பாட்ஷா படத்தை இயக்கியது யார்? என்று கேரள பப்ளிக் கமிஷன் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளி வந்த படம் பாட்ஷா. ரஜினிகாந்துக்கு செம ஹிட்டடித்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடிகை நக்மா நடித்திருந்தார். ரகுவரன் வில்லன் வேடத்தில் கலக்கியிருப்பார். 200 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தன. கேரளாவிலும் பாட்ஷா படம் சக்கை போடுபோட்டது.
இந்த நிலையில், பாட்ஷா படத்தால் அங்கு திடீரென்று சர்ச்சை வெடித்துள்ளது. சர்ச்சைக்கு என்ன காரணம் தெரியுமா?
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி கேரள பப்ளிக் கமிஷன் தேர்வு நடைபெற்றது. அரசுப்பள்ளி மலையாள ஆசிரியர்களுக்கான இந்த தேர்வில் பாட்ஷா படம் பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்ஷா படத்தை இயக்கியது யார்? இந்த படம் எந்த தியேட்டரில் அதிக நாள்கள் ஓடியது என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாதவற்றில் இருந்து கேட்டிருப்பதாகவும் தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மலையாள சினிமாவே பாடத்திட்டத்தில் இல்லாத போது, தமிழ் படம் பற்றி கேள்வி எப்படி கேட்கப்படலாம் என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும், இது போன்ற கேள்விகளை கேட்டிருப்பதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதுதொடர்பாக கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இதுவரை விளக்கமளிக்காமல் உள்ளது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: தலைமை ஆசிரியருக்கு டிரான்ஸ்பர்!
மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்