கண்ணீரால் நிரம்பும் சமுத்திரம்!
ஒரு படத்தின் பெயரே பாதிக் கதையைச் சொல்லிவிட வேண்டும். அந்த டைட்டில் தரும் எதிர்பார்ப்பையும் கற்பனையையும் மீறிய ஏதோ ஒன்று திரையில் மிளிர வேண்டும். அது நிகழ்ந்துவிட்டால், ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் கொண்டாட்டம் தான்.
அந்த வகையில், சமுத்திரக்கனியோடு ஒரு சிறுவன் இருக்கும் போஸ்டர் வடிவமைப்பும் ‘விமானம்’ என்ற பெயரும் நம் மனதுக்குள் ஒரு கதையை ஓடச் செய்தது. படத்தைப் பார்க்கும்போது, நாம் கண்ட கற்பனையை மீறிய மாயாஜாலம் திரையில் நிகழ்கிறதா? அது எப்படிப்பட்ட அனுபவமாக மாறுகிறது?
இந்தக் கேள்விகளோடு ‘விமானம்’ படம் பார்க்க உட்கார்ந்தால் நமக்குப் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

பறக்கும் ஆசை!
ஒரு ஏழைச் சிறுவன். அவனுக்குத் தந்தை மட்டுமே. தாய் கிடையாது. மாற்றுத்திறனாளித் தந்தை ஒரு கழிப்பறையை நிர்வகித்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, இருவரும் தினசரி வாழ்வைக் கழிப்பதே பெரும்பாடு என்றிருக்கிறது. ஆனால், அந்தச் சிறுவனுக்கோ விமானத்தில் பறக்க வேண்டுமென்று ஆசை.
அதற்காக, பைலட் ஆக வேண்டுமென்ற கனவில் திளைக்கிறான். சதாசர்வ காலமும் விமானம் பற்றியே பேசிக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருக்கிறான். அதற்கேற்ப, சைனிக் பள்ளியொன்றில் சேரும் நுழைவுத்தேர்விலும் தேர்ச்சியடைகிறான்.
வாழ்வின் பல கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு வெளிச்சக் கீற்று. இனி எல்லாமே சீராக நிகழும் என்று நம்பும் நிலையில், மீண்டும் ஒரு சறுக்கல். அந்தச் சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கும் விஷயம் தந்தைக்குத் தெரிய வருகிறது. மிகச்சில நாட்களே மகன் தன்னோடு இருப்பான் என்று அறிந்ததும் அவர் நொறுங்கிப் போகிறார். அந்த நேரத்தில், அவர் நடத்திவரும் கழிப்பறை விதிமுறை மீறலைக் காரணம் காட்டி இடிக்கப்படுகிறது.
பிழைக்கவே வழியில்லை எனும் நிலையிலும், மகனின் விமானக் கனவை நனவாக்கப் பாடுபடுகிறார் அந்த தந்தை. அந்த ஆசை நிறைவேறாமல் மகன் மடிந்துவிடக் கூடாது என்று வெம்புகிறார். அதன் தொடர்ச்சியாக, வாழ்வில் ஒருமுறையாவது அந்த தந்தையும் மகனும் விமானத்தில் ஏறினார்களா இல்லையா என்பதைச் சொல்கிறது இதன் முடிவு.
அண்ணாந்து பார்த்து வியக்கும் ஒரு விஷயத்தைச் சாதாரண மனிதர்களால் கைக்கொள்ள முடிகிறதா என்பதைச் சொல்கிறது. அந்த வகையில், நிச்சயமாக இது ஒரு ‘பீல்குட்’ படம் தான்!
வீரய்யாவின் பாசம்!
சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் வீரய்யா பாத்திரம் படம் முழுக்க வருகிறது. அதற்கேற்ப, தனது இருப்பு போரடிக்காத வகையில் அவரும் நடித்திருக்கிறார். நண்பர்களிடம் தனது மகனுக்கு புற்றுநோய் இருப்பதாகச் சொல்லும் காட்சியில், அவர் அழும் இடம் நம் கண்களில் நீரை வழியச் செய்யும்.
சிறுவன் ராஜுவாக நடித்திருக்கும் துருவ் அளவோடு திரையில் தோன்றியிருக்கிறார். அவரது பேச்சு எந்த இடத்திலும் ‘ஓவர் ஆக்டிங்’ தொனியில் அமையவில்லை. அவனது நண்பனாக நடித்த சிறுவனுக்கு வாய்ப்புகள் குறைவென்றபோதும், அதில் தனது அபார நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

தந்தை மகன் பாசத்தைச் சொல்லும் இந்தக் கதையில் ஆட்டோ டிரைவராக தன்ராஜும், செருப்பு தைக்கும் தொழிலாளியாக ராகுல் ராமகிருஷ்ணாவும் நடித்துள்ளனர். இருவரது நகைச்சுவை நடிப்பும் மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளது.
அனசுயா வரும் காட்சிகளில் கவர்ச்சி அதிகம் என்பதால் குழந்தைகளோடு படம் பார்க்கும் பெற்றோர்கள் நெளிய நேரிடலாம். அதேநேரத்தில், அவரது பாத்திரத்திற்கான இருப்பை நியாயம் செய்யும் விதமாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியாக வேண்டும். இவர்கள் தவிர்த்து மீரா ஜாஸ்மினும் ராஜேந்திரனும் இரண்டு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.

முன்பாதிக் காட்சிகள் நாடகத்தனமாக நகர்ந்தாலும், அவை நேர்த்தியாகப் படமாக்கப்பட்டதால் மட்டுமே நம்மால் நெளியாமல் இருக்க முடிகிறது. அந்த உழைப்பின் காரணத்தாலேயே, பின்பாதியில் வரும் சோகக் காட்சிகளைக் கண்டதும் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த வகையில், இயக்குனர் சிவபிரசாத் யனலா திரையில் உணர்வுகளை லாவகமாகக் கையாளூம் அற்புதமான திறமை கைவரப் பெற்றிருக்கிறார்.
காட்சிகளைச் சீரான முறையில் நகரச் செய்திருக்கும் மார்த்தாண்ட் கே வெங்கடேஷின் படத்தொகுப்பும், அடித்தட்டு மக்களின் வாழ்வை வெளிப்படுத்தும் ஜே.கே.மூர்த்தியின் கலை வடிவமைப்பும், வெகுசாதாரணமான வசனங்கள் மூலமாக நம் மனதைத் தொடும் பிரபாகரனின் எழுத்து வண்ணமும் இந்த விமானத்தை ஜிவ்வென்று பறக்கச் செய்கின்றன. சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமின்றி, அனசுயா குறித்து மொட்டை ராஜேந்திரனிடம் ராகுல் ராமகிருஷ்ணா சொல்லும் காட்சிகளில் வசனங்கள் அபாரமாகக் கையாளப்பட்டுள்ளன; கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாகிவிடும் அபாயம் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
பாடல்கள் சட்டென்று கடந்து சென்றாலும், பல இடங்களில் பின்னணி இசை நம் மனதை உலுக்கியெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதற்காகவே, இசையமைப்பாளர் சரண் அர்ஜுனின் பணியைப் பாராட்ட வேண்டும்.
கிளைமேக்ஸை மாற்றியிருக்கலாம்!
பாசமலர், ஒருதலைராகம், சேது, பருத்திவீரன் உட்படப் பல படங்கள் அவற்றின் கிளைமேக்ஸுக்காகவே கொண்டாடப்படுகின்றன. ஆனால், சில படைப்புகள் தங்களது உயரத்தை எட்டாமல் போனதற்கும் அதே கிளைமேக்ஸ் காட்சியே காரணமாக இருந்த வரலாறும் உண்டு. அந்த வகையில், ஒரு அசாதாரணமான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கும் ‘விமானம்’ அதன் இறுதிக்காட்சியில் சரிவைச் சந்தித்திருக்கிறது.
ஒரு படத்தின் முடிவு என்பது திரைக்கதையின் நகர்வுக்கும் ட்ரீட்மெண்டுக்கும் நியாயம் செய்வதாக இருக்க வேண்டும். ’விமானம்’ அதனைத் தவறவிட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது மாதிரியான படங்களில் முடிவைத் தீர்க்கமாகச் சொல்லாமல் தவிர்ப்பதுதான் அழகு.

சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின் தவிர்த்து முழுக்க தெலுங்கு கலைஞர்களையே கொண்டிருக்கும் ‘விமானம்’ ஒரு டப்பிங் படம் எனும் உணர்வையே உண்டாக்குகிறது. சமுத்திரக்கனி குரல் தந்திருந்தாலும், உதட்டசைவுகள் சரியாக இருக்கின்றனவா எனும் கேள்விக்குப் பதில் கிடைப்பதில்லை.
படத்தில் தொடர்ந்தாற்போல வரும் சோகக் காட்சிகள் எதிர்மறையான சிந்தனை மட்டுமே நிரம்பியிருக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன. அது போன்ற குறைகளைத் தவிர்த்து நோக்கினால், இப்படம் ஒரு செண்டிமெண்ட் காவியமாகவே தென்படும். சுருக்கமாகச் சொன்னால், இந்த விமானம் ஆகாயத்தில் பறப்பதைக் காட்டிலும் நம் கண்ணீரால் உண்டான சமுத்திரத்திலேயே பெரும்பாலும் மிதக்கிறது. அழுகையும் வருத்தமும் கவலையும் சோகமும் மனித வாழ்வின் அங்கமே என்று நினைத்தால், நீங்கள் இந்த படத்தைப் பார்க்கலாம்.
உதய் பாடகலிங்கம்
WTC Final: ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!
கிச்சன் கீர்த்தனா: வெஜ் நக்கட்ஸ்