன் தொலைக்காட்சி ஆகியன அக்டோபர் 4 அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், அக்டோபர் 5 அன்று சன் தொலைக்காட்சியின் வலைத் தளத்தில் லியோ முன்னோட்டம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

இதைப்பார்த்ததும், லியோ படத்தின் முன்னோட்டத்தை சன் தொலைக்காட்சியின் வலைத் தளத்தில் ஏன் வெளியிடவேண்டும்? என்கிற கேள்வி குறிப்பாக சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

அதற்குக் காரணம் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் 75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதனால் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்த இயலவில்லை. அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய், சன் தொலைக்காட்சிக்கு படம் சம்பந்தமாக பிரத்தியேகமாக ஒரு பேட்டி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு விஜய் உடன்படவில்லை என கூறப்படுகிறது.

எனவேதான், லியோ படத்தின் முன்னோட்டத்தை ஒளிபரப்பும் உரிமையை சன் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டி வந்ததாம். லியோ படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது.

வெளியான ஐந்து நிமிடங்களில் பத்து இலட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்று படக்குழு அறிவித்தது. அதேசமயம், அந்த முன்னோட்டத்துக்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. முன்னோட்டத்தில் அதிகபட்ச வன்முறை, தெறிக்கும் இரத்தம், கெட்டவார்த்தை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இன்னொருபக்கம், இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்கிற ஆங்கிலப் படத்தின் தமிழ் உல்டா என்பது உறுதியாகிவிட்டது என்று சொல்லி அப்படத்தின் காட்சிகளையும் லியோ முன்னோட்டக்காட்சிகளையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர் இன்னொரு அட்லி என கிண்டல் செய்து வருகின்றனர்.

இவை ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் லியோ முன்னோட்டம் வந்த அதேநேரத்தில், அஜீத்குமாரின் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணம் தொடர்பாக மோட்டார் வாகன நிறுவனம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.

விஜய்யின் லியோ பட முன்னோட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்களில் கலந்து கொள்ளாமல் தம்ரசிகர்களைத் தம்மை நோக்கித் திருப்பும் உத்திதான் இந்தச் செய்திக் குறிப்பு என கூறப்படுகிறது.

அதே போன்று நடிகர் சூர்யா தற்போது நடிக்கும் கங்குவா படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு நேற்று பிறந்தநாள். அவரும் லியோ முன்னோட்டம் வெளியான நேரத்திலேயே, சூர்யா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோரோடு அவர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, மிகவும் நினைவுகூரத்தக்கப் பிறந்தநாள் இன்று எனப் பதிவிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்புகைப்படங்களைப் பகிர்ந்தனர். சமூக ஊடகங்களே நடிகர்களின் வலிமையைத் தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டபடியால் ஒரு நடிகரின் செய்தி வரும்போது அதை மடைமாற்ற அல்லது மறக்கடிக்க இன்னொரு நடிகர் ஏதாவதொன்றைச் செய்கிற போக்கு தொடங்கியுள்ளது. அதற்கு சான்றாக நேற்றைய சினிமா நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அஜித்தின் “விடாமுயற்சி” ஷூட்டிங் தொடங்கியது!

சட்ட விரோதமாக விளம்பர பேனர் வைத்தால் கிரிமினல் வழக்கு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *