ஏ.ஆர்.ரஹ்மான் – சாயிரா பானு விவாகரத்து: அவரைப்பற்றி இவரும் இவரைப்பற்றி அவரும்… கண் பட்ட கதை!

Published On:

| By Kumaresan M

பிரபல இசையமைப்பாளரான  ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சாயிரா பானுவுக்கும்  கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்களும் அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து தான் பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருமணமாகி 29 வருடங்களுக்கு பிறகு கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே யாரும் பாலமாக வந்து ஒன்றிணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஏ.ஆர்.ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் எங்களது 30ஆவது திருமண வாழ்க்கையை பூர்த்தி செய்வோம் என்று நம்பியிருந்தோம். ஆனால், எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்துள்ளது. உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்வதற்கு எங்களுக்கான ப்ரைவசி கொடுக்கும் நண்பர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த மாதிரியான நேரத்தில் எங்களின் ப்ரைவசியை மதிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய புரிதலுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் – சாயிரா பானு திருமணம் நடைபெற முக்கிய  காரணமாக இருந்தது இசைப்புயலின்  தாய் கரீமா பேகம் தான். இளையராஜாவுக்கு நிகராக தமிழ் திரையுலகில் முன்னணியில்  ஏ.ஆர். ரஹ்மான்  இருந்த போது, தாய் கரீமா பேகம், ஏ.ஆர் ரஹ்மானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்.

ஏ.ஆர் ரஹ்மான் தான் பிஸியாக இருப்பதால், தன்னால்  எங்கேயும் வர முடியாது. நீங்களே  பெண்ணை பாருங்கள். நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். அதோடு இரு முக்கிய கண்டிஷன்களை தாயிடம் கூறியுள்ளார். தனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். இரண்டாவதாக அந்த பெண் பணிவாகவும், தன்னிடத்தில் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

இதுதான் என்னிடமுள்ள எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின்  கன்டிஷன்களை மனதில் வைத்து கொண்டு தாய் கரீமா பேகம் பெண் தேட தொடங்கினார்.

பின்னர்,  சாயிரா பானுவை ஏ.ஆர். ரஹ்மானுக்கு  திருமணம் செய்து வைத்தார். திருமணம் நடந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானின் வயது 27. சாயிரா பானுவின் வயது 21 ஆகும். திருமணத்துக்கு முன்பு சாயிரா பானுவும் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து கார் ஓட்ட அனுமதி கேட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் ஓகே சொன்ன பிறகே இருவரின் திருமணம் நடந்ததாக சாயிரா பானு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் .

சாயிரா பானு பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. அதேபோல் இருவர் பற்றியும் கடந்த 29 ஆண்டுகளாக எந்த கிசுகிசுக்களும் வந்தது இல்லை. இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையை 29 ஆண்டுகளுக்கு பிறகு முடித்துக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, தனது கணவர் குறித்து சாயிரா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது, சாயிரா பானு கூறுகையில் , ‘எல்லா தம்பதி போலவே நாங்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம். அவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அத்தனை பிரியம். விதவிதமான பைக்குகளை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார்.

பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருவரும் ரவுண்ட் செல்வோம். இந்தசமயத்தில்  ரஹ்மான் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். என்னை அவர் எப்போதும் பைக்கில் அழைத்து செல்வதையே விரும்புகிறேன். அவரும் எனது ஆசையை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவார்’ என்று கூறினார். சாயிரா பானு இப்படி கூற அருகில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தலைகுனிந்து சிரித்தபடி இருந்தார்.

அதேபோல, ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி குறித்து பேட்டி ஒன்றில் என்னுடைய ஒவ்வொரு அசைவும் என் மனைவியுடையது என்றும் சிலாகித்து கூறியுள்ளார். “என்னுடைய மனைவி உண்மையில் நான் ஸ்டைலாக இருப்பதை ரொம்பவே விரும்புகிறார். அவர்தான் என்னை அலங்கரித்து பார்த்துக் கொள்கிறார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவர்தான் எனக்கு தேவையான உடைகளை  வாங்குகிறார்.  என்னுடைய மனைவி ஒரு உடையை வாங்கி வந்து அணிய சொன்னால் நான் மறுக்கமாட்டேன். அவருக்கு கருப்பு நிறம் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் அடிக்கடி கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்கி வருவார்.

நான் ஒரு முறை அவரிடம் வேறு நிறத்தில் வாங்கி தர முடியுமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் ஒத்துக்கொண்டார். பின்னர்,  பல நிறங்களில் ஆடைகள் வாங்க ஆரம்பித்தார். என்னைப் பற்றி பல விஷயங்களை நன்கு அறிந்தவர் அவர். என் ஒவ்வொரு அசைவும் அவருடையது” என்று மனம் நெகிழ்ந்து தெரிவித்திருந்தார்.

ஒரு முறை மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாயிரா பானு இந்தியில் பேசினார். அப்போது, அருகில் இருந்த கணவர் ரஹ்மான் தமிழில் பேசும்படி கூறினார். இதற்கு பதிலளித்த சாயிரா பானு, எனக்கு தமிழில் அவ்வளவாக பேச வராது என்று பதில் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பதிவில் ஏ.ஆர். ரஹ்மானை  வம்புக்கு இழுத்தார். உங்கள் மனைவிக்கு தமிழ் பேச வராதா? அப்படியென்றால் அவரின் தாய் மொழி என்ன? என்று கஸ்தூரி கேட்டிருந்தார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருந்தார். அந்த ஒற்றை வார்த்தை  ‘காதலுக்கு மரியாதை’ என்பதுதான்.

ஆனால் , எத்தகைய  காதலும் என்றாவது ஒரு நாள் செத்து விடுகிறது என்பதைதான் ஏ.ஆர். ரஹ்மான்- சாயிரா பானு பிரிவு காட்டுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!

தியேட்டரில் யூடியூப் ரிவ்யூவுக்கு தடை… தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share