தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. இதற்கு பின் அம்மா, மனைவி, குழந்தை என பெண்களின் தியாகம் இருக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கி கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விருமன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த போதிலும் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
இதனை கொண்டாடும் வகையில் இப்படத்தின் சக்சஸ் மீட் விழா நேற்று ( ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
படக்குழுவினர் & 2டி ஊழியர்களுக்கு பாராட்டு
இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, “இந்தப் படம் கோவிட் நேரத்தில் நிறைய கட்டுப்பாடுகளுக்கு நடுவே எடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் பல விஷயங்களுக்கு அனுமதி வாங்கி, தடை இல்லாமல் படத்தின் ஷூட்டிங் நடத்தியதில் டெக்னீஷியன்கள், நடிகர், இயக்குநர் தாண்டி திரைக்குப் பின் பலர் இருக்கிறார்கள்.
இவர்கள் இல்லாமல் படம் இந்த அளவு வெற்றி பெற்றிருக்காது, தங்கு தடையின்றி படப்பிடிப்பு நடந்திருக்காது. அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிக்கு பெண்கள் தான் காரணம்:
தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. குடும்பத்தினரின் தியாகம், நேரம் இதெல்லாம் தான் காரணம். எங்களுக்கு பின்னே பெரிய பலம் இருக்கிறது. அது பெண்கள் தான். அம்மா, மனைவி, குழந்தை என அவர்களின் தியாகம் எங்களுக்கு தெரியும்.
ஒரு ஆண் இங்கே ஜெயிப்பது ஈசி. ஆனால் பெண் ஜெயிக்க அதேபோல் 10 மடங்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும். நிறைய விஷயங்களை அவர்கள் தியாகம் செய்கிறார்கள்.
என் தங்கை சொன்னது:
என் தங்கைகள் சொன்னது தான் நியாபகம் வருகிறது. பிருந்தா, செல்வி இருவரும் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்ட தட்டை மற்றவர்கள் கழுவுவது தான் எங்களுக்கு சொர்க்கம் என சொன்னார்கள். அவர்கள் வாழ்க்கையில் தினசரி அவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
நாம் அனைவருமே இதை புரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை அழகாக இருக்கும். படக்குழுவினர் அனைவரையும் அழைத்து மரியாதை செலுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன். தற்போது அது அழகாக அரங்கேறி இருக்கிறது” என்று கூறினார்.
- க.சீனிவாசன்