தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, விஜயதசமி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று பண்டிகைக்காலத்தையொட்டி திரைப்படங்களை வெளியிடுவதென்பது காலம்காலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். பண்டிகையை ஒட்டிய விடுமுறை நாட்களில் மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்ற உத்தரவாதம் ஒரு பக்கம் இருக்க, அக்காலகட்டத்தில் தான் அவர்கள் கைவசம் இருக்கும் பணத்தைக் கொண்டாட்டங்களுக்காகச் செலவிடுவார்கள் என்பது இன்னொரு காரணம்.
எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலம் தொட்டு இன்று வரை அந்த வழக்கம் தொடர்கிறது. பண்டிகை நாட்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் வெளியாவதும், அவை பெருவெற்றி பெறுவதும் அதையே உணர்த்துகிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதற்கடுத்த தலைமுறையான அஜித்குமார், விஜய் போன்றவர்களின் இருப்பைத் தீர்மானிப்பது, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது போன்றவற்றில் இப்பண்டிகைக்கால வெளியீடுகளே முக்கிய இடம் வகித்துள்ளன.
அந்த வகையில், இந்த ஆண்டு தியேட்டர்களில் ரசிகர்களைத் தீபாவளியை கொண்டாடச் செய்வது போன்று சில படங்கள் வெளியாகவிருக்கின்றன. அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் ஆகிய தமிழ் படங்கள் போட்டியில் முதன்மையாக இருக்கின்றன.
தெலுங்குப் படமான ‘லக்கி பாஸ்கர்’ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி ‘பான் இந்தியா’ அந்தஸ்தை அடைந்திருக்கிறது.
சரி, இது போக என்ன படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகின்றன. அவற்றின் யுஎஸ்பியாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன?
அமரன்
‘சீரியசான’ பாத்திர வார்ப்பில் சிவகார்த்திகேயனைப் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வேலைக்காரன், டாக்டர், ஹீரோ, மாவீரன் என்று அந்த படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அவற்றிலும் கூட, அவரைச் சுற்றியிருக்கும் பாத்திரங்கள் நகைச்சுவையூட்டுவதாக இருக்கும்.
அது போன்றில்லாமல், ஒரு உண்மைக்கதையாக அமைந்துள்ளது ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனைப் பற்றியது இப்படம். ’ரங்கூன்’ தந்த ராஜ்குமார் பெரியசாமி இதனை இயக்கியிருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் 22-வது படம் இது. ஆக்ஷன் பிரியர்களுக்கு ஏற்ற படமாகவும், உண்மைச் சம்பவங்களை நெகிழ்ச்சியூட்டும் விதமாகச் சொல்வதாகவும் இது இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘சாய் பல்லவியின் ரசிகன் நான்’ என்று இயக்குனர் மணிரத்னம் சொல்லியிருந்தார். இது போன்ற விஷயங்கள் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், கீதா கைலாசம் என்று பல்வேறுபட்ட நடிப்புக்கலைஞர்கள் இடம்பெற்றுள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
பிரதர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கியுள்ள படம் இது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் பாணியில் முழுக்க நகைச்சுவையான, சென்டிமெண்ட் அம்சங்கள் கொண்ட, குடும்பத்தோடு கண்டுகளிக்கக் கூடியதாகவும் இது இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வரவேற்பைச் சமீபகாலமாகப் பெறாத நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘மக்காமிஷி’ பாடல் இதன் அடையாளமாக மாறியது.
படத்தின் டீசர், இது வழக்கமான ஜெயம் ரவி படமாக இருக்குமென்ற நம்பிக்கையைத் தந்தது. இரண்டரை மணி நேரம் கொஞ்சம் கூடப் போரடிக்காத வகையில் திரைக்கதையைக் கொண்டிருக்கும் பட்சத்தில், இப்படமும் தியேட்டரில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தலாம்.
முழுமையாகத் தயாராகிச் சில மாதங்கள் கழித்து, தீபாவளியைக் குறிவைத்து வெளியாவது இப்படக்குழுவின் நம்பிக்கையைக் காட்டுகிறது. பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பூமிகா, நட்டி, யோகிபாபு, அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
பிளடி பெக்கர்
’ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் இப்படம் வெளியாகிறது. நெல்சனின் உதவி இயக்குனரான எம்.சிவபாலன், இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.
டாடா, ஸ்டார் படங்களுக்குப் பிறகு, 2கே கிட்ஸ்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிற கவின் நாயகனாக நடித்துள்ள படம் இது. மெரின் பிலிப், அனார்கலி நாசர், ரெடின் கிங்ஸ்லி, ஹர்ஷத், ‘போர்தொழில்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சுனில் சுகாடா உட்படப் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
கவின் பிச்சைக்காரராக வருவது போன்று அமைந்த டீசர் வரவேற்பைப் பெற்ற நிலையில், அரண்மனை போன்ற பெரிய பங்களாவில் கவின் மாட்டிக்கொள்வதாகவும், அங்கிருப்பவர்கள் அவரைப் பெரிய பணக்காரர் போல நடிக்க வைப்பதாகவும் காட்டியது ட்ரெய்லர்.
ஆள் மாறாட்டத்தை மையப்படுத்தியதாக கதை அமையும் பட்சத்தில், நகைச்சுவைக்கான வாய்ப்பு அதிகமிருக்கும் என்று நம்பலாம். அதற்கேற்ப, இது ஒரு ’டார்க் ஹ்யூமர்’ திரைப்படம் என்றிருக்கிறது படக்குழு.
தீபாவளிப் படங்களில் அமரன், பிரதர்க்கு இணையான இடத்தைப் பெற்றிருக்கிறது ‘ப்ளடி பெக்கர்’.
லக்கி பாஸ்கர்
‘பான் இந்தியா’ முத்திரையுடன் வெளியாகும் ‘லக்கி பாஸ்கர்’, திரையுலகப் பண்டிதர்களின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
‘வாத்தி’ தந்த இயக்குனர் வெங்கட் அட்லூரி இதனை இயக்கியிருக்கிறார். அதேபோன்று, இதுவும் ஒரு பீரியட் திரைப்படம்.
எண்பதுகளில் வங்கியொன்றில் பணியாற்றும் ஒரு சாதாரண மனிதனாக, இதில் நடித்திருக்கிறார் நாயகன் துல்கர் சல்மான். நாயகி மீனாட்சி சவுத்ரி இதில் ஆறு வயது பையனுக்குத் தாயாகத் தோன்றியிருக்கிறார். இவர்களது மகனாக வருபவர் ‘ஜெயிலர்’ படப் புகழ் ரித்விக்.
ராம்கி இதில் முக்கியப் பாத்திரமொன்றில் தலைகாட்டியிருக்கிறார். இவர்கள் தவிர்த்து சாய்குமார், சச்சின் கடேகர் உட்படப் பலர் இதிலுண்டு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியாகிறது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
பணம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தோடு குயுக்திகளைச் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கிற நாயகனைப் பற்றியது இப்படம். அதனால் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, த்ரில்லர் என்று அனைத்து வகைமையையும் இதில் காணலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது இதன் ட்ரெய்லர்.
இவற்றைத் தாண்டி ஜீப்ரா, கா ஆகிய தெலுங்கு படங்களும், பஹீரா என்ற கன்னடப்படமும், சிங்கம் அகெய்ன், பூல் புலைய்யா 3 ஆகிய இந்திப் படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன.
வளரும் தெலுங்கு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவரான கிரண் ஆபாவரம் நடித்த படம் ‘கா’. தன்வி ராம், நயன் சரிகா, அச்யுத் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார். சுஜித் மடேலா இதனை இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்திருக்கிறார்.
சத்யதேவ், பிரியா பவானிசங்கர், சத்யராஜ், அம்ருதா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜீப்ரா’வும் இந்த தீபாவளிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் ‘பென்குயின்’ தந்த ஈஸ்வர் கார்த்திக் இதனை இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்’ இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
மேற்சொன்ன படங்களுக்குப் போட்டியாக, ‘பஹீரா’ என்ற கன்னடப் படமும் வெளியாகவிருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் திரைப்படம். இது தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
’கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் கதை வசனத்தில் உருவான இப்படத்தில், அவரது உறவினரான ஸ்ரீமுரளி நாயகனாக நடித்திருக்கிறார். ருக்மிணி வசந்த், பிரகாஷ் ராஜ், அச்யுத் குஅமர், ராமச்சந்திர ராஜு உள்ளிட்டபலர் நடித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
‘காந்தாரா’ தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் இதனைத் தயாரித்திருக்கிறது. டாக்டர் சூரி இதனை இயக்கியிருக்கிறார். இவை மட்டுமல்லாமல் ’சந்திரமுகி’யின் இந்தி ரீமேக்கான ’பூல் புலைய்யா’ பெருவெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகமும் வெற்றியைப் பெற, தற்போது மூன்றாம் பாகம் வரப் போகிறது.
இதில் வித்யா பாலன், மாதுரி தீட்சித் உடன் டிரிப்தி டிம்ரி, விஜய் ராஸ், ராஜ்பால் யாதவ் நடித்துள்ள இப்படத்தில் நாயகனாக கார்த்திக் ஆர்யன் இடம்பெற்றுள்ளார். காமெடி படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இயக்குனரான அனீஸ் பஸ்மி இதனை இயக்கியிருக்கிறார்.
இதேபோல, ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்தது நாம் அறிந்த விஷயம். தற்போது இதன் மூன்றாம் பாகம் இந்தியில் வெளியாகிறது. ‘சிங்கம் அகெய்ன்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் கரீனா கபூர், தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், அர்ஜுன் கபூர், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் போன்றவர்களோடு சல்மான் கானும் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருக்கிறாராம்.
இதுபோக இன்னும் சில படங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியாகக்கூடும். அவை தியேட்டர்களை நிறைக்கக் கூடும். அதற்கு நடுவே, தீபாவளி வெளியீட்டில் எந்த படம் எவ்வளவு வசூலித்தது என்று அறிவிப்பதில் பெரிய போட்டி ஏற்படும். அதனை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ‘ட்ரெண்டிங்’ உள்ளடக்கமும் அமையும்.
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் எது வெற்றி பெறும் என்பதை எவராலும் தீர்மானிக்க இயலாது. அதேநேரத்தில், இப்படங்கள் அனைத்துமே பரவலான வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதையும் மறுக்க முடியாது.
‘பஃபே’ முறையில் தயார் செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொள்பவர்கள் தங்களுக்குத் தேவையானதை அள்ளி அள்ளிச் சாப்பிடுவது போன்று இப்படங்கள் ஓடும் தியேட்டர்களைத் தேடிச் சென்று ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தனிப்பட்ட முறையில் கேட்டால், ‘லக்கி பாஸ்கர்’ மீதே பார்வை முதலில் விழுகிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்கக்கூடிய திரைப்படம் என்பதைத் தாண்டி, அதில் ஏதோவொரு ஆச்சர்யம் பொதிந்திருப்பதாக ஒரு எண்ணத்தை உருவாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணம்.
அதற்கு ஈடாக, இதர படங்கள் அனைத்தும் வெவ்வேறுபட்ட திரையனுபவத்தைத் தந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான பிளவுஸை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நெருங்கும் தீபாவளி… தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு பிரிவு!
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண்… நிரந்தர தீர்வு இதோ!
டாப் 10 செய்திகள்: வேளச்சேரி – பீச் ரயில் சேவை முதல் ராகவா லாரன்ஸ் படம் அப்டேட் வரை!