தனுஷின் புதிய படம்: ஜீ ஸ்டுடியோவிடம் கொடுத்தது ஏன்?

Published On:

| By Kavi

தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள், பெருமுதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 9, 2023 அன்று முன்னிரவு 7.30 மணிக்கு  ஜீ ஸ்டுடியோஸ் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.

அதில், “தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (ZEEStudios) மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. மேலும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

Why Dhanushs new film was given to Zee Studio

இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், இயக்குநர் மாரிசெல்வராஜ் – தனுஷ் கூட்டணிக்குப் பெரும் வரவேற்பும் வுண்டர்பார் நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியதற்குப் பாராட்டும், இந்நிறுவனம் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஜீ ஸ்டுடியோஸ் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது என்றாலே, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பணம் போடுகிறது வுண்டர்பார் நிறுவனம் நிர்வாகம் செய்யும் என்பதுதான் பொருள். இதனால் இப்படத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும்பங்கை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் அடையும். இதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.

இக்கூட்டணியில் உருவாகும் படம், படைப்பு ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெறும் என்பதோடு வியாபார ரீதியாகவும் லாபம் ஈட்டும் என்பதில் ஐய்யமில்லை. அப்படி ஓர் உறுதி இருக்கும் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் கேள்வி.

படம் எடுக்கத் தேவையான பணத்தை முதலில் போட தனுஷால் இயலாது என்பதால் ஜீ ஸ்டுடியோஸை நாடியுள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில், இந்தப் படத்தில் பெரிய செலவே கதாநாயகன், இயக்குநர் இருவரின் சம்பளம்தான். தனுஷே தயாரிப்பதால் அந்தச் சம்பளத்தை வியாபாரத்தின்போது எடுத்துக் கொண்டிருக்கலாம். இயக்குநர் மற்றும் மற்றவர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவுகள் ஆகியனவற்றிற்குப் பணம் தேவையெனில் அதையும் உடனே முன்பணமாகத் தர வியாபாரிகள் தயாராக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தனுஷ் ஏன் ஜீ ஸ்டுடியோவிடம் கொடுத்தார்?” என்று கேட்கிறார்கள்.

அவர் படம் அதை யாரிடம் கொடுப்பது என்பது அவருடைய விருப்பம்தானே? என்ற கேள்விக்கு,

“தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள், பெருமுதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.

இவர்கள் வளரும் வரை எங்களை போன்ற தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறது. வளர்ந்து, வியாபார முக்கியத்துவமுள்ள நடிகனாக மாறிய பின்பு பெருமுதலாளிகளுக்கு கால்ஷீட் கொடுப்பார்கள். 

சாதாரண தயாரிப்பாளர்களை கண்டுகொள்ளமாட்டார்கள். இப்போது பன்னாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்ஷீட் தருகின்றனர்.

ஏற்கெனவே முத்தையா- ஆர்யா கூட்டணியில் உருவாகும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தயாரிப்பில் இணைந்துள்ள ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், சொன்னபடி பணம் தராமல் இழுத்தடித்துவருகிறது. ஆனாலும் கடைசியில் கிடைக்கவிருக்கும் இலாபத்தில் மட்டும் ஒரு பைசா பாக்கியில்லாமல் அவர்கள் பங்கைப் பெற்றுக்கொள்வார்கள்.

இப்படியிருக்கும்போது தனுஷ் ஏன் அதற்குப் பலியாகவேண்டும்? அவரை வைத்து ஏற்கனவே படம் தயாரித்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு இந்த வாய்ப்பை தரலாமே என்பதுதான் எங்கள் கேள்வி என்கிறார்கள் ஒரு தரப்பினர்

இன்னொரு தரப்பினரோ தனுஷ் இனிமேல் சொந்தமாக படங்களை தயாரிப்பது இல்லை என்கிற முடிவு எடுத்து தான் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடன்கள் அனைத்தையும் கொடுத்துமுடித்தார். 

போயஸ் கார்டனின் புதிய வீடு அதனால் ஏற்பட்ட கடன் தேவைக்காக சம்பளத்தை மொத்தமாக தருகின்ற நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார். நடிகர்களை பொறுத்தவரை நம் நாட்டு தயாரிப்பாளர்கள், பன்னாட்டுகார்ப்பரேட் நிறுவனம் என பிரித்து பார்க்கிறார்கள். அதன் எதிர்கால ஆபத்தை பற்றியெல்லாம் சிந்திக்கவோ, கவலைப்படவோ மாட்டார்கள்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் வாழ்பவர்கள். அதனால்தான் இங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த முடிகிறது அதற்கு தனுஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?” என கேள்வி எழுப்பினர்.

இராமானுஜம்

அம்பேத்கர் பிறந்தநாள் விடுமுறை : எம்.பி.ரவிக்குமார் கேள்வி!

கடைசி பந்து… த்ரில் வெற்றி: பெங்களூருவை கலங்கடித்த லக்னோ!

Comments are closed.