ஆகஸ்ட் 23 ஆம் தேதி வாழை, கொட்டுக் காளி, போகுமிடம் வெகுதூரமில்லை, ஜாலா, அதர்ம கதைகள் ஆகிய ஐந்து நேரடி தமிழ்படங்கள் வெளியானது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான தங்கலான் குறைக்கப்பட்ட திரையரங்குகளில்இரண்டாவது வாரத்தை தொடர்ந்தது. டிமான்டி காலனி-2 அதிகரிக்கப்பட்ட திரையரங்குகளில் இரண்டாவது வாரத்தில் வசூலை குவித்து வரும் சூழலில் புதிய படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது.
ஐந்து நேரடி தமிழ் படங்கள் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் டிமான்டி காலனி-2, வாழை, தங்கலான், கொட்டு காளி ஆகிய நான்கு படங்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட வரிசையில் முன்னிலை பெற்றன.
காட்சிகளும், வசூலும் இருமடங்கு ஆனது!
ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை முதல் நாள் 1.15 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 2.50 கோடி ரூபாய் மூன்றாம் நாள் 2.75 கோடி ரூபாய் என மொத்த வசூல் செய்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்களான பொன்வேல், சேகர்,கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது.
ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட வாழை படத்தை பார்த்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தார் இதனை திரையரங்குகளில் வெளியிடலாம் என ஆலோசனை கூறிய பின் பரிசோதனை முயற்சியில் சுமார் 130 திரைகளில் மட்டுமே முதல் நாள் திரையிடப்பட்டது.
வெளியீட்டுக்கு முன்பாக திரைக்கலைஞர்கள், இயக்குநர்களுக்காக வாழை படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அவர்கள் வாழைபடம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் பட வெளியீட்டுக்கு முன்னதாகவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக நகர்புற திரையரங்குகளில் முன்பதிவில் படத்திற்கான 60% டிக்கட்டுகள் விற்பனையானது. குறைவான திரையரங்குகள், குறைவான காட்சிகள் என வெளியான வாழை படத்திற்கு இரண்டாவது நாளே காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வசூலும் இருமடங்கு ஆனது.
இந்த வருடம் இது வரை வெளியான எந்தவொரு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு தமிழ் படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
பழுதடைந்த அரசுப் பள்ளி கட்டடங்கள்: அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு!