விஜயகாந்த் படம் என்றாலே அதிரடிச் சண்டைகளும் அனல் பறக்கும் வசனங்களும் நினைவுக்கு வரும். அதற்காகவே ரசிகர்கள் திரையரங்கு வாசலில் திரள்வார்கள்.
அதிலும், அவர் காவல் துறையைச் சேர்ந்தவராக நடித்தால் கேட்கவே வேண்டாம். ஆக்ஷனுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. ஊமை விழிகள், சத்ரியன் தொடங்கி வல்லரசு வரை பல படங்கள் அதற்கு உதாரணம்.
எத்தனை முறை போலீசாக நடித்தாலும், விஜய்காந்தை காக்கி சீருடையில் பார்க்க அலுப்பு தட்டாது. அந்த பார்முலாவை நாமும் கையிலெடுத்தால் என்னவென்று விஷால் யோசித்திருப்பார் போல.
சத்யம், வெடி, பாயும் புலி, அயோக்யா, வீரமே வாகை சூடும் என்று தொடர்ந்து போலீஸாக நடித்துக்கொண்டே இருக்கிறார். வில்லன் கூட்டத்தை அடித்துக்கொண்டே இருக்கிறார். அந்த வரிசையில், இப்போது ‘லத்தி’யும் சேர்ந்திருக்கிறது.
லத்தியைச் சுழற்றும் நாயகன்
காவல் துறையில் கீழ்நிலையில் பணியாற்றும் காவலர்களை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ போன்ற சீரியஸ் படங்கள் மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் ’காக்கிச்சட்டை’ வகையறா கமர்ஷியல் படங்களும் அவ்வரிசையில் அடங்கும்.
1992இல் நடிகர் பிரசாந்த் இளம் கான்ஸ்டபிள் ஆக நடித்த ஒரு தெலுங்குப் படமும் கூட இதில் சேரும். அந்த படத்தின் பெயர் ‘லாட்டி’. தமிழில் ’லத்தி’ என்பது அதன் அர்த்தம். இது ‘தாவூத் இப்ராகிம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியாகியிருக்கிறது.
இந்த வரலாறு எதற்கு என்கிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம்.
கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் முருகன் என்பவர், குற்றம் செய்யாத ஒருவரை அடித்த காரணத்தால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார். ஆறு மாத காலமாகப் பல அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியும், வேலையில் திரும்பச் சேர முடியாமல் தவிக்கிறார்.
இந்தச் சூழலில், டிஜஜி கமல் சிபாரிசில் பணியில் சேர்கிறார். அதற்கான நன்றிக்கடனாக, அந்த அதிகாரியின் மகளிடம் அத்துமீறிய ஒருவரை லத்தியால் அடிக்க வேண்டிய நிலைமை உருவாகிறது. முருகனும் அந்த நபரை அடி நொறுக்கிவிடுகிறார். அதற்குப் பிறகுதான், சம்பந்தப்பட்டவர் ஒரு பெரிய ரவுடியின் மகன் என்று தெரிய வருகிறது.
முறைத்துப் பார்த்தாலே மோதிப் பார்க்க நினைக்கும் குணம் கொண்ட வில்லனை நாயகன் அடித்தால் என்னவாகும்?
தன்னை அடித்தது யார் என்று வில்லன் ஊர் முழுக்கத் தேடுகிறார்; கண்டுபிடித்து விடுகிறார். அதன்பிறகு நாயகனை வில்லன் கூட்டம் என்ன செய்தது என்பதுதான் ‘லத்தி’யின் கதை.
காவல் துறையில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றபோதும், காவலர்களைப் பொறுத்தவரை லத்தி தான் அவர்களுக்கான ஆயுதம். பெரும் கலவரம் நிகழ்ந்தாலும் கூட, களத்தில் முதலில் லத்திதான் எட்டிப் பார்க்கும். அப்படிப்பட்ட லத்தியை வைத்துக்கொண்டு போராடும் ஒரு காவலரின் கதைதான் இப்படம். உடனே, இது புத்திசாலித்தனமான ஆக்ஷன் படம் என்று மனதிற்குள் தோன்றுமே..! அதனால் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகுமே..! அதனைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை ‘லத்தி’ பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

சேவல் பண்ணை போல..!
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாக இருந்தால், இருக்கை நுனிக்கு வந்துவிடுவோம் அல்லது அதுவே ’ஓவர்டோஸ்’ ஆகி இருக்கையில் உட்கார முடியாமல் எழுந்துவிடுவோம். ‘லத்தி’யின் முதல் பாதி நம்மை இருக்கை நுனிக்கு வரவழைக்கிறது; இரண்டாம் பாதியோ ‘எழுந்துவிடுவோமா’ என்ற மனப்போராட்டத்திற்குள் தள்ளுகிறது.
இக்கதையில் கான்ஸ்டபிள் முருகன் ஆக வருகிறார் விஷால். அவரது மனைவி கவிதாவாக நடித்திருக்கிறார் சுனைனா. இந்த ஜோடியின் குழந்தையாக லிரிஷ் ராகவ் வருகிறார். மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே சாதாரண மக்களுக்குப் பிடிக்கும்விதமாக இருக்கின்றன. பணிக்குச் செல்லும் ஒரு சாதாரண பெண்ணாக வரும் சுனைனா, அப்பாத்திரமாகவே தெரிகிறார். சுனைனா விஷால் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் வைத்திருந்தால் என்ன என்று பார்வையாளர்கள் புலம்பும் அளவுக்கு இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
இதில் டிஐஜி கமலாக பிரபு நடித்திருக்கிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு திரையில் அவரது மிடுக்கு தெரிகிறது. தலைவாசல் விஜய், வினோதினி இரண்டொரு காட்சிகளுக்கு வந்து போகின்றனர். முனீஸ்காந்த், ஏ.வெங்கடேஷ், வினோத் சாகர் போன்றவர்கள் வெறுமனே தலையைக் காட்டியிருக்கின்றனர்.
சுறா என்ற பாத்திரத்தில் நடித்தவர் மிடுக்கோடு இருந்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் திணறியிருக்கிறார். அவரது தோற்றமே ஸ்டண்ட் கலைஞர் என்பதை உணர்த்தி விடுகிறது. இன்னொரு வில்லனாக ரமணா வருகிறார். அவருக்குப் பதிலாக யாராவது புதுமுகம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், அவர் ஏற்ற பாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டியது.
இப்படத்தில் நடித்த பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சேவல் பண்ணைக்குள் நுழைந்தது போல படம் முழுக்க ஆண்களின் தலை தான் தட்டுப்படுகிறது. அதனைக் காணும்போது, தாய்மார்கள் கூட்டம் வரவே வராது என்ற எண்ணத்துடனே படம் எடுத்ததாகத் தோன்றுகிறது,
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ண தோட்டா இருவருமே முடிந்தவரை யதார்த்தமாக ஒரு சண்டையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் திரையில் தர முயற்சித்திருக்கின்றனர். முதல் பாதியில் வரும் காட்சிகளுக்கு இடையே ‘கொக்கி’ போல பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பில் நறுக்கு தெறித்தாற் போல முன்பாதி உள்ளது; அதற்கு நேர்மாறாக, இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருப்பது அலுப்பூட்டுகின்றன.

இயக்குனர் ஏ.வினோத்குமார், பொன்.பார்த்திபன் கூட்டணியில் வசனங்கள் ஆங்காங்கே உற்சாகமூட்டுகின்றன. ஆனால், விஷால் பேசும் சில ‘பஞ்ச்’ டயலாக் தான் அந்த உற்சாகத்தை பஞ்சர் ஆக்குகின்றன.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியை மனதில் வைத்தே மொத்த படத்தையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதில் தவறில்லை என்றாலும், எப்போதும் சண்டைக்காட்சிகளுக்கு முன்னதாக இடம்பெறும் ‘பில்டப்’கள் தான் ரசிகர்களை உசுப்பேற்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விட்டிருங்க விஷால்!
விஷாலின் உருவமும் குரலும் மட்டுமல்ல, அவரது நடை உடை பாவனைகளும் கூட கம்பீரமாகத்தான் இருக்கிறது. அதற்காக, எல்லா படங்களிலும் ஒரேமாதிரியாக உடலை முறுக்கிக்கொண்டு அடித்தொண்டையில் வசனம் பேசுவது நன்றாகவா இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், ‘சண்டக்கோழி’ போலவே இதிலும் சில திருப்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுவரை திரையரங்கில் அமைதி காத்தவர்கள் கூட, அந்த காட்சியின்போது விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். ’க்ளிஷே’ என்றானபின்னும், ஒரே விஷயத்தை தனக்கான ‘பிராண்ட்’ கருதுவது எப்படி சரியாகும்?
அது போதாதென்று, படம் முழுக்க யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார் விஷால். பீட்டர்ஹெய்ன் குழுவினரின் உழைப்பு பின்பாதியில் முழுக்க நிரம்பியிருந்தாலும், அது அளவுக்கு அதிகமாகித் திகட்டுகிறது என்பதே உண்மை. விக்ரமின் ‘பீமா’ படம் கூட இதேபோன்ற குற்றச்சாட்டால் பாதிப்புக்குள்ளானது.
விஜயகாந்த் போலவே விஷாலும் தொடர்ந்து போலீஸ் கதைகளில் நடிக்க முயற்சிப்பதைத் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அதில் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றிகளில் இம்மியளவு கூட விஷால் பெறவில்லை என்பதையே காலம் உணர்த்துகிறது.
பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலி, தந்தையை சூப்பர்ஹீரோவாக பார்க்கும் மகன், வில்லன்களிடம் மகன் மாட்டிவிடுவானோ என்று பதைபதைக்கும் நாயகன், இந்த விஷயங்கள் எதையுமே முழுமையாகப் புரிந்துகொள்ளாத நாயகி என்று பல்வேறு அடுக்குகள் ‘லத்தி’ கதையில் இருக்கின்றன. மிக முக்கியமாக, கேட்டாலே அயர்வு தரும் காவலர்களின் தினசரி வாழ்வு வேறு இதில் அடங்கியிருக்கிறது.

அவற்றை திரையில் சொன்னால்தான், நாயகனின் வலிகளோடும் வேதனைகளோடும் ஒரு பார்வையாளர் தன்னைப் பொருத்திக் கொள்வார். தானே நாயகன் ஆன உணர்வைப் பெறுவார். அதையெல்லாம் தவறவிட்டு, வெறுமனே விஷாலின் தனிமனித சாகசம் என்றளவில் சுருங்கி நிற்பதுதான் ‘லத்தி’யின் சோகம்.
குறைந்தபட்சமாக, விஷால் போலவே கதையில் வரும் இதர பாத்திரங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதில் கவனம் செலுத்தியிருக்கலாம். அது நிகழ்ந்திருந்தால், காலத்தால் அழியாத மிகநேர்த்தியான ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினர் கிடைத்திருக்கும். இப்போது, மிகச்சுமாரான ஆக்ஷன் படம் என்ற பீடத்தை எட்டியிருக்கிறது ‘லத்தி’.
உதய பாடகலிங்கம்
தமிழக அரசு உலக சாதனை: 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு!
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லாதது ஏன்?: சசிகலா