மத கஜ ராஜா: விமர்சனம்!

Published On:

| By Selvam

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஒரே படத்துல ‘ரெண்டு’ கதை!

ஒரு திரைப்படம் குறிப்பிட்ட நாளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து அல்லது சில மாதங்கள் கழித்து வெளியாவது சகஜம். அவ்வாறு தள்ளிபோடப்பட்ட வெளியீடுகள் அப்படியே முடங்கிப்போவதும் நிகழ்ந்திருக்கிறது.

இவ்விரண்டுக்கும் நடுவே, குறிப்பிட்ட காலக் காத்திருப்புக்குப் பின்னர் திடீரென்று சில படங்கள் வெளியாகிச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரையே ‘சர்ப்ரைஸ்’ செய்யும். அப்படியொரு ஆச்சர்யத்தை ஒருசேரத் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தந்திருக்கிறது ‘மத கஜ ராஜா’.

சுந்தர்.சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவான இப்படத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, சோனு சூட், சுப்புராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், மறைந்த மணிவண்ணன், மனோபாலா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இத்திரைப்படம், பொங்கல் வெளியீடாகத் தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படம் 2013 பொங்கல் ரிலீஸ் ஆக வந்திருக்க வேண்டியது. ஆக, 12 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிற இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் திரையில் தருகிறது?

‘ரெண்டு’ கதை!

நான்கு நண்பர்கள். சிறு வயதில் ஒன்றாக ‘ரிலே’ ரேஸ் ஒன்றில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். அவர்களிடம் தோற்று இரண்டாமிடம் பிடிக்கின்றனர் நான்கு சிறுவர்கள்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. விளையாட்டு ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக, அந்த நான்கு நண்பர்களும் ஒன்று கூடுகின்றனர். அவர்களில் மத கஜ ராஜாவுக்கு (விஷால்) மட்டும் திருமணமாகவில்லை. மற்ற மூவரும் குழந்தைகள் பெற்று நடுத்தர வயதில் இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதனை ராஜா மெல்ல அறியத் தொடங்குகிறார்.

இந்த நிலையில், ஆசிரியரின் மகள் வேறொருவரை விரும்புவதை அறிந்து திருமணத்தை நிறுத்த அந்த நால்வரும் முடிவு செய்கின்றனர். அவர்களால் அதனைச் செய்ய முடிந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தபின்னும் படம் சுமார் ஒரு மணி நேரம் ஓடுகிறது.
ஏனென்றால், ராஜாவின் நண்பர்களில் இருவர் வாழ்வா, சாவா பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதற்குக் காரணம் கற்குவேல் விஸ்வநாத் (சோனு சூட்) என்ற ஒரு தொழிலதிபர். அமைச்சர்கள், காவல் துறையினரில் சிலர் அவர் வசம் இருக்கின்றனர். அவரிடத்தில், தன் நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயம் பற்றிப் பேசச் செல்கிறார் ராஜா.

கற்குவேல் விஸ்வநாத் அதற்கு என்ன பதில் சொன்னார்? அதன்பின் என்ன நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறது ‘மத கஜ ராஜா’வின் மீதி.

திரைக்கதை இலக்கணப்படி இப்படத்தில் இரு வேறு கதைகள் இருப்பது துருத்தலாகத்தான் தெரிகிறது. ஆனால், சிரிக்கச் சிரிக்கக் காட்சிகள் அமைத்து அந்த நினைப்பை மட்டுப்படுத்துகிறது சுந்தர்.சி யின் திரைக்கதை.

அதுவே, பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானாலும் ‘மத கஜ ராஜா’வை போரடிக்காமல் பார்க்கச் செய்கிறது.

’நான்ஸ்டாப்’ சிரிப்பு!

’நானும் மதுரைக்காரன்தாண்டா’ என்ற தனது ஆரம்பகால ‘டெம்ப்ளேட்’ வசனத்தை விஷால் இப்படத்தில் பேசவில்லை. ஆனால், அப்படங்களைப் போன்றே சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட்மேன்களை அந்தரத்தில் பறக்கவிடுகிறார்.

’காயலான் கடைக்கு போட வேண்டிய கார்களுக்கெல்லாம் வாழ்வு கொடுப்போம்’ என்று சொல்லாத குறையாக, அவற்றை ஆகாயத்தில் மிதக்கச் செய்திருக்கிறார். கார்ட்டூன்களுக்கே சவால்விடும்படியாகச் சில ‘ட்ரிக்’குகளை திரையில் செய்து காட்டுகிறார்.

படத்தின் கதையோடு அவை பொருந்தி நிற்பதால், ‘இப்படியொரு உற்சாக விஷாலை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று மனதுக்குள் தோன்றுகிறது.

அஞ்சலிதான் இதில் ‘மெயின்’ நாயகி. ஆனால், அவரை மட்டும் கவர்ச்சியாகக் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று வரலட்சுமியையும் களமிறக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

ஆபாசம், அருவெருப்பு போன்ற எல்லைகளைத் தொடாமல் நாயகிகளைக் கவர்ச்சிப்பதுமைகளாகக் காட்டுவதில் தான் ஒரு கில்லாடி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். இருவருமே தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கின்றனர்.

இதில் அஜய் ரத்னம், ஜான் கொக்கன், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள் வில்லன்களாக வந்து போகின்றனர். அவர்களில் சோனு மட்டுமே நம்மை ஈர்க்கிறார். இவர் இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் ’பதேஹ்’ இந்தி திரைப்படம் தற்போது தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பது தனிக்கதை.

மறைந்த மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு தொடங்கி ஆர்.சுந்தர்ராஜன், சரத் சக்சேனா, சுதா, விச்சு விஸ்வநாத், லொள்ளு சபா சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர், முத்துகாளை, சத்யா, கே.எஸ்.ஜெயலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் என்று பெருங்கும்பலே இதில் இருக்கிறது.

அவர்களைத் தாண்டி நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், விஷால் கூட்டணியோடு இணைந்து சந்தானம் அடிக்கிற ‘ஒன்லைனர்கள்’ நான்ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. குறிப்பாக மனைவி, மாமியார் கதாபாத்திரங்களோடு அவர் அடிக்கிற லூட்டிகள் ‘ஆவ்சம்’ ரகம்.

அதனைக் காண்கிறபோது, ‘சந்தானம் சார் திரும்பவும் இப்படிப்பட்ட பாத்திரங்கள்ல நடிக்க மாட்டீங்களா’ என்று அறைகூவல் விடத் தோன்றுகிறது.

இந்தப் படத்தில் நடிப்புக்கலைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்களோடு ஆர்யாவும் சதாவும் வேறு ஒரு காட்சியில் தோன்றியிருக்கின்றனர். ஆனால், அவரவர்க்கான முக்கியத்துவத்தை ரசிகர்கள் உணரும்படிச் செய்திருப்பதில் தெரிகிறது சுந்தர்.சியின் ’கமர்ஷியல் சினிமா மேதைமை’. அது புரியாமல்தானே தள்ளாடுகிறது தமிழ் சினிமா!

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு, பிரவீன் கே.எல்.ஸ்ரீகாந்த் என்.பியின் படத்தொகுப்பு, குருராஜின் கலை வடிவமைப்பு, சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, பிருந்தா, ஷோபியின் நடன வடிவமைப்பு என்று பல விஷயங்கள் இதில் சிறப்பாக ஒருங்கிணைந்திருக்கின்றன.

குறிப்பாக, விஜய் ஆண்டனியின் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’, ‘டியர் லவ்வரு’, ‘சற்று முன்வரை’, ‘தும்பக்கி தும்பை’ பாடல்கள் இப்போதும் நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றன. அதனை உணர்ந்ததும், ‘விஜய் ஆண்டனி சார் நீங்க அப்பப்போ இப்படி மியூசிக் போடுங்க’ என்று சொல்லத் தோன்றுகிறது.

ஒரு கமர்ஷியல் படத்திற்கு பின்னணி இசை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று அளந்து பார்த்து இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. பாராட்டுகள்.
சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானாலும், ‘மத கஜ ராஜா’ நமக்கு ‘ரிரீலிஸ்’ ஆன கிளாசிக் கமர்ஷியல் படமாகவே எண்ண வைக்கிறது. அதனால், சுந்தர்.சியின் ரசிகர்களுக்கு இப்படத்தை ரசிப்பதில் தடை ஏதுமில்லை.

சமகாலப் படங்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்படம் குறைகளோடு கூடியதாகத் தெரியலாம். ஆனால், அவர்களாலும் இதனை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது.

அனைத்தையும் தாண்டி, ’பண்டிகை காலத்தில் ஜாலியாக தியேட்டருக்கு சென்று ஜாலியாகத் திரும்பினோம்’ என்று சொல்லத்தக்க ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது ‘மத கஜ ராஜா’.

அப்படியொரு தகுதியைக் கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல என்று உணர்ந்தவர்கள், இப்படத்தினைப் பார்த்துவிட்டு கட்டை விரலை உயர்த்துவது நிச்சயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

7 ஆயிரம் வழக்கு கூட போடுங்க… பெரியாரை மீண்டும் சீண்டும் சீமான்

அப்பாவி விவசாயியும் அடேங்கப்பா சூதாட்டமும் !

முதல்வருடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேம் சேஞ்சர்: விமர்சனம்!

அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்!

சட்டமன்றத் தொடரின் கடைசி நாளில் எடப்பாடி வராதது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share