தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஏப்ரல் 30) சென்னையில் நடைபெற உள்ளது. சங்க தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள்.
தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வாக்குரிமை உள்ள தயாரிப்பாளர்கள், அவருக்கு வேண்டியவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.
அதே நிலவரம் இந்த தேர்தலிலும் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் நீக்க மற நிறைந்திருக்கிறது. இந்த முறை சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளனர். ஏற்கனவே சங்க பொறுப்புகளில் இருந்தவர்களே மீண்டும் நிர்வாக பொறுப்புகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
அவர்களை நோக்கி சுயேட்சை வேட்பாளர்கள் எழுப்பும் கேள்விகள், பிரச்சாரங்கள் தயாரிப்பாளர்களின் கவனத்தைப் பெறுவதுடன், அவர்களுக்கு ஒரு முறை வாக்களிக்கலாமே என்கிற விவாதத்தை எழுப்பியுள்ளது. கடந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணியில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிங்காரவடிவேலன் தற்போது சுயேட்சையாக பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
முரளி ராமசாமி அணி சார்பாக தற்போதைய பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மன்னன் அணி சார்பாக லிப்ரா ரவீந்திரன், ஓயாத அலைகள் அணி சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நண்பரும் றெக்கை பட தயாரிப்பாளருமான கணேஷ், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சந்திர பிரகாஷ் ஜெயின் Vs லிப்ரா ரவீந்திரன் என நிலவி வந்த போட்டி, நேற்றை தினம் சிங்காரவடிவேலன் வெளியிட்ட ஆடியோ பதிவு தேர்தல் களத்தின் போக்கையே மாற்றியிருக்கிறது. எல்லோரும் அரசாங்க உதவி, நட்சத்திர கலைவிழா, சிறு முதலீட்டு படங்களுக்கு அரசு மானியம், அரசு மூலம் வீட்டு வசதி சலுகைகள் என தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்டு வந்தனர்.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அரசிடமும், நடிகர்களிடமும் உதவிக்காக ஏன் கையேந்த வேண்டும். கொடுக்கிற நிலையில் இருப்பவர்கள் பிறர் உதவிக்காக கையேந்தக் கூடாது. நாம் தயாரிக்கும் திரைப்படங்களை சங்கத்தின் சார்பில் படங்களுக்கு இருக்கக்கூடிய அத்துணை வியாபார வாய்ப்புகளையும் பயன்படுத்தி செய்து கொடுத்தால் எந்த படமும் நஷ்டமடையாது.
அது மட்டுமின்றி இந்த வேலைகளை முறைப்படி செய்து கொடுப்பதற்காக நடைமுறையில் வழங்கப்படும் சேவை கட்டணமே கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கிடைக்கும். வருடத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இது போன்ற சுயமான வருவாய் திட்டங்களை எந்த அணியும் அறிவித்தது இல்லை.
தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர் கொடுத்த கடனை வசூலிக்கப் பொருளாளர் பதவியைப் பயன்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டுத் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது. அவரது போட்டி வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றனர். லிப்ரா ரவீந்திரன் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானவர்.
கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதாரரீதியாக உதவிகளை செய்துள்ளார் சந்திர பிரகாஷ் ஜெயின் மீதான எதிர்ப்பு, மன்னனுக்கு ஆதரவான அலை தனக்கு வாக்குகளாக மாறி என்னை வெற்றிபெற வைக்கும் என நம்பிக்கையுடன் நம்மிடம் கூறினார் லிப்ரா ரவீந்திரன். அதே நேரம் இவர் தயாரித்த, மற்றும் முதல் பிரதி அடிப்படையில் வாங்கிய படங்களைக் கூட பிரச்சினை இன்றி ரிலீஸ் செய்ய முடியவில்லை.
மன்னன் அணியின் தேர்தல் செலவுகளை இவர் ஏற்றுக்கொண்டதால் பொருளாளர் வேட்பாளராகிவிட்டார் என்று இவருக்கு எதிரான பிரசாரமும் நடக்கின்றது. லிங்கா சிங்காரவடிவேலனுடைய தேர்தல் பிரச்சார அணுகுமுறை, வாக்குறுதிகள் அவரது பக்கம் தயாரிப்பாளர்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது.
இரண்டு அணிகளும் மதுவிருந்து, கரன்சி அன்பளிப்பு, வெள்ளியிலான காமாட்சி விளக்கு, நாட்டு சர்க்கரை எனத் தயாரிப்பாளர்களை கவனித்து வாக்கு கேட்டுவரும் சூழலில் இயக்குநர் கஸ்தூரிராஜா எழுதி வெளியான நாவலை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்கு கேட்டு வருவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரலாற்றில் புதுமையாக உள்ளது,
எனக் கூறும் தயாரிப்பாளர்கள் தமிழ்நாடு அரசியலில் திமுக, அதிமுக இரண்டும் வேண்டாம் என்கிற நிலையில் உள்ள வாக்காளர்கள் விஜயகாந்த் கட்சிக்கு வாக்களித்தனர் அதை போன்று பொருளாளர் பதவிக்கு இரண்டு பிரதான அணி வேட்பாளர்களுக்கு மாற்றாக சிங்காரவடிவேலன் தயாரிப்பாளர் முன்னிறுத்தப்படுகிறார்.
இது மட்டுமின்றி சில சந்திரபிரகாஷ் ஜெயினால் கடந்த காலங்களில் நெருக்கடிக்குள்ளான தயாரிப்பாளர்கள் சிங்காரவடிவேலனுக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இதனால் சிங்காரவடிவேலன் ஆதரவு அலை அடிக்கிறது.
அம்பலவாணன்
அமித் ஷா- எடப்பாடி- அண்ணாமலை சந்திப்பு: பக்காவான பத்து விவகாரங்கள்!
பிடிஆர் ஆடியோவை விசாரித்தால்… ‘அந்த’ ஆடியோக்களையும் விசாரிக்க வேண்டும்: முரசொலி