”மாரிமுத்து ஜாலியான மனிதர்… இதை ஏத்துக்கவே முடியல”: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் வேதனை!

சினிமா

மாரிமுத்துவின் மறைவால் தமிழ் திரையுலகம் மாபெரும் நடிகரை இழந்து நிற்கிறது என்றும், அவரது மறைவை  கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று (செப்டம்பர் 8) காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாரிமுத்துவின் திடீர் மரணம் குறித்து ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நடிகர் மாரிமுத்துவின் மரணம் எங்களுக்கு பேரிழப்பு. அவர்களது தனிப்பட்ட குடும்பத்திற்கு மட்டுமின்றி, எதிர்நீச்சல் குடும்பத்திற்கும் பேரிழப்பு. தமிழ் திரையுலகம் மாபெரும்  நடிகரை இன்று இழந்து நிற்கிறது.

சன் விருது விழாவில் கூட, அவரை ’நடிப்பு அரக்கன்’ என்று தான் கூறியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு நடிகரை இழந்தது எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி.

கொஞ்சம் கூட இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக தான் சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால், அது வேறு. ஆனால் நேற்றுவரை எங்களுடன் இருந்தவர், இன்று எங்களுடன் இல்லை என்று சொல்லும்போது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.

அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. எதிர்நீச்சல் சீரியலில் ’ஆதி குணசேகரன்’ கதாபாத்தித்தை தனது நடிப்பால் உச்சத்துக்கு கொண்டு சென்றார். அதனால் மாரிமுத்துவும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டு வந்தார்.

இதனை ஒவ்வொரு நாளும் அவர் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தார். ஆனால் அவரது முழு வெற்றியை காண்பதற்குள் இறைவன் அவரை அழைத்து சென்றுவிட்டார். வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சீரியலில் பார்ப்பதற்கு மாறாக நிஜத்தில் மாரிமுத்துவுக்கு வேறொரு முகம் உண்டு. அவர் மிகவும் ஜாலியான மனிதர். சில நேரத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை தவிர எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக இருப்பார். இந்த வயதிலும் செய்யும் வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

இன்னும் மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டிய இந்த நேரத்தில் மாரிமுத்துவின் இழப்பு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது” என்று சோகத்துடன் திருச்செல்வம் பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

`எதிர்நீச்சல்’ மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்… நடந்தது என்ன?

”சிகரத்தை நோக்கி சென்றவனை…”: மாரிமுத்து மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3