தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவா இன்று தேனியில் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த ஹேமா கமிட்டி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். இதையடுத்து, “எனக்கு இந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாது” என்று அவர் பதில் அளித்தார். தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறலாமா ? என நிருபர்கள் மீண்டும் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜீவா, “இந்த விவகாரம் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். அது தவறான விஷயம் . நான் நீண்ட நாள் கழித்து தேனிக்கு வந்திருக்கிறேன். நல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த மாதிரியான கேள்விகள் கேட்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனாலும் , தொடர்ந்து பத்திரிகையாளர் அதே கேள்வியை கேட்கவே, நடிகர் ஜீவா கோபமடைந்தார்.
கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து “உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய்?”என்று கோபத்துடன் ஜீவா திட்டினார். பதிலுக்கு பத்திரிகையாளரும் எப்படி அறிவு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று கூறி பிரச்சனை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பத்திரிகையாளர்களுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். ஜீவாவை போல நடிகர் ரஜினிகாந்தும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சம்பவங்கள், ஹேமா கமிட்டி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கங்கனாவின் ‘எமெர்ஜென்சி’ வெளியாகுமா?
சென்னையா? சான் பிரான்சிஸ்கோவா? : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ஸ்டாலின் பேச்சு!