தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித்குமார் ஆகியோர் நடிக்கும் படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சினிமா தயாரிப்பு, வியாபார அனுபவம் இல்லாதவர்கள் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் இருப்பதால் தொடர்ச்சியாக லைகா நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்து வருகிறது என்ற பேச்சு திரைத் துறையில் தொடர்ந்து இருந்து வருகிறது.
முதல் பிரதி அடிப்படையில் மணிரத்னம் இயக்கத்தில் தயாரான செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் மூலம் மட்டுமே லைகா நிறுவனத்திற்கு லாபம் கிடைத்தது.
இதற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் படங்களின் வெளியீட்டில் இருந்தது ஒரு காரணம் என கூறப்பட்டது.
இந்தியன்-2 படத்தை கடந்த ஆறு வருட காலமாக முடித்து வெளியிட முடியாமல் தடுமாறி வந்தது லைகா.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்த பின்பே, ஷங்கரை லைகா நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடிந்தது.
இந்தியன் – 2 படத்தின் ஆடியோ மற்று வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.
அறிவித்தபடி ஜூன் மாதம் இந்தியன் – 2 வெளிவராது தாமதமாகும் என்கிற தகவல்களும் கசிந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதற்கு காரணம் லைகாவின் நிதி நிலைமை சமச்சீராக இல்லை என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கான படப்பிடிப்பு நாட்களும், செலவுகளும் இயக்குநர் முதலில் கூறியதை போன்று இல்லாமல் இரட்டிப்பு ஆகியுள்ளது. இதனால் லைகா நிதி நிலைமையை சமாளிப்பதில் தடுமாறுகிறது என்கின்றனர். இதே போன்ற சூழல் விடாமுயற்சி படத்தின் இயக்குநராலும் ஏற்பட்டிருக்கிறது.
அஜித்குமாரின் கால்ஷீட் கொடுக்கப்பட்டநாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்காமல் செலவையும் இரட்டிப்பாக்கியுள்ளதால் லைகா நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்குமார். படத்தின் பெயரும், ‘குட் பேட் அக்லி’ என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடராமல் இருப்பதற்கு என்ன காரணம் என விசாரித்த போது, “அஜித் குமார் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 ஜனவரி பொங்கல் நாளையொட்டி வெளியானது.
அதன்பின் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகிவிட்டது. அதற்கடுத்து அவர் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஆனால்,துணிவு படத்துக்கு அடுத்து அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.
விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் இரண்டு மூன்று கட்டங்களாக நடந்தது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15 முதல் நடக்கும்என்று கூறப்பட்டது. அஜித் குமார் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அது நடைபெறவில்லை.
வழக்கமாக அஜித் குமாருக்கு பேசப்படும் சம்பளம் பல தவணைகளாகப் பெறப்படும். முன் தொகை எவ்வளவு? அடுத்த தொகை எவ்வளவு? எப்போது? என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஒப்பந்தப்படி தயாரிப்பு நிறுவனம் நடந்து கொண்டால் அவரும் சரியாக நடந்துகொள்வார் இல்லையென்றால் சிக்கல்தான் என்பார்கள்.
இப்போதும் அப்படியொரு சிக்கலில் விடாமுயற்சி படம் சிக்கியிருக்கிறது என்பதே உண்மை” என்கின்றனர்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அடுத்தடுத்த தவணைகளைக் கொடுக்காததால் அவர் தேதி தரவில்லை என்கிறார்கள்.
அதே போன்று நடிகர் அர்ஜுனுக்கும் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியில் ஒரு தவணையாவது கொடுங்கள் என கேட்டும் லைகா நிறுவனம் தரவில்லை என்கிறது அர்ஜுன் தரப்பு.
ஆனால் படப்பிடிப்பு தாமதமாவதற்கு காரணம் பருவநிலை மாற்றத்தை காரணமாக கூற தொடங்கியுள்ளது லைகா நிறுவனம்.
விடா முயற்சி படப்பிடிப்பு தாமதமாகக் காரணம், படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களில் பருவநிலை மோசமாக இருக்கிறது என்பதால்தான் படப்பிடிப்பை தொடர முடியாமல் இருக்கிறோம். அது சரியானதும் படப்பிடிப்பு தொடங்குவோம் என்கிற தகவலை கசியவிட்டு வருகிறது லைகா நிறுவனம்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெயில் தாக்கத்தால் சிறுவன் உயிரிழப்பு!