நண்பனும் நானே… வில்லனும் நானே… கதாபாத்திரங்களால் கவனம் ஈர்க்கும் விவேக் பிரசன்னா

Published On:

| By uthay Padagalingam

Vivek Prasanna and negative roles

விவேக் பிரசன்னா. தமிழில் குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடிக்கிற இளையவர்களில் ஒருவர். மிகச்சமீபகாலத்தில் நடிக்க வந்து சிறப்பான பெயரையும் புகழையும் பெற்றிருப்பவர். ’மேயாத மான்’ தொடங்கி ’பேமிலி படம்’, ‘ரிங் ரிங்’ வரை ‘விவேக் பிரசன்னாவுக்காகவே படம் பார்க்க வந்தேன்’ என்று சொல்பவர்கள் கணிசம். Vivek Prasanna and negative roles

அப்படிச் சில ரசிகர்களின் வரவேற்பைச் சம்பாதித்து வைத்திருப்பதே இவரது வெற்றி.

விவேக் பிரசன்னாவின் பெற்றோர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தினர், உறவினர்கள் நல்லதொரு கல்விப் பின்புலத்தைக் கொண்டவர்கள். விஷுவல் கம்யூனிகேஷன் படித்த விவேக் பிரசன்னா, பின்னர் ஒளிப்பதிவே தனக்கான துறை என்று முடிவெடுத்தார். அரவான், திருடன் போலீஸ், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட சில படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

கல்லூரிக்காலத்தில் குறும்படங்களில் பங்களித்தபோதே, கேமிராவுக்கு முன்பாக முகம் காட்டிய அனுபவம் விவேக் பிரசன்னாவுக்கு உண்டு. அந்த பழக்கம் திரையுலகில் நுழைந்தபிறகும் தொடர்ந்தது. Vivek Prasanna and negative roles

அப்படித்தான் ஒரு திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார் விவேக் பிரசன்னா. அதனைக் கண்ட நடிகர் விஜய் சேதுபதி, ’ஒரு நல்ல நடிகனை வேஸ்ட் பண்ணிடாதீங்க’ என்று இயக்குனர் ரத்னகுமார், ஒளிப்பதிவாளர் விஜயகார்த்திக் கண்ணான் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார். Vivek Prasanna and negative roles

அப்புறமென்ன? அன்று முதல் ஒரு நடிப்புக்கலைஞனாக தனது பயணத்தை மடை மாற்றிக் கொண்டார் விவேக் பிரசன்னா. பெஞ்ச் டாக்கீஸ், 144, ஜில் ஜங் ஜக் படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்த விவேக் பிரசன்னாவை முழுக்க காமெடி வில்லனாகக் காட்டியது ‘சேதுபதி’. அதில் அலப்பறை செய்கிற ரவுடி பாத்திரத்தில் நடித்திருந்தார் விவேக் பிரசன்னா.

தொடர்ந்து இறைவி, மாநகரம், பீச்சாங்கை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் தோன்றினார். அதன்பிறகு ’மேயாத மான்’ படத்தில் வினோத் எனும் பாத்திரத்தில் நடித்தார் விவேக் பிரசன்னா. அதுவரை தொண்டை கிழிய கத்திக்கொண்டு, கையில் கத்திக்கொண்டு ‘நானும் ரவுடிதான்’ என்று திரிந்தவரை ‘செகண்ட் ஹீரோ’ ரேஞ்சில் காட்டியது அப்படம்.

கூடவே, கைத்தட்டல்களை அள்ளுகிற பாத்திரங்களைத் திரையில் அனாயசமாகக் கையாள்வார் என்கிற நம்பிக்கையை இயக்குனர்களுக்குத் தந்தது. இரும்புத்திரை, மணியார் குடும்பம், பேட்ட, சிந்துபாத், கொரில்லா, ஆடை ஆகியவற்றில் ஒரு பாத்திரமாக இடம்பெற்றார் விவேக் பிரசன்னா.

அவருக்கென்று நான்கைந்து காட்சிகள் இருந்தன. அவற்றில் பல வயதான பாத்திரங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இருந்து விலகி நின்றது, சுதா கொங்கராவின் ‘சூரரைப் போற்று’. அதில் சூர்யாவின் நண்பர்களில் ஒருவராகத் தோன்றிய விவேக் பிரசன்னா, அந்த படத்திற்காகத் தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இளம் மற்றும் நடுத்தர வயதுப் பாத்திரங்களுக்கான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

உடன்பால், தண்டட்டி, இங்க நான்தான் கிங்கு, பிளாக் ஆகிய படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்கள் மிக வித்தியாசமானவையாகத் திரையில் தெரியும். அந்த வரிசையில் கடந்த அண்டு வெளியான ‘பேமிலி படம்’, சமீபத்தில் வந்த ‘ரிங் ரிங்’ ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

தான் நடிக்கும் படங்களில், தனது பாத்திரத்தை மிக இயல்பானதாக வெளிப்படுத்துவது விவேக் பிரசன்னாவின் நடிப்பு பாணி. அதேநேரத்தில், அதில் சினிமாத்தனமும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருக்கும். அதுவே ரசிகர்களுக்குப் பிடித்தமானவராக அவரை மாற்றியிருக்கிறது.

சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள்; ட்ரிபிள்ஸ், நவம்பர் ஸ்டோரி, வதந்தி உட்பட ஐந்து வெப்சீரிஸ்கள். சில குறும்படங்கள் என்று நீள்கிறது இவரது பணி விவரங்கள். வயது, நிறம், குணாதிசயம், உடல் தோற்றம் உட்பட நாம் காண்கிற வித்தியாசங்களைப் புறந்தள்ளுகிற வகையில் அடுத்தடுத்த படங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாத்திரங்களில் நடிக்கக்கூடியவர் விவேக் பிரசன்னா.

யதார்த்தமும் சினிமாத்தனமும் குறிப்பிட்ட விகிதத்தில் இவருடைய நடிப்பு பாணியை வரவேற்கிற ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றிருக்கும் இளம் நடிகர்கள் வெகு சிலரே குணசித்திர பாத்திரங்களில் தோன்றுவதில் முனைப்பு காட்டுகின்றனர். குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவராக, ஈர்ப்பை விதைப்பவராக, தனித்துவமான நடிப்புக்கலைஞராகத் திகழ்கிறார் விவேக் பிரசன்னா.

கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது உடன்பிறந்த சகோதரர் என்பது நம்மில் பலர் அறியாத தகவல். கதைத் தேர்விலும் கதாபாத்திர வார்ப்பிலும் கவனம் செலுத்துகிற விவேக் பிரசன்னா, எதிர்காலத்தில் திரையில் கதை சொல்வதிலும் படைப்பதிலும் தன் கைவண்ணத்தைக் காட்டக்கூடும். Vivek Prasanna and negative roles

சிறந்த ரசிகனே சிறப்பானதொரு படைப்பாளியாகவும் மாறுவார் என்பதனை மெய்ப்பித்திருக்கும் விவேக் பிரசன்னா, அடுத்து அந்த உயரம் நோக்கியும் பயணிப்பார் என்று நம்பலாம்! Vivek Prasanna and negative roles

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share