புதிர் தீர்க்கும் நாயகன்!
த்ரில்லர் படங்களின் பெரிய பலவீனம், தொடக்கத்தில் உருவாக்கிய பிரமாண்ட பிம்பத்தை கிளைமேக்ஸ் வரை கட்டிக் காப்பது. அதனைச் செய்து முடிக்கப் பிரமிப்பூட்டும் உழைப்பு வேண்டும். அதனாலேயே, பல படங்கள் ‘பில்டிங் ஸ்ட்ராங் ஃபேஸ்மெண்ட் வீக்’ எனும் அளவில் முடிந்துவிடும்.
அதிலிருந்து விலகி நின்று, தொடக்கம் முதல் இறுதிவரை நம்மை இருக்கை நுனியில் அமர்த்தும் படங்கள் மிகக்குறைவு. ‘விருபாக்ஷா’ தெலுங்கு படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் பார்த்தபோது, அப்படியொரு படமாக இருக்குமென்று தோன்றியது.
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இயக்குனர் சுகுமார். ‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் இவரே. அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய ‘ஆர்யா’, ‘ஆர்யா 2’, ‘நானாக்கு பிரேமதோ’, ’1 நேனொக்கடினே’ படங்களின் திரைக்கதை படு ஸ்டைலிஷாக இருக்கும். அதுவே, ‘விருபாக்ஷா’வை பார்க்கும் எண்ணத்தைத் தூண்டியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா படம்?
பயமுறுத்தும் அனுபவம்!
ருத்ரவனம் என்றொரு கிராமம். அங்கு குழந்தைகள் தொடர்ச்சியாக மரணமடைகின்றனர். அந்த நேரத்தில், ஊருக்குப் புதிதாக வருகிறது ஒரு குடும்பம். அந்த மனிதர் ஏவல் சூனியத்தில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைக்கிறது. ஊர் மக்கள் அவரது வீட்டினுள் நுழையும்போது, ஒரு சிறுமியின் பிணத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார் அந்த நபர். அதனைக் கண்டபிறகு, அவரையும் அவரது மனைவியையும் உயிரோடு எரித்துவிடுகின்றனர் அம்மக்கள்.
அப்போது, 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஊரையே சிதைப்பேன் என்று சாபமிடுகிறார் அந்தப் பெண். அதனைக் காண்கிறார் அவர்களது மகன். அந்த சிறுவன் எந்நேரமும் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். அதனைக் கண்டு அச்சமுறும் ஊர் மக்கள், அருகிலுள்ள ஊரிலிருக்கும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அவனைச் சேர்க்கின்றனர்.
12 ஆண்டுகள் கழித்து, வயற்காட்டிற்குச் சென்ற ஒரு முதியவர் காணாமல் போகிறார். அவர் மீண்டும் ஊருக்குள் வரும்போது, அம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது. உடல் முழுக்கப் புண்களோடு வரும் அந்த மனிதர், நேராகக் கோயில் கருவறைக்குள் நுழைந்ததும் மரணிக்கிறார்.
அதனால், ஊர் மொத்தமும் சாபத்திற்கு ஆளானதாகக் கூறுகிறார் கோயில் பூசாரி. கோயில் கட்டும்போது எழுதப்பட்ட நூலில், அதற்கான பரிகாரத்தைத் தேடுகிறார். அதன் தொடர்ச்சியாக, எட்டு நாட்களுக்கு ஊரைச் சுற்றி ஒரு கோடு வரைந்து வேலி கட்ட வேண்டுமென்று சொல்கிறார். அதனால், யாரும் ஊரைவிட்டு போகக்கூடாது எனும் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
கட்டுப்பாட்டை மீறி, நள்ளிரவில் தனது காதலனைத் தேடிச் செல்கிறார் ஒரு இளம்பெண். அவரது காதலன் மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணும் கொடூரமாகப் பலியாகிறார். அதன்பிறகு, அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்கான காரணம் என்னவென்று கண்டறியும் நாயகன், தீர்வையும் எப்படிச் செயல்படுத்துகிறார் என்று சொல்கிறது ‘விருபாக்ஷா’. அதோடு, முன்கதையில் சொல்லப்பட்ட சிறுவன் என்ன ஆனான் என்பதையும் கூறுகிறது.
இந்த படத்தில், தன் தாயின் பூர்வீகக் கிராமத்திற்கு வருபவராக நடித்துள்ளார் நாயகன் சாய் தரம் தேஜ். தொடக்கமே கிலி ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதால், படம் முழுக்கப் பயம் நம் மனதில் நிறைவதற்குக் குறையே இல்லை. ‘விருபாக்ஷா’வின் பலமும் அதுவே.
பெரும் கூட்டத்திற்கு நடுவே..!
நாயகனைப் போலவே, இப்படத்தில் நாயகியின் பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அதிகம். தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் படங்களில் பார்க்க முடியாத அம்சம் அது. அந்த வகையில், ‘வாத்தி’யில் வந்த சம்யுக்தா ரசிகர்களின் கவனம் கவரும் வகையில் இதில் நடித்துள்ளார்.
சாய் தரம் தேஜுக்கு சூப்பர் ஹீரோ வேடம் இல்லை. என்றபோதும், துளியும் ஹீரோயிசம் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே படம் முழுக்க வந்திருப்பது சிறப்பு. இதுவும் சமீபகாலமாகத் தெலுங்கு படங்களில் பார்க்க முடியாதது.
பிரம்மாஜி, ராஜிவ் கனகலா, சுனில், அஜய், சாய் சந்த் என்று முதிர்ச்சியான தெலுங்கு நடிகர்களோடு சோனியா சிங், ரவி கிருஷ்ணா போன்றோரும் இதில் நடித்துள்ளனர். கிராம மக்கள் என்று ஐம்பது பேரை மட்டும் காட்டாமல் நூற்றுக்கணக்கானவர்கள் திரையில் இடம்பெற்றிருக்கின்றனர்.
அதனாலேயே, பிரமாண்டமான படம் எனும் எண்ணம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது. அதேநேரத்தில், பெரும் கூட்டத்திற்கு நடுவே மிகச்சில பாத்திரங்களை மட்டும் திரைக்கதையில் பிரதானப்படுத்தியிருப்பது சிறப்பு. அது பற்றிய கூர்மையான கவனிப்போ, யோசனையோ வராத அளவுக்குக் கச்சிதமாக அமைந்திருக்கிறது சுகுமாரின் திரைக்கதை.
த்ரில்லர் படங்கள் என்றால் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதமாக இருந்தாக வேண்டியது கட்டாயம். இந்த படத்தில், ஷாம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு காடு மலையெல்லாம் தாண்டிப் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இருள் பரவியிருக்கும் குகைகளைக் காட்டும்போது, உண்மை என்றே நம்பத் தோன்றுகிறது.
ஒவ்வொரு பிரேமும் சிறக்க உதவியிருக்கிறது நாகேந்திர தங்கலாவின் தயாரிப்பு வடிவமைப்பு. பறவைப் பார்வையில் ருத்ரவனம் எனும் கிராமம் செயற்கையாகத் தெரிந்தாலும், நேருக்கு நேராக நோக்கும் கோணங்களில் யதார்த்தம் நிறைந்ததாகத் தெரிய அவரது குழுவினரின் உழைப்பே காரணம்.
அது மட்டுமல்லாமல், அதர்வண வேதத்தின்படி ஏவல் சூனியம் நடப்பதாகக் கதை நகர்கிறது; அந்த சூழலமைப்பை நம்பகத்தன்மையுடன் திரையில் காட்ட மெனக்கெட்டிருப்பது அருமை.
மிகச்சில காட்சிகளில் காக்கை, தவளை உள்ளிட்ட உயிரினங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் எவையெல்லாம் விஎஃப்எக்ஸ் உதவியால் உருவானவை என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை.
’காந்தாரா’வின் வெற்றிக்கு அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் ஒரு காரணம். ‘விருபாக்ஷா’விலும் அவர் அதனைத் தொடர்ந்திருக்கிறார். திரைக்கதை திருப்பங்களை மிகக்கோரமாகக் காட்சியாக்கம் செய்யாமல் தவிர்க்க, அவரது இசையே உதவியிருக்கிறது. விறுவிறுப்பான திரையனுபவத்தைக் கெடுக்கக் கூடாது என்று இரு பாடல்கள் மட்டுமே தந்திருக்கிறார் அஜனீஷ்.
படத்தொகுப்பாளர் நவீன் நூலியின் பங்களிப்பினால், ஒரு பிரேம் கூட தேவையற்றது என்று சொல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது.
அறிமுகமே அமர்க்களம் என்பது போல, பல வகைமைகளைக் கொண்ட ஒரு கதையைப் படமாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் தண்டு. கொஞ்சமாக காமெடி, ரொமான்ஸ் இருந்தாலும், படம் முழுக்க த்ரில்லும் ஆக்ஷனும் ஹாரரும் நிறைந்திருக்கிறது. புதிர்த்தன்மையும் அமானுஷ்யமும் கூட இதில் உண்டு. ஆனால், அதனை அழுத்தமாகக் காட்ட மிகக்கோரமான, வன்முறை நிறைந்த, மனிதத்தன்மையற்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கவில்லை இயக்குனர். அது மிகப்பெரிய ஆறுதல்.
வேறொரு உலகம்!
படம் பார்க்கும் ரசிகர்களைப் பயமுறுத்த, ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. அதன்பின், அதிலிருந்து நொடியும் விலகி நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் கார்த்திக்.
படத்தில் நாயகன் காதலை ஏற்பதா வேண்டாமா என்று தவிப்பார் நாயகி. வழக்கம்போல, என் காதல் உண்மையானது என்பதில் உறுதியாக நிற்பார் நாயகன். ஒரு காதல் ஜோடிக்கு நாயகனும் நாயகியும் உதவுவார்கள். இப்படிப் பல காட்சிகள் ‘க்ளிஷே’வாக தென்படும். ஆனால், அவையெல்லாம் கதையின் முக்கிய அம்சங்கள் என்பது கிளைமேக்ஸில் தெரிய வரும்.
இந்த கதையில், பக்கத்து கிராமத்து மக்களாகச் சிலரைக் காட்டியிருப்பதில் முழுமை தென்படவில்லை. அதுவும் கூட, ஒரு ஆக்ஷன் காட்சிக்கு உதவியிருக்கும். அதனைத் தவிர்த்து, லாஜிக் மீறல்கள் எதுவும் படம் பார்க்கும்போது நினைவுக்கு வருவதில்லை.
’விருபாக்ஷா’ என்ற வார்த்தைக்கு ‘அனைத்தையும் காணும் ஒருவன்’ என்ற பொருள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது. இந்த படத்தைப் பொறுத்தவரை, நாயகனே அந்த விருபாக்ஷா.
அதாவது, அந்த கிராமத்தோடு தொடர்புடைய அத்தனை விஷயங்களையும் அறிந்துகொள்ளும் ஒரே நபர் நாயகனே. அவரது பார்வையே, இதில் பார்வையாளர்களின் பார்வையாகவும் உள்ளது. ‘விருபாக்ஷா’. இது உங்களுக்குப் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால், இப்படம் வேறொரு உலகத்தைக் காட்டுவதை மட்டும் மறுக்க முடியாது. ஒரு திரைப்படம் என்பது கனகச்சிதமாக அந்த அனுபவத்தை ஏற்படுத்தியாக வேண்டும். தியேட்டருக்குள் நுழைவதற்கு முன்னிருந்த மனநிலையை மேலும் ஒருபடி உயர்த்தியிருக்க வேண்டும். அந்த வகையில், நம் எதிர்பார்ப்பை மீறி நிற்கிறது ‘விருபாக்ஷா’.
விரைவில் தமிழ், இந்தியிலும் கூட இந்த படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம். அப்போது, சப்டைட்டில் பற்றிய கவலை ஏதுமின்றி நம்மால் ‘விருபாக்ஷா’வை ரசிக்க முடியும்.
உதய் பாடகலிங்கம்
இந்தியாவைக் காப்பாற்ற தயாராக வேண்டும் : மு.க.ஸ்டாலின்
மதுரை சித்திரைத் திருவிழா தொடக்கம்: அழகர் ஆற்றில் இறங்குவது எப்போது?