மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இன்று (மே 9) அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு மேற்குவங்கத்தில் தடைவிதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நபன்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
“வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்யும் முடிவை எடுத்துள்ளோம்.
கடந்த ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சமூகத்தின் ஒரு பிரிவினரை இழிவுப்படுத்தியது.
தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜகதான் நிதியுதவி செய்துள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “காஷ்மீர் பைல்ஸ் மற்றும் தாஷ்கண்ட் பைல்ஸ் குறித்து பொய்யான, ஆதாரமற்ற தகவல்களை முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். நாட்டில் ‘மதச்சார்பற்றவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களிடையே எளிதில் பிரபலமடைவதற்காக இந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அவதூறு கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று விவேக் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம், கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் போர் நடைபெறும் இஸ்லாமிய நாடுகளுக்கு கடத்தப்பட்டதாகவும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது ஆதாரமற்ற தகவல் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உள்ளிட்ட பலர் சுட்டிக்காட்டி படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் வரை படத்திற்கு தடைகேட்டு வழக்கு சென்ற நிலையில், 32,000 பெண்கள் என்று தவறாக குறிப்பிட்டதாகவும், இது பாதிக்கப்பட்ட 3 பெண்களின் கதை என்றும் கூறி பட தயாரிப்பாளர் பின்வாங்கினார்.
முன்னதாக கடந்த 5ஆம் தேதி தமிழ்நாட்டில் இத்திரைப்படம் வெளியான நிலையில் சட்ட ஒழுங்கை காப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டே நாளில் படம் திரையிடுவதை தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த 2 மணி நேரத்தில்… 19 மாவட்டங்களுக்கு மழை!
நாளை தேர்தல் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கம்!

சம்பவம் உண்மையென்றால் தயாரிப்பாளர் கோர்டுக்கு போக வேண்டியது தானே, மத்திய அரசு புலனாய்வு என்ன செய்கிறது? ராணுவ என்ன செய்கிறது, இமிகிரேஷன் அலுவர் என்ன செய்தது…. பொய்யை பரப்பி மக்கள பிளவு படுத்தும் உன்னை தூக்கில் போட்டால் என்ன