தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குவது யார் யார்?

சினிமா

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய சங்கங்கள் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 1978 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் ஆதரவுடன் தொடங்கப்பட்ட” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” தான் அதிகாரம் மிக்க அமைப்பாக இருந்து வந்தது.

இன்றைய கால சூழலுக்கு ஏற்ப சங்க நடவடிக்கைகளை மாற்ற முயற்சித்தாலும், அதனை அமுல்படுத்தவிடாமல் ஒரு கூட்டம் தடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

எப்போதோ ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட தயாரிப்பாளர்கள் படத்தயாரிப்பை கைவிட்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை இருக்கும். தற்போதைய நிலை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை, அவர்கள் தான் இதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ எனும் பெயரில் அமைப்பை தொடங்கி தனியாக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இயங்கி வருகிறார்கள்.

இருந்த போதிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் தலைமை அமைப்பாகவும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சங்கமாகவும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 26.03.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது இச்சங்கத்தின் கெளரவ செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.

அதனால் தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் புதிய தேர்தல் தேதியை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளனர். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக அணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி ராமசாமியும் இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு லைகா தலைமை நிர்வாகி தமிழ்க்குமரன், மற்றும் ஏ.ஜி.எஸ். அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும், கௌரவ செயலாளர்களாக ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோரும் பொருளாளராக தற்போது பதவி வகித்து வரும் சந்திரபிரகாஷ் ஜெயின் மீண்டும் போட்டியிடவிருக்கிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சௌந்திரபாண்டியன் அல்லது ஒய்நாட் சசியை நிற்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

மற்றொரு அணி சார்பில் தற்போது கௌரவ செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் இரண்டு கௌரவசெயலாளர் பதவிக்கு தேனப்பன், சிங்காரவடிவேலன், இரண்டு துணைத்தலைவர் பதவிக்கு மைக்கேல் ராயப்பன், விடியல்ராஜு பொருளாளர் பதவிக்கு கமீலா நாசர் ஆகியோர் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மன்னன் ஒருங்கிணைக்கும் அணியில் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரில் ஒருவரை போட்டியிட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவருமே மறுத்து விட்டதால் வேறுவழியின்றி கெளரவ செயலாளராக இருக்கும் மன்னன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் என தொடர்ச்சியாக போட்டியிட்டு செயலாளராகவும், பொருளாளராகவும் பதவி வகித்த ராதா கிருஷ்ணன், முரளி ராமசாமி தலைமையிலான அணிக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மன்னன் தலைமையிலான அணி வேட்பாளர்களில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அணிகள் உறுதியாகும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், லைகா நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுவதால் முக்கியத்துவம் மிக்க தேர்தலாக இந்த தேர்தல் மாறியுள்ளது.

இராமானுஜம்

பொட்டு வைக்க மாட்டியா?: பொது இடத்தில் பெண்ணிடம் கத்திய பாஜக எம்.பி.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *