கடந்த மூன்று நாட்களில் மட்டும் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ.23 கோடி, அயலான் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளதாக திரையரங்கு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, அருண்விஜய் நடிப்பில் ‘சேப்டர் மிஷன் – 1’ ஆகிய மூன்று நேரடித் தமிழ் படங்கள் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.
அதேபோல, விஜய்சேதுபதி, ராதிகா, சண்முகராஜேஷ்வரன் ஆகிய தமிழ் நடிகர், நடிகைகள் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஏ சென்டர்களில் மட்டும் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், போஸ் வெங்கட், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வன்முறை காட்சிகளும், துப்பாக்கிச் சண்டைகளும் நிறைந்திருந்தது.
விக்ரம் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது. அதன் பின்னர் தமிழில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்களில் அழுத்தமான திரைக்கதையைக் காட்டிலும், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், இடைவிடாதத் துப்பாக்கி தோட்டாக்களின் பாய்ச்சல் என படங்களில் பொங்கி வழிகிறது.
அதன் தொடர்ச்சியாக 2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் வன்முறைக் காட்சிகள் எதிரொலிக்கிறது என சினிமா விமர்சகர்கள் மட்டுமல்லாமல், திரையரங்க வட்டாரத்திலும் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன் ஆகிய இரண்டு படங்களையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தாலும், அந்தப் படங்களில் சாதிய ஒடுக்கு முறை, கல்வி மறுப்பு என சமூக நீதியே மையக்கருவாக இருந்தது.
துப்பாக்கித் தோட்டாக்கள் சத்தம் இல்லாத, சண்டைக் காட்சிகள் திரைக்கதை போக்கிற்கு ஏற்ப இருந்தது. குடும்பங்கள் திரையரங்கை நோக்கி வந்தனர். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றிபெற்றது.
கேப்டன் மில்லர் படத்திலும் முந்தைய அசுரன், கர்ணன் படங்களில் இயக்குநர்கள் வெற்றிமாறனும், மாரிசெல்வராஜூம் பேசிய அதே சமூகநீதி கருத்தியலை வெடிக்கும் துப்பாக்கித் தோட்டா சத்தத்திற்கு ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
திரைக்கதை, காட்சிப்படுத்தப்பட்ட விதம், தனுஷ் நடிப்புக்காக கேப்டன் மில்லர் திரைப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதற்கான பலன் கிடைக்குமா என்ற கேள்விகளுடன் திரையரங்குகளை அணுகியபோது, “ஆக்க்ஷன் பிரியர்களுக்கான படமிது, பொங்கலுக்கு முன்னரே வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் 12,13,14 ஆகிய மூன்று நாட்களில் பார்த்துவிட்டார்கள்.
இன்று முதல் பொதுவான ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். அதனைப் பொறுத்தே படம் வெற்றியா, சூப்பர்ஹிட்டா என்பதை தீர்மானிக்க முடியும்.
ஜனவரி 15, 16, 17 மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் மோசமான வசூல் இருக்காது. ஏற்கனவே கடந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் சுமார் 23 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது கேப்டன் மில்லர்” என்று தெரிவித்தனர்.
அயலான் வசூல் நிலவரம்!
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நண்பரும், அவரது கால்ஷீட் மேலாளருமான ராஜா, ஏழு வருடங்களுக்கு முன்பு தயாரிக்க தொடங்கிய படம் அயலான்.
சிவகார்த்திகேயன் விருப்பப்படி ராஜா தயாரித்த ரெமோ, சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப வசூலை குவிக்கவில்லை.
இதனால் கடன் ஏற்பட்டது. பைனான்ஸ் கிடைக்காததால் ராஜா தொடங்கிய அயலான் படத்தை தயாரிக்கும் பொறுப்பை, கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு மாற்றினார் சிவகார்த்திகேயன்.
அப்படியும் படப்பிடிப்பு, பணப்பிரச்சினை, கிராபிக்ஸ், தொழில்நுட்ப தாமதம் காரணமாக நீண்ட போராட்டங்களுக்கு பின் இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சர்வதேச தரத்திலான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்துள்ளன.
படத்தின் உள்ளடக்கம், வசூல் பற்றி திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, “பொங்கலுக்கு வெளியான அயலான், கேப்டன் மில்லர், சேப்டர் மிஷன் – 1 ஆகிய மூன்று படங்களும் சொதப்பவில்லை. அதே நேரம் பெரும் வெற்றியையும் பெறவில்லை. அவரவர் வணிக மதிப்புக்கேற்ற வசூல் கடந்த மூன்று நாட்களில் கிடைத்துள்ளது.
பெரும்பான்மையான குடும்பங்களின் முதல் தேர்வாக அயலான் இடம்பெற்றுள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது காட்சிகளும், திரைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்து வரும் பொங்கல் விடுமுறை, வார இறுதி நாட்களில் அயலான் படத்தின் வசூல் அபரிமிதமாக இருக்கும். கேப்டன் மில்லருக்கு இணையான வசூலை எட்டிப் பிடிப்பதுடன் அதனையும் கடந்து செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
கேப்டன் மில்லர் மூன்று நாட்களில் 23 கோடி ரூபாய் என்றால், அயலான் 19 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. அடுத்துவரும் மூன்று நாட்களும் இரண்டு படங்களுக்கான வசூலில் கடுமையான போட்டி இருக்கும் என்கின்றனர்” திரையரங்கு வட்டாரத்தில்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்: எடப்பாடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மீண்டும் முதல் பரிசு நோக்கி முன்னேறும் சாம்பியன்!