நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றிய ஆவணப்படத்தில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அவர் இந்து மதத்தை தழுவிய விஷயங்கள் பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர். டயனா மரியம் குரியன் என்பதுதான் இயற்பெயர் . சிரியன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை குரியன் விமானப்படையில் பணிபுரிந்ததால் சிறு வயதில் இருந்தே பல நகரங்களிலும் பள்ளிகளில் நயன்தாரா படித்துள்ளார்.
பின்னர், 2003 ஆம் ஆண்டு’ மனசின்கரை’ என்ற மலையாள படத்தில் நயன்தாரா அறிமுகமானார். தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு தமிழில்’ ஐயா’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு, தமிழில் நயன்தாரா கொடிக்கட்டி பறக்க தொடங்கினார். சினிமாவின் முன்னணியில் இருந்த போது, சிலருடன் நயன்தாரா காதலில் இருந்ததாக தகவல் உண்டு.
பிரபல நடன நடிகர் ஒருவருடன் நயன்தாரா காதலில் இருந்ததாக சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஆரிய சமாஜத்துக்கு திடீரென்று நயன்தாரா சென்றார். அங்கே, தன்னை இந்துவாக மதம் மாற்றிக் கொண்டார்.
நயன்தாரா திருமணத்துக்கு தயாராவதால், தன்னை இந்து மதத்துக்கு மாற்றிக் கொண்டதாக சினிமா உலகில் பேசப்பட்டது. பின்னர், அந்த காதல் முறிந்தும் போய் விட்டது. தொடர்ந்து , 2022 ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன்தாரா இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா தாயாரும் இந்து மதத்தின் மீது அபிமானம் கொண்டவர்தான். நயன்தாராவின் ஆவணப்படத்தில் அவரின் தாயார் ஒமணா குரியன் கூறுகையில், ‘நானும் செட்டிக்குளக்காரா அம்மாவை வணங்குவேன். இயேசுவையும் வணங்குவேன். செட்டிக்குளக்காரா அம்மா பலரிடம் இருந்து என் மகளை மீட்டு என்னிடத்தில் கொடுத்துள்ளார். எங்களை விட்டு நிரந்தரமாக அவள் போய் விடுவார் என்று நினைத்தேன். இக்கட்டான தருணங்களில் நான் வணங்கிய கடவுள்கள்தான் எனது மகளுக்கு ஆதரவாக நின்று பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிவை கொடுத்துள்ளனர்’ என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்” – திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!