‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவிற்கு பதிலாக புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜீவாவின் ‘ரௌத்திரம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’, ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு கோகுல் இயக்கத்தில், சிம்பு ‘கொரோனா குமார்’ என்னும் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் நடிக்க சிம்புவிற்கு அட்வான்சும் அளிக்கப்பட்டது.
ஆனால் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சிம்பு படப்பிடிப்பிற்கு வரவில்லை. இதையடுத்து அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்தநிலையில் ‘கொரோனா குமார்’ படத்தில் தற்போது சிம்புவிற்கு பதிலாக, விஷ்ணு விஷாலை ஹீரோவாக படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது காமெடியை அடிப்படையாக கொண்ட படமென்பதால், விஷ்ணு விஷால் பொருத்தமாக இருப்பார் என படக்குழுவினர் அவரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை நிரூபிப்பது போல முன்னதாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்னும் முழுநீள காமெடி படத்திலும் சூரியுடன் இணைந்து, விஷ்ணு விஷால் நடித்து இருந்தார். அதுவும் விஷ்ணுவை இந்த படத்திற்கு தேர்வு செய்ததற்கு காரணமாக இருக்கலாம். இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளாராம்.
விரைவில் கோகுல் – விஷ்ணு விஷாலின் ‘கொரோனா குமார்’ குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் தொடர்ச்சியாக ‘கொரோனா குமார்’ உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ஆதரவில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: மோடி காட்டம்!
‘குக் வித் கோமாளி’க்கு குட்பை சொன்ன இயக்குநர்… நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறதா?