நடிகர் விஜய்யின் லியோ படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. லியோ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் நள்ளிரவு 1.30 மணிக்கு அனைத்து காட்சிகளும் முடிந்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதன்பிறகு காலை முதல் காட்சி 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு திரையிட அனுமதி கோரி லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால் நீதிபதியோ 7 மணி முதல் காட்சியை திரையிட தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறத்தில் பல திரையரங்குகள் லியோ படத்தின் முன்பதிவைத் தொடங்காமலேயே இருந்தனர்.
இதற்கு காரணம் லியோ படத்தின் முதல் வார வசூலில் இருந்து 80 சதவீதம் தயாரிப்பாளர் கேட்பதாக கூறப்பட்டது.
அதன்பின் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லியோ படத்திற்கான முன்பதிவுகள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் லியோ படம் 7 மணிக்கு திரையிடுவது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது,
“திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் 9 மணி முதல் காட்சிக்கு தான் தயாராக உள்ளனர். 7 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்தாலும் 2 மணி நேரத்தில் அடுத்த காட்சியை எங்களால் நிச்சயம் திரையிட முடியாது. ஆகையால் 9 மணி காட்சி தான் லியோ படத்திற்கான முதல் காட்சி.
லியோ படத்திற்கு இவ்வளவு பிரச்சனை வர காரணமே படத்தின் தயாரிப்பாளர் தான். தமிழக அரசு ஐந்து காட்சிகளுக்கு அனுமதித்து உள்ளது என்று திருப்தி அடைந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை.
அதை தாண்டி 7 மணி காட்சி வேண்டும் என்று தயாரிப்பாளர் முறையிட்டதனால் தான் இவ்வளவு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
அவர்களே பிரச்சனையை உருவாக்கிக் கொண்டு லியோ படத்திற்கு பிரச்சனை வருகிறது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்” என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்கும் ரஷ்ய அதிபர் புதின்: காரணம் என்ன?