இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்குவகிக்கும் மூலிகைகளில் முடக்கறுத்தான் முக்கியமானது. அந்தப் பெயரில் தமிழ்திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது. Mutakaruthan movie trailer release
2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி சமூக சேவையாற்றியவர் சித்த மருத்துவர் டாக்டர் கே.வீரபாபு.
அவர் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம்தான் ‘முடக்கறுத்தான்’.
இத்திரைப்படத்தில் வீரபாபு, மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது.
விழாவில் பேசிய வீரபாபு, “இந்தபடத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கு வைத்துள்ளேன்
அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதையும் மையமாக வைத்து படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார்.
அடுத்த கோவிட்-19 (COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்ற இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பேசுகையில்,
“முடக்கறுத்தான் திரைப்படத்தில் தந்தையும் தாயும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களின் குழந்தையை பராமரித்து பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கின்றனர்.
அந்தப் பெண் இடைப்பட்ட நேரத்தில் அந்த குழந்தையை பிச்சை எடுக்க வைக்கிறார்.
நினைத்து பார்க்கவே பதட்டமாக இருக்கும் இதை தான் திரைக்கதையாக வைத்துள்ளார் வீரபாபு. அவர் படம் தயாரிக்கபோகிறார் என்றவுடன் இயக்குநர் சுப்ரமணியசிவா மூலம் அவரை படம் தயாரிக்க வேண்டாம் என கூறுங்கள் என்றேன். காரணம் படம் தயாரிப்பதை காட்டிலும் வெளியிடுவது இங்கு சவாலாக உள்ளது” என்றார்.
இயக்குநர் தங்கர்பச்சான், “மனிதர்களின் முக்கியத்துவத்தை சொல்லும் திரைப்படங்கள் குறைந்துவிட்டன. மக்கள் என்னவானாலும் பரவாயில்லை என்று சிந்திக்க கூடியவர்கள் தான் தற்போது சினிமாவில் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் நல்ல சினிமா ரசனையை பார்வையாளர்களிடம் வளர்க்க தவறிவிட்டோம். அதன் விளைவு திரைப்படத்தில் கதாநாயகர்கள் கொலை செய்வதை கை தட்டி ரசிக்கும் மனநிலைக்கு மக்களை உள்ளாக்கியிருக்கிறோம்.
இந்த ரசனையை மேலும் வலுவாக்கும் வகையில் படங்களை தயாரித்து மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் பிரதான வேலையாக கொண்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழு!
எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்