நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க இருக்கிறது. ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘விருமன்’.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார். இதுவே, அவருக்கு அறிமுகப்படமாகும். படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறுகிறது.
படத்தின் கதை, படப்பிடிப்பு ஆகியவை முழுக்க முழுக்க மதுரையைச் சார்ந்தது என்பதால் இசை வெளியீட்டு விழாவையும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. யுவன் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.
‘பருத்தி வீரன்’ படத்துக்கு பிறகு அதே போன்ற கிராமத்து மண் கதையை இயக்குநர், நடிகர் கார்த்திக்கிற்கு கொடுத்துள்ளார் என்பது படத்திலிருந்து வெளியான புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது தெரியவருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாமல், நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த மாத இறுதியில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாக இருக்கிறது. இதுதவிர நடிகர் கார்த்தி பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படம் கைவசம் வைத்துள்ளார்.
ஆதிரா