தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யப் போவதாக பரவிய வதந்திகளுக்கு நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இன்று(ஜூன் 28) முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மலையாள நடிகையான அசின் தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அறிமுகமானார்.
அறிமுக நடிகையாக நடித்த அந்த படத்தின் மூலமே அசின் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்தார்.
அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி, அதே ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி, 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வரலாறு, 2007 ஆம் வெளியான போக்கிரி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
இந்த சூழலில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவான கஜினி படத்தில் நடித்தார் அசின்.
இதன் மூலம் மலையாளம் , தமிழைத் தொடந்து இந்தி சினிமாக்களிலும் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து இந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அரின் என்ற ஒரு மகள் உள்ளார்.
இச்சூழலில், அசின் தன்னுடைய கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், கணவரை பிரிந்து தற்போது மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் பரவி வரும் செய்திக்கு அசின் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம்.
இருவரும் நேருக்கு நேர் காலை உணவை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் முற்றிலும் கற்பனையான நியூஸ் ஒன்றை பற்றி அறிந்தோம்.
எங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து எங்களின் திருமணத்தை பற்றி திட்டமிட்ட நேரத்தை இந்த தருணம் நினைவூட்டுகிறது.
நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோமென நியூஸ் சுற்றியது. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.
இதற்காக எங்களின் 5 நிமிடத்தை வீணடித்ததில் வேதனை. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே! “என கூறியுள்ளார்.
தற்போது அவரின் இந்த விளக்கம் சமூகவலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் : 200 பேர் கைது!