“வாழ்த்தினாலும், வறுத்தாலும்…”: இயக்குநர் ஹெச்.வினோத் குறித்து வைரல் பதிவு!

Published On:

| By Jegadeesh

A viral post about director h vinoth

துணிவு பட இயக்குநர் ஹெச்.வினோத் குறித்து கத்துக்குட்டி, நந்தன் படங்களின் இயக்குநரும், ஹெச். வினோத் நண்பருமான ரா.சரவணன் அவரது பிறந்தநாளையொட்டி முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.

ஹெச். வினோத் பிறந்தநாளை முன்னிட்டு துணிவு பட வெளியீட்டு சமயத்தில் நடந்த நிகழ்வுகளை இயக்குநர் ரா.சரவணன் பதிவாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வினோத் தரையில் பாயில் படுத்து உறங்கும் புகைப்படத்துடன் “வினோத் என்கிற அரக்கன்!” என்கிற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம்.

இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை.

‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத்.

“யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார்.

“படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?”

“ஊத்தட்டும் விடுய்யா…” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார்.

“ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க…” என்றேன்.

“சரிய்யா…” – எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார்.

“நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார்.

அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

இரண்டு நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு!

அடுத்த 5 நாட்களுக்கு… மழை பிச்சு எடுக்க போகுது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share