சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ வெற்றி பெறவில்லை. முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. படம் வெளியாவதற்கு முன்னர், இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் ‘கங்குவா’ இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்தது பேக்ஃபயர் ஆனது.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.120 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. ‘கங்குவாவின்’ தோல்வியால் சூர்யா தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடமாக சூர்யா, ஜோதிகா தம்பதி மும்பையில் தங்கியிருந்த நிலையில், மன அமைதிக்காக கோவில்கள் பக்கம் வர துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சூர்யா – ஜோதிகா இருவரும் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர், திருப்பதி கோவிலுக்கும் சென்றனர். சோளிங்கர் நரசிம்மர் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர். கடந்த 7 நாட்களில் 4 கோவில்களுக்கு சென்று இந்த தம்பதி வழிபட்டனர்.
குடும்ப ஜோதிடர் கூறியதால், சில கோவில்களுக்கு இருவரும் சென்று வருவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. ‘கங்குவாவை’ தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44ஆவது படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படமும் திரைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45- வது படமும் வெளியாகவுள்ளது. இதன் படப்படிப்பு ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நேற்று (நவம்பர் 27) பூஜையுடன் தொடங்கியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஃபெங்கல் புயல் எப்போது உருவாகும்? – வானிலை மையம் டேட்டஸ்ட் அப்டேட்!