கலைகளின் நகராக இருக்கும் மதுரையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் தொடக்கவிழா மதுரை அரசுமருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதன்பின் திரைப்படம் ஒன்றின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைபெற்றது.
கொம்பன்’ படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் “கஞ்சா பூ கண்ணால…” பாடலின் ப்ரோமோ வீடியோ பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.
கார்த்தி தேசிய விருது பெறுவார்!
விழாவில் கலந்துகொண்டு பாரதிராஜா பேசுகையில், “சூர்யா, கார்த்தி இருவரையும் குழந்தை முதல் பார்த்து வருகிறேன் அவர்களது வளர்ச்சி பிரமிப்பு ஏற்படுத்தக்கூடியது.
வாழ்க்கையின் சிரமங்களை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு செல்லும்போது மகன்களை காரில் அனுப்புவதற்கு பதிலாக ரிக்ஷாவில் அனுப்புவார் நடிகர் சிவக்குமார். கார்த்தியும், சூர்யாவும் என் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவரும் இன்று திரையுலகில் பிரதான நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். கார்த்தியின் நடனத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். நடிப்பில் கார்த்தியின் கண் பேசுகிறது. ‘பருத்திவீரன்’ படம் பார்த்து ஷாக் ஆனேன். அடுத்து இந்தப் படம். சூர்யாவைப் போல அடுத்து கார்த்தியும் தேசிய விருது பெறுவார்.
பாரதிராஜாவுக்கு கற்றுக்கொடுத்த சூர்யா
சூர்யாவுடன் ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்தபோது, ‘அங்கிள் உங்களோட இந்த எக்ஸ்பிரஷன் நல்லாருக்கு. கீப் இட் அப்’ என்றான். அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தான். ஆயிரம் பேருக்கு நான் நடிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அப்போது தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என நினைத்தேன். ஆனால், சூர்யாவுக்கு திரைத் துறையில் நிறைய பிரச்சினைகளைக் கொடுத்தார்கள். தூக்கியெறிந்தார் ‘ஜெய்பீம்’ என. நான் அப்போது சொன்னேன், உனக்கு எது வந்தாலும் பின்னாடி நான் நிற்பேன் என்றேன். சூர்யா நடிகன் என்பதை கடந்து சமூகத்திற்கு அவன் ஒரு சொத்து. அவர் சம்பாதித்து அறக்கட்டளையை நிறுவி, குழந்தைகளை படிக்க வைக்கிறார். பணம் இருக்கும் எல்லோரிடமும் இந்த குணம் இருப்பதில்லை” என்றார்.
பருத்திவீரனுக்கு பிறகு மீண்டும் மதுரையில்…
கார்த்தி பேசுகையில், “கிராமத்து படங்களில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. ‘கொம்பன்’ படம் வெற்றியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ‘விருமன்’ படத்தில் அப்பாதான் நாயகனுக்கு வில்லன். அப்பாவே தவறு செய்தாலும் தண்டிக்கும் நாயகன் என்ற கதையை முத்தையா சொன்னார். எனக்கு கதை பிடித்தது. பிரகாஷ்ராஜூடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ஷங்கர் பெண்ணாக அதிதி திரையுலகில் நுழைந்ததுள்ளார். அது சாதாரணமான விஷயமல்ல. சொல்லப்போனால், என்னையே எங்க அப்பா நடிக்கவே கூடாது என்றார். ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் செல்லும்போது, பெண்களை எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொல்லிக்கொடுத்துள்ளார். முத்தையாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவேண்டும். கடும் உழைப்பாளி அவர். ‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு மீண்டும் மதுரையில் வாழ்ந்த திருப்தி கிடைத்துள்ளது” என்றார்
என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி – சூர்யா பெருந்தன்மை
“மதுரையில் எனக்கு அழகான நினைவுகள் உண்டு. மதுரையில் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. எல்லாமே உண்மைக்கதைகள். கடைக்கோடி கிராமத்திலிருந்து வந்து இயக்குநர் இமயமாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு பெரும் உத்வேகம் பாரதிராஜா. அவரது வீட்டில் நான் விளையாடியிருக்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் என் கூடவே இருக்கேன் என்றார் அவர்.
அது எனக்கு பெரிய சப்போர்ட். மதுரை மக்களின் குரலை பதிவு செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி. அவருடன் ஒரு பயணத்தை தொடங்கியிருக்கிறேன். விரைவில் அறிவிப்பேன். விருமன் படத்தில் இறுதியில் வைக்கப்பட்ட வசனங்களுக்காகவே படத்தை எடுத்தோம். கார்த்தியை விட நான் சினிமாவுக்கு முன்பே வந்திருந்தாலும், சினிமாவை அதிகம் நேசிப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி என்பதை எல்லா மேடைகளிலும் பதிவு செய்திருக்கிறேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது, நான் நியூயார்க்கில் இருந்தேன் என்னை காட்டிலும் அதனை அதிகமாக கொண்டாடியது நீங்கள் ரசிகர்கள்தான். மதுரை, கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடும் ஊர். இந்த இடத்தில் விருமன் இசைவெளியீட்டு நிகழ்ச்சி நடப்பதை வரமாக பார்க்கிறோம்” என்றார் சூர்யா.
கலங்க வைத்த இயக்குநர் முத்தையா
சசிக்குமார் நாயகனாக நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. அதனை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேற்கண்ட எந்தப் படத்திற்கும் தொடக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது இல்லை. அதனை நேற்றைய விழாவில் நினைவுகூர்ந்து இயக்குநர் முத்தையா பேசுகையில், இதுவரையிலும் ஐந்து படங்களை இயக்கியுள்ளேன் இந்தப் படங்களின் படப்பிடிப்புகளையும் நான் பிறந்து வளர்ந்த, படித்த மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் நடத்தியுள்ளேன். பிறந்த மண்ணில் நான் இயக்கிய படத்தின் விழாவை நடத்த வேண்டும். அதனை எனது தாய் தந்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சூர்யாவிடம் வேண்டுகோள் வைத்தேன். என் நீண்டநாள் ஆசை நிறைவேறியது” எனக் கூறி தன் தாய் தந்தையை மேடையேற்றி அறிமுகப்படுத்திய போது திரையுலகினர் மட்டுமல்ல, பார்வையாளர்களும் கண்கள் பனிக்க பார்த்தனர்.
இராமானுஜம்
யுவன் அவுட் – சூர்யாவின் செயல்!