அரசியலில் இருந்து தான் விலகியது ஏன் என்பதை இன்று (மார்ச் 11) நடைபெற்ற அறக்கட்டளை விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளையின் 25வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் “ பள்ளி வசதி இல்லாத ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நமது முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு . விசாகப்பட்டினத்தில் உயர்கல்வி கற்று, அங்கிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பாஜக கட்சியில் தன்னை படிப்படியாக முன்னேற்றி நாட்டின் துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு உயர்ந்தார். அவர் மீது சிறு குற்றச்சாட்டு கூட இதுவரை யாரும் வைத்தது இல்லை. பல்வேறு கட்சியினராலும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்.” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ”மருத்துவர் ரவிச்சந்திரன் ஒரு மருத்துவர் என்பதை தாண்டி எனக்கு ஒரு சிறந்த நண்பர். 2010ம் ஆண்டு முதல் அவரிடம் நான் சிகிச்சை பெற்று வருகிறேன். அப்போது எனக்கு 60 சதவீத சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் தியானம் மூலமாக எனக்கு சிகிச்சை அளித்தார்.
பின்னர் அது சரிபட்டு வராது என்பதை அறிந்து, எனது உடல்நிலையை விளக்கி கூறி, அவரது பரிந்துரையின் பேரில் நான் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பெற பெரும் உதவி செய்தார்.” என்றார்.
தொடர்ந்து அவர், ”அதன்பின்னர் இரண்டாம் கொரோனா அலைக்கு முந்தைய காலத்தில் நான் அரசியலில் நுழைவதாக மக்களிடம் உறுதி அளித்துவிட்டேன். அப்போது முன்வைத்த காலை பின் வைக்க முடியாது என்ற நிலை.
மருத்துவர் ரவிச்சந்திரனிடம் வந்து என்னுடைய சூழ்நிலையைக் கூறினேன். அவர் என்னிடம், ’அரசியலில் ஈடுபடுவது உங்களது தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிட முடியாது. ஆனால் உங்களது கட்சி தொண்டர்களை நீங்கள் சந்திக்க விரும்பினால் 10 அடி தூரத்தில் நின்று தான் பேச வேண்டும். வெளியில் சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்’ என்று பல்வேறு நிபந்தனகள் போட்டுவிட்டார்.
ஆனால் எனது மக்களுக்கு மத்தியில் சென்றுவிட்டால் இது எதையும் நான் பின்பற்ற முடியாது. இவற்றை பின்பற்றாவிட்டால் அது எனது உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. இதை சொன்னால், ’ரஜினிகாந்த் அரசியலில் பயந்துவிட்டார் என்று பேசுவார்களே’ என்று நினைத்தேன்.
அப்போது மருத்துவரும், நண்பருமான ரவிச்சந்திரன் கொடுத்த உறுதியான ஆலோசனைக்கு பிறகு தான், நான் தைரியமாக ஊடகத்திடம் ’அரசியலுக்கு வரவில்லை’ என்பதை தெரிவித்தேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
போராட்டத்தை முடக்க கடலூரில் குவிந்த காவல்துறை: அன்புமணி வருத்தம்
சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!