சூர்யா, கார்த்தி இணையும் புதிய படம் எப்போது ? லோகேஷ் கனகராஜ்

சினிமா

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் படத்தில் நடிப்பதற்கு பல பெரிய நடிகர்கள் தயாராக இருக்கின்றனர். தமிழின் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் லோகேஷ் கனகராஜூக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான்கான் அழைத்தும் மறுத்தார். விக்ரம் படத்தின் வேலைகள் சென்று கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் மாஸ்டர் படத்தை இயக்க முடியாது என கூறியிருந்தார் லோகேஷ்.

இந்நிலையில் , அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து அந்தப் படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் ரீமேக் ஆனது. தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் இந்தப் படம் ரீமேக் ஆக இருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

தற்போது வரை யார் நடிக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட நேர்காணலில் அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் கார்த்தி இருவரையும் வைத்து எடுக்க திட்டமிட்டதாகவும் அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசியதாகவும் ஆனால் அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைகளை வேறு யாரோ வைத்திருக்கிறார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும், ‘இரும்புக்கை மாயவி’ கதை எப்போதும் சூர்யாவுக்காக தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் உரிமைகளை பைவ் ஸ்டார் கதிரேசன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.