1 கோடி சம்பளம் ட்ரெண்ட் செட் முதல் ’வாம்மா மின்னல்’ காமெடி வரை… யார் இந்த சூர்ய பிரகாஷ்?

சினிமா

தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த இயக்குநரான பாண்டியன் சூர்ய பிரகாஷ் கடந்த மே 26-ஆம் தேதி அதிகாலை சென்னையில் மரணமடைந்தார்.

அன்றைய தினம் பிற்பகல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான எஸ்.வாடிப்பட்டியில் அவருக்கான இறுதி நிகழ்வு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த பாண்டியன் சூர்யபிரகாஷ் ?

பள்ளிக் கல்வியை முழுமையாக முடிக்காத பாண்டியன், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர்.  2000-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படத்தின் மூலமாக சூர்ய பிரகாஷ் இயக்குநராக அறிமுகமானார்.

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான முதல் மூன்று படங்களும் வெற்றி பெற்றதால், வணிக நோக்கத்துடன் ராஜ்கிரண் கேட்ட 1 கோடி ரூபாய் சம்பளத்திற்கு மாணிக்கம் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார் அம்மா கிரியேஷன் சிவா.

அப்போதைய உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒரு படத்தில் நடிக்க 50 லட்சம் சம்பளத்தை தாண்டாத நிலைமையில், ராஜ்கிரண் சம்பளம் 1 கோடி ரூபாய் என்பது தென் இந்திய சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து சூர்ய பிரகாஷ் கூறிய கதையில் சரத்குமார் நடிக்க ஒப்புக்கொண்டார்.

 

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரான இப்படத்தில் சரத்குமார், மீனா, வடிவேலு, பாவா லட்சுமணன் ஆகியோர் நடித்த மாயி படத்தை சூர்ய பிரகாஷ் இயக்கினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை பாதிப்பில் உருவான திரைக்கதை. நடிகர் சரத்குமார் திரையுலக வாழ்க்கையில் அதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரம்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாம்மா மின்னல் காலம் கடந்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் வாழ்வில் இரண்டற கலந்திருக்கிறது. இந்தக் காட்சியை சாதாரணமாக பார்த்தால் வடிவேலு காமெடியாக தெரியும். ஆனால், உண்மையில் சூப்பர் குட் பாவா லட்சுமணன் காமெடி இது.

இயல்பாகவே காமெடி உணர்வுகள் நிரம்பியவர் சூர்ய பிரகாஷ். சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு காமெடி செய்து மற்றவர்களை சிரிக்க வைக்க கூடியவர். கதைப்படி பெண் வாடையே இல்லாமல், பிரம்மச்சார்யத்தை கடைபிடிக்கும் மாயி (சரத்குமார்) வடிவேலுவுக்கு பெண் பார்க்க செல்வார்.

அந்தக் காட்சியில் வடிவேலுவுக்கு வசனம் எதுவும் இருக்காது. தனது உடல் மொழியால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியில் அதகளம் செய்திருப்பார். அதே நேரம் பாவா லெட்சுமணன் மூலம்’வாம்மா மின்னலு’ என்கிற ஒற்றை வரி டயலாக் மூலம் அந்த காட்சி மூலம் படம் பார்க்கும் பார்வையாளனை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த காமெடி காட்சி முதலில்  படம் ஓடும் நேரத்தை குறைப்பதற்காக எடிட்டிங்கில் நீக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்தது.

தணிக்கைக்கு மாயி படம் அனுப்பப்பட்ட போது வாம்மா மின்னலு காமெடி காட்சியை சேர்த்து அனுப்பும்படி தயாரிப்பாளர் சூப்பர் குட் சௌத்ரி கூறிய பின் இணைக்கப்பட்டது. மாயி படம் வெளியாகி முதல் மூன்று நாட்களும் தியேட்டர் வசூல் மந்தமாக இருந்தது.

காதல், மோதல், சண்டை காட்சிகள் என நடித்துக் கொண்டிருந்த சரத்குமார், மாயி படத்தில் வேட்டி, ஜிப்பா ஒரு துண்டுடன் படம் முழுக்க வருவதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என இயக்குநர் சூர்ய பிரகாசை வசைபாடி வந்தார்கள்.

ஆனால், படம் ஜெயிக்கும் என்பதில் சூர்ய பிரகாஷ் உறுதியாக இருந்ததுடன் அவ்வாறு நடக்கவில்லை என்றால் சினிமாவை விட்டே நான் போய் விடுகிறேன் என தயாரிப்பாளர் சௌத்ரியிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியது போன்றே நான்காவது நாள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி கல்லா கட்டியது. அதற்கு காரணம் சரத்குமார் கதாபாத்திர வடிவமைப்பும், வாம்மா மின்னல் காமெடி காட்சியும் தான் என பின்னாட்களில் சூர்ய பிரகாஷ் நட்பு வட்டங்களில் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.

மாயி படத்தின் வெற்றி காரணமாக அன்றைய கால கட்டத்தில் தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த நாயகன் ராஜசேகர் நடித்த பரத சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கும் வாய்ப்பு சூர்ய பிரகாசை தேடி வந்தது. அந்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் திவான் படத்தை இயக்கும் வாய்ப்பை சரத்குமார் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தார். வணிக ரீதியாக திவான் வெற்றி பெறவில்லை.

சூர்ய பிரகாஷ் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி அருகே, எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்தவர். அந்த ஊரில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றை 2011 ஆம் ஆண்டு வருஷநாடு எனும் பெயரில் இயக்கினார்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக தமிழில் அறிமுகமான இந்தப் படத்தில் தைரியம் குமரன் நாயகனாகவும், மற்றும் இயக்குநர்கள் சந்தானபாரதி, ராஜ்கபூர், கதாக திருமாவளவன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கமுத்து, சி.ஐ.டி.சகுந்தலா, ராம் ஆகியோர் நடித்தனர்.

பிலிம் ரோல் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட இறுதிக் காலத்தில் படமாக்கப்பட்ட வருஷநாடு படப்பிடிப்பிற்காக 1, 20,000  அடி நெகட்டிவ் பயன்படுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற எந்திரன் படத்திற்கு நெகட்டிவ் பிலிம் ரோல் விநியோகம் செய்தவரிடம் தான் வருஷநாடு படத்திற்கும் நெகட்டிவ் பிலிம் ரோல் வாங்கப்பட்டது.

எந்திரன் படத்திற்கு கூட இவ்வளவு நெகட்டிவ் வாங்கவில்லையே என கமெண்ட் அடித்துள்ளார் விநியோகஸ்தர். 120 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற வருஷநாடு படத்தில் புதுமுகங்கள் நடித்ததால் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வியாபாரம் இல்லை என்பதால் அந்தப்படம் தணிக்கை செய்யப்பட்டும் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் முடங்கி போனது.

மீண்டும் சூர்ய பிரகாஷ் இயக்கத்தில் மார்கெட் இல்லாத ஜீவன் நடித்த அதிபர் படம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. பிலிம் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சூர்ய பிரகாஷ் இயக்கிய படம் அதிபர்.

படம் வெற்றி பெறாத சூழலில் அவரை பற்றி முழுமையாக அறிந்த சரத்குமார் தான் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை சூர்ய பிரகாஷுக்கு வழங்கியதுடன் அப்படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தார். அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அட்வான்ஸ் பெற்ற சூர்ய பிரகாஷ் படத்திற்கான திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் இருந்த போது அகால மரணமடைந்தார்.

அவரது இயக்கத்தில் தமிழில் வெளியானது மாணிக்கம், மாயி, திவான், அதிபர் என நான்கு படங்கள் மட்டும் என்றாலும் தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பதை தொடங்கி வைத்த படத்தை இயக்கியவர் என்கிற சம்பவம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாதது.

அதே போன்று வடிவேலு திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பத்து காமெடி காட்சிகளில் ‘வாம்மா மின்னல்’ தவிர்க்க முடியாதது. இவரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் எழில், டாணாக் காரன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் சூர்ய பிரகாஷ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: ஐசியூவாக மாறிய அரசு பேருந்து!

அதர்வாவின் புதிய படம்… மீண்டும் நடிகராக களமிறங்கும் தமன்..?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “1 கோடி சம்பளம் ட்ரெண்ட் செட் முதல் ’வாம்மா மின்னல்’ காமெடி வரை… யார் இந்த சூர்ய பிரகாஷ்?

  1. டுபாக்கூர் ராமானுஜம், தயாரிப்பாளர் சிவா சொல்லி இருக்கிறார், ரஜினி 1 கோடி சம்பளம் வாங்கினார் என்று..அந்த நேரத்தில்..பொய்ய தவிர எதுவும் தெரியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *