ரன்யா ராவ் தங்கக்கடத்தல் : விமான நிலையத்திலும் புல்லுருவிகள்!

Published On:

| By Kumaresan M

தங்கக்கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தோண்ட தோண்ட அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.

ரன்யா ராவ் தன் சினிமா வாழ்க்கையில் 3 படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், ஒரே ஆண்டில் 30 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் இப்போது வரை 10 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க கட்டிகளை இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார்.

பெங்களூரூ விமான நிலையத்திலும் அவருக்கு சிலர் உதவிக்கரமாக இருந்துள்ளனர். விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே அவரை சோதனையில் இருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க வைத்து விமான நிலையத்தை விட்டு வெளியேற உதவியதாகவும் சொல்லப்படுகிறது.

சில சமயங்களில் சாலைகளில் நடக்கும் சோதனைகளில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக போலீசார் வாகனத்திலேயே அவரை வீடு வரை ஏற்றி சென்றதாகவும் தகவல் உள்ளது.

ரன்யாவின் வளர்ப்பு தந்தையான டி.ஐ.ஜி ராமச்சந்திரன் ராவ், ரன்யாவின் நடவடிக்கைகள் பிடிக்காததால் திருமணத்துக்கு பிறகு விலகி விட்டேன். சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.

டி.ஜி.பி ராமசந்திரன் ராவும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கியது உண்டு. கேரளாவை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவரிடத்தில் இருந்து 2 கோடி மதிப்புள்ள தங்கத்தை அபகரித்ததாக ராமச்சந்திரன் ராவின் தனிப்பாதுகாவலரான போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share