பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்யா ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்
பாலிவுட் திரை உலகில் நடிகர் விவேக் ஓபராய் மிக பிரபலமானவர். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து, நிச்சயதார்த்தம் வரை சென்று , பின்னர் பல காரணங்களால் உறவு பாதியில் முறிந்ததாக தகவல் உண்டு.
தமிழகத்தில் சுனாமி பாதித்த போது, தமிழகத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டவர். அப்போது, ஐஸ்வர்யா ராயை கவரவே இது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், டாக்டர். ஜெய்மதன் யூடியூப் சேனலுக்கு விவேக் ஒபராய் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “செலிபிரிட்டியாக இருப்பதன் கொடுமை என்னவென்றால், உங்கள் காதல் முறிவு செய்தி எங்கும் பரவி விடும்.
ஒருவரை விட்டு வெகு தூரம் தான் வந்துவிட்டேன். அந்தக் காதல் தோல்வி நேரத்தில் என்னுடைய கோரிக்கையை கடவுள் காது கொடுத்து கேட்க மறுத்து விட்டார். அதனால் தான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்துள்ளார்.
யாராவது உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேறினால், அதை பற்றி மாற்றி யோசியுங்கள். ஒரு குழந்தை கையில் வைத்திருக்கும் லாலிபாப்பை சேற்றில் போடுகிறது. அது அழுக்காக இருப்பதால் அதை சாப்பிட அவரது தாய் அனுமதிக்க மாட்டார், இல்லையா? அது போலத்தான் வாழ்க்கையும் . கையில் இருந்தது கீழே விழுந்து விட்டது. புதிய துணை உங்களுக்கு கிடைக்கும்.
உங்களைப் பயன்படுத்தும் உறவில், அவர்கள் உங்களை மதிக்கமாட்டார்கள். உங்கள் சுய மதிப்பை நீங்கள் அறியாததால், நீங்கள் அத்தகைய உறவில் இருக்கிறீர்கள். பிளாஸ்டிக் ஸ்மைல் கொண்ட மக்கள் மத்தியில் நானும் பொய்யானவனாக மாறியிருப்பேன். இப்போது மக்கள் என்னை ட்ரோல் செய்தால் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கம் எனக்குத் தெரியும் ‘என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
100 கி.மீ வேகத்தில் பயணம்… ஐஐடி மெட்ராஸில் ஹைப்பர் லூப் டிராக்!
“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு