விஜய்க்கு வில்லன்: விஷால் போட்ட சம்பள கணக்கு!

சினிமா

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஷால் ரூ.20 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ரிலீசான செல்லமே படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் விஷால். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிபடங்களில் நடித்த விஷால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராகவும் உயர்ந்தார்.

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்த இரும்புத்திரை படத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் சொந்த பட தயாரிப்புக்காக பைனான்சியர்களிடம் வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்த முடியாமல் நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் கைவசம் லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்- 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் லத்தி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் அடுத்து நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.

கதாநாயகனாக, கதைநாயகனாக மட்டுமே நடித்து வந்த விஜய்சேதுபதியை மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வாங்கிய சம்பளம் போன்று இருமடங்கு மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க வாங்கினார்.

தற்போது செவன்ஸ்கீரீன் லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ள படத்தில் விஷாலை வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்த  அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஷாலை மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட விஷால் கேட்ட சம்பளம்தான் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதற்கு குறைந்தபட்சம் 50 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கீடு செய்யவேண்டியிருக்கும்.

அதற்காக விஷால் வாங்கும் சம்பளம் எட்டு கோடி முதல் பத்து கோடி ரூபாய் வரை இருக்கும்.

வில்லனாக நடிக்க அதிகபட்சமாக 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கும்.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் விஷால்.

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய்சேதுபதி, மாநாடு படத்திற்கு பின் எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கான தேவை அதிகரித்து அவர்களின் சம்பளமும் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.

அதே போன்று தளபதி 67 படத்துக்கு பின் விஷாலுக்கு வில்லனாக நடிக்க கேட்டு அதிக  வாய்ப்புகள் வரலாம்.

அதனால் முதல் படத்திலேயே தனது சம்பளத்தை அதிகமாக கேட்டு வாங்கி விட்டால் அடுத்தடுத்த படங்களுக்கும் அதே சம்பளத்தை வாங்கலாம் என்பது விஷாலின் கணக்காக உள்ளது என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

இராமானுஜம்

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

ஆற்றில் ஆடிய நெய்மர், மெஸ்ஸி: கேரளாவில் நடந்த விநோதம்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *