When will Harris Jayaraj's next hit album come out?

ஹாரிஸ் ஜெயராஜின் அடுத்த ஹிட் ஆல்பம் எப்போது வரும்?

சினிமா

தமிழ் திரை இசையமைப்பாளர்களில் சிலரைக் குறிப்பிட்ட பாடல்களின் வழியாக நினைவுகூரலாம். மிகச்சிலரை மட்டும் அவர்கள் இசையமைத்த படங்களின் டைட்டில் கொண்டு அடையாளப்படுத்தலாம். அந்த வரிசையில் இடம்பெறுபவர்களில் ஒருவர், ஹாரிஸ் ஜெயராஜ். அந்த அளவுக்கு அவர் பங்களிப்பைக் கொண்ட படங்களில் பெரும்பாலானவை வெற்றிகளைக் குவித்திருக்கின்றன. அப்படிப்பட்டவர் தற்போது ஏன் தமிழில் இசையமைப்பதில்லை? இந்த கேள்வியே, ஹாரிஸ் தந்த இசை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது.

புகுந்த காலம்!

திரையுலகில் எந்தவொரு கலைஞராக இருந்தாலும், அறிமுகக் காலம் அல்லது அவர்கள் மீது வெளிச்சம் விழத் தொடங்கிய நேரம் புகழ் கொடி நாட்டுவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கும். யாரோ ஒருவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையிலோ, புதிதாக உண்டான இடைவெளிக்குப் பொருத்தமாகவோ அந்த வரவு அமைய வேண்டும். தொண்ணூறுகளில் இளையராஜாவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையில் பட வாய்ப்புகளை வாரிக் குவிக்கத் தேவாவின் இருப்பு அமைந்தது; அந்த வகையில், 2001ஆம் ஆண்டு ‘மின்னலே’வில் அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ்.

’லகான்’ போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தி திரையுலகில் ரஹ்மான் பிஸியாக இருந்தார்; இளையராஜா மிகக்குறைவான எண்ணிக்கையில் படங்களை ஒப்புக்கொண்டார்; தமிழில் தேவா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி என்று ஒரு தலைமுறையின் இசையமைப்புக்கு ரசிகர்கள் ‘ட்யூன்’ ஆகியிருந்தார்கள். மணி சர்மா, சங்கர் – இஷான் – லாய் என்று அரிதாகச் சில இசையமைப்பாளர்களின் கவனம் தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியது.

யுவன் சங்கர் ராஜா போன்று இன்னொரு தலைமுறையின் ‘இசையலை’ அப்போது மேலெழத் தொடங்கியது. மிகச்சரியாக, அதே காலகட்டத்தில் ‘மின்னலே’ வழியாக அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மஜ்னு’ தான் அவர் இசையமைக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்றாலும், அதற்குள் இயக்குனர் கௌதம் மேனன் முந்திக் கொண்டார்.

மிகப்பெரிய ‘ஹிட் ஆல்பம்’ என்பதைத் தாண்டி, ‘வசீகரா’ என்ற ஒற்றைப்பாடல் மூலமாக ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக உருவெடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். அப்போதிருந்த இளைய தலைமுறை மட்டுமல்லாமல், வயதில் மூத்தவர்களும் கூட அவரது ‘மெலடி மெட்டு’களை ரசித்தனர். அதுவே, அவர் திரையுலகில் புகுந்த காலத்தைப் பொன்மயமானதாக மாற்றியது.

அதிக வெற்றிப்படங்கள்!

ஒரு தயாரிப்பாளர், விநியோகஸ்தரை விடவும் மிகக்கூர்மையாக ஒரு படத்தின் கதை, திரைக்கதையைக் கேட்டு, அதில் திருத்தங்கள் செய்யவல்லவர் ஹாரிஸ் ஜெயராஜ். இது, அவரோடு பணியாற்றிய பல இயக்குனர்கள் சொன்னது. அவ்வளவு ஏன், கிளைமேக்ஸுக்கு நெருக்கமான இடத்தில் ‘மெலடி பாடல்கள்’ அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர். அது சரியா தவறா என்று ஒரு ரசிகனின் பார்வையில் பட்டிமன்றம் வைப்பதைவிடவும், கமர்ஷியல் வெற்றிக்கான அளவுகோல்களையே ஹாரிஸின் எண்ணம் வேறுவிதமாகப் பிரதிபலிக்கிறது எனும் வாதத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு சாதாரண ரசிகனின் பார்வையில் ஹாரிஸ் தனது படங்களின் திரைக்கதைகளை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்று கூட கருத இடமுண்டு.

அதனாலேயே, கடந்த இருபது ஆண்டுகளில் ஹாரிஸ் இசையமைத்த 55 படங்களில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட படங்கள் பெரிய வெற்றிகளைக் குவித்திருக்கின்றன. அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. அதன் மூலமாகத் தொடர்ச்சியாகப் புகழ் வெளிச்சத்திலேயே அவர் இருந்து வருகிறார்.

அதேபோல, அவர் இசையமைப்பில் வந்த படங்களில் பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவே இருக்கும்; அவற்றின் சதவிகிதக் கணக்கு நிச்சயம் நூறைத் தொடும். மிகச்சில பாடல்கள் படம் வெளியான காலத்தில் ரசிகர்களை நெருங்கமுடியாத சூழலைப் பெற்றாலும் கூட, அவற்றுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளியைச் சமூகவலைதளங்களின் வளர்ச்சி மிகச்சரியாகப் பூர்த்தி செய்திருக்கிறது.

உயிரின் உயிரே..!

ஏ..ஏ.. அழகிய தீயே, வெண்மதியே, குல்மொஹர் மலரே, முதற்கனவே, பூவே வாய் பேசும்போது, முத்தம் முத்தம், மூங்கில் காடுகளே, ஆகாய சூரியனை, முதல்முதலாய், லேசா லேசா, ஏதோ ஒன்று.. எனத் தொடர்ச்சியாகப் பல பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கச் செய்து நம் நெஞ்சங்களில் நிறைந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படங்களில் இதர பாடல்களும் கூட ரசிக்கும்விதமாக இருந்தன. ஆனாலும், ஒரு கமர்ஷியல் படத்திற்கான இசையமைப்பாளராக ஹாரிஸ் கருதப்படவில்லை.

அந்த காலகட்டத்தில்தான், அவர் ஹரியின் ‘சாமி’ படத்திற்கு இசையமைத்தார். அதில் ‘திருநெல்வேலி அல்வாடா’, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’, ‘வேப்பமரம்’, ‘ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு’ பாடல்களோடு, தனது ட்ரேட்மார்க் மெலடியாக ‘இதுதானா’ பாடலையும் தந்தார்.

அந்த வெற்றியை அடிக்கோடிட்டு உணர்த்தும்விதமாக, அடுத்து ‘காக்க.. காக்க..’ பாடல்கள் தந்தார் ஹாரிஸ். அதில் ஒன்றாக அமைந்த ‘உயிரின் உயிரே..’ இன்று வரை அவர் தந்த பொற்குவியல்களில் ஒன்றாகப் பளிச்சிடுகிறது.

2004ஆம் ஆண்டு ஹரியோடு ஹாரிஸ் இணைந்து தந்த ‘கோவில்’ படம் சுமார் வெற்றியைப் பெற்றாலும், ‘புயலே புயலே’, ‘சிலு சிலு’, ‘கொக்கு மீனை திங்குமா’ பாடல்கள் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

அதே ஆண்டின் வெளியான செல்லமே, அரசாட்சி, அருள் பட பாடல்கள் இன்றும் அப்படங்களை ரசித்தவர்களால் கொண்டாடப்படுகின்றன.

அதற்குப் பின் ஹாரிஸ் இசையமைத்தவற்றில் பல படங்கள் ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றிகளாக அமைந்திருக்கின்றன. அவை ரொமான்ஸ், ஆக்‌ஷன், த்ரில்லர், ட்ராமா என்று பல்வேறு வகைமை சார்ந்த கதைகளைக் கொண்டிருந்தன; ஒன்றிலிருந்து ஒன்று பெருமளவில் வேறுபட்ட காட்சியாக்கத்தைக் கொண்டிருந்தன என்பதுதான் ஆகச்சிறப்பு.

குறிப்பாக, சூர்யாவுக்குப் பெருவெற்றிகளாக அமைந்த ‘வாரணம் ஆயிரம்’, ‘கஜினி’, ‘அயன்’, ‘ஆதவன்’, ‘ஏழாம் அறிவு’ படங்களுக்கு இசையமைத்தது ஹாரிஸ் ஜெயராஜ்தான்.

இப்படி வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த எட்டாண்டுகளாக மிகக்குறைவான படங்களிலேயே பணியாற்றி வருகிறார். ’வனமகன்’ அவர் இசையமைத்த 50வது திரைப்படம். விரைவில் அவர் இசையமைத்த ‘துருவ நட்சத்திரம்’ திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட புதிய தலைமுறை நடிகர்களோடு அவர் கைக்கோர்க்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, கடந்த காலங்களில் நல்ல வாய்ப்புகளுக்காக அவர் ஒற்றைக்காலில் இருந்த தவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. ’ஹாரிஸ் ஜெயராஜின் அடுத்த ஹிட் ஆல்பம் எப்போது வரும்’ என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹாரிஸ் இசையமைக்கும் முறை, படங்களை ஒப்புக்கொள்ளும் விதம், அப்பாடல்கள் ஒலிக்கும் பாங்கு உட்படப் பலவற்றின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது பங்களிப்பு தியேட்டருக்கு வரும் ரசிகர்களைக் குதூகலப்படுத்தியது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில், இந்த ஆண்டில் அவரது திரைப்பங்களிப்பு மீண்டும் நம் பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். கூடவே, முதன்முறையாக ரஜினிகாந்தோடு அவர் இணையும் வாய்ப்பு அமைந்தால் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையும்.

வயது 49ஐ பூர்த்தி செய்துள்ள ஹாரிஸ் ஜெயராஜுக்கு இனிய 50வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

Video: திடீரென கன்னத்தில் விழுந்த அறை… ஜெயிச்சிட்டா உங்களுக்கு கண்ணு தெரியாதே!

போக்குவரத்து ஊழியர் போராட்டம்… அரசு என்ன செய்யப் போகிறது? அமைச்சர் சிவசங்கர் பதில்!

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய அறிவிப்பு!

நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *