ஒரு படத்திற்கான கதையை விட, திருப்புமுனையாக விளங்கும் சில காட்சிகளே போதும் என்று திரையுலகம் கருதிய காலமொன்று உண்டு. கதைத் திருட்டு போல, காட்சிகள் திருட்டும் அப்போது பேசுபொருளாக இருந்தது. தொலைக்காட்சியில் பாடல்களைப் போல ’சிறந்த காட்சிகளை’ தனியாகத் தொகுக்கும் நிகழ்ச்சிகள் வந்தபிறகு அந்த வழக்கம் அருகிப்போனது. ஒட்டுமொத்த திரைக்கதையும் பரபரப்புடன் இருந்தாக வேண்டுமென்ற கட்டாயம் பிறந்தபிறகு, காட்சிகளைக் கொண்டு கதைகளை யோசிப்பதும் குறைந்துவிட்டது.
ஆனால் விமல், தான்யா ஹோப், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், ஷரவணசக்தி இயக்கியுள்ள ‘குலசாமி’யைப் பார்த்தபிறகு அந்த முடிவை இன்னும் திரையுலகம் கைவிடவில்லையோ என்று தோன்றியது.
குலசாமியா, கொலை சாமியா?
கடற்கரையோரக் கிராமமொன்றைச் சேர்ந்தவர் சூரசங்கு (விமல்). அவரது தங்கை பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெறுகிறார்; ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். தங்கையின் படிப்புக்காக நகரத்திற்கு இடம்பெயரும் சூரசங்கு, அங்கேயே தனது மாமாவோடு (ஷரவணசக்தி) தங்குகிறார்; அவரது தயவிலேயே, ஆட்டோ ஓட்டுநர் ஆகிறார். எத்தனை வேலைகள் இருந்தாலும், தன் தங்கையுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக மிகச்சரியாக மதியம் ஒரு மணிக்கு மருத்துவக் கல்லூரி வாசலுக்கு வந்துவிடுவார் சூரசங்கு.
ஒருநாள் அவர்களது வாழ்வு தலைகீழாகிறது. சூரசங்குவின் தங்கை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்படுகிறார். அதற்குக் காரணம் யார் என்று தெரியாமல் அல்லாடும் சூரசங்கு, நகரில் எங்கு பாலியல் குற்றங்கள் நடந்தாலும் ஆஜராகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கொடூரமாகக் கொல்கிறார். அவர்தான் கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும், போலீஸ் தரப்பால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. அவரோ, தன் பாட்டுக்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டும் கொலை செய்துகொண்டும் இருக்கிறார். என்ன நடந்தாலும், மதியம் ஒரு மணிக்கு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் பிரிவில் இருக்கும் தனது தங்கையின் உயிரற்ற உடலைப் பார்க்க அவர் தவறுவதில்லை.
ஒருநாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஒருவர் ஐந்து மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயலும் வகையில் பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியாகிறது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பல பிரமுகர்கள் அவரோடு தொடர்பில் இருக்கின்றனர். அதனால், அந்த வீடியோவை வெளியிட்ட மாணவியை (தான்யா ஹோப்) ஆபத்து சூழ்கிறது. அந்த மாணவியோ, இதில் இருந்து தன்னை சூரசங்குவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். ஆனால், அவரை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.
அந்த நிலையில், அவர் மனதில் ஒரு ஐடியா உருவாகிறது. அதனைச் செயல்படுத்தியபிறகு என்ன நடந்தது? அந்த மாணவியை சூரசங்கு காப்பாற்றினாரா? குற்றங்களைச் செய்யும் அந்த கும்பலைப் பழி வாங்கினாரா என்று சொல்கிறது ‘குலசாமி’.
எழுத்தில் இருக்கும் இந்த கதைக்குத் திரையுருவம் தந்த வகையில், நம்மை எல்லாம் இயக்குனர் ஷரவணசக்தி சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், கதையில் இடம்பெற்றிருக்கும் கொலைகளும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ‘இது குலசாமியா இல்லை கொலை சாமியா’ என்று கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளன.
அபத்தக் களஞ்சியம்!
தொடக்கத்தில் சொல்லியவாறு, சில காட்சிகளை மட்டும் நம்பிக் களமிறங்கியுள்ளது இந்த ‘குலசாமி’. வில்லன் ஆட்களிடம் இருந்து தப்புவதற்காக அந்த கல்லூரி மாணவி சிந்தித்துச் செயல்படும் இடம் அதற்கொரு உதாரணம்.
அந்த மாணவியின் மொபைல் போனில் தான் வில்லன் கும்பலைச் சிக்க வைக்கும் ஆதாரங்கள் உள்ளன. அதற்காகவே, அந்த கும்பலும் அவரைத் துரத்துகிறது. அப்போது, மாணவி தன் வாட்ச்சை பார்க்கிறார். மணி 12.55 ஆகிறது. சரியாக 1 மணிக்குத் தினமும் சூரசங்கு தன் தங்கையின் உடலைப் பார்க்க வருவார் என்ற உண்மை பளிச்சிடுகிறது. அவ்வளவுதான்! வில்லன் கும்பலுக்கு போக்கு காட்டிவிட்டு உடற்கூறியல் பிரிவை நோக்கி ஓடுகிறார் அந்த மாணவி. அந்த உடல் கிடத்தப்பட்டிருக்கும் மேஜையின் முன்னால் வந்து நிற்கிறார். சரியாக 1 மணி ஆகிறது. அதன்பிறகு, வில்லன் ஆட்களோடு நாயகன் மோதும் சண்டைக்காட்சி வரும் என்பதை ‘தானியங்கி’ போல நம் மனம் யோசித்து விடுகிறது; திரையிலும் அதுவே நிகழ்கிறது.
கமர்ஷியல் படம் என்ற வகையில், இந்த காட்சியில் பெரிதாக அபத்தம் இருப்பதாகக் கருத முடியாது. ஆனால், இப்படியொரு காட்சியின்போது ரசிகர்கள் இருக்கை நுனியில் அமர வேண்டுமானால் அதற்கு முன்பான காட்சிகளோடு அவர்கள் ஒன்றியிருக்க வேண்டும். ஆனால், ’அது எங்க வேலையில்லை’ என்று விலகிச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஷரவணசக்தி. விளைவு, மொத்தப் படமும் அபத்தக் களஞ்சியமாக மாறியிருக்கிறது.
கடந்த வாரம் விமல் நடித்த ‘தெய்வ மச்சான்’ வெளியானது; காமெடி என்ற பெயரில் நம்மைக் கடுப்பேற்றியது. இந்த வாரம் ‘குலசாமி’ வந்திருக்கிறது. படத்தில் விமல் தோன்றும் காட்சிகள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது, ‘களவாணி, வாகை சூடவா படத்துல எல்லாம் நல்லா நடிச்சிருந்தார்ல’ என்ற குரல் நமக்குள் கேட்கிறது. அது ஒரு பொற்காலம்!
‘என்னை ஏன் லெக்சரரா போடல’ என்பது போலவே, இப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக வருகிறார் நாயகி தான்யா ஹோப். அருப்புக்கோட்டை பேராசிரியை கைது விவகாரத்தைச் செய்தியாக அறிந்தவர்களுக்கு, இந்த படத்தில் வினோதினி வைத்தியநாதன் ஏற்ற பாத்திரம் வித்தியாசமாகத் தெரியாது. அவரது நடிப்பு இயல்பாகவும் கவரும் வகையில் இருப்பது நல்ல விஷயம்.
பொள்ளாச்சி பாலியல் அத்துமீறலை நினைவூட்டும் வகையில் நான்கு இளைஞர்கள் வில்லத்தனம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் ‘பாஸ்’ ஆக ஒருவர் தோன்றுகிறார். சண்டைக்காட்சியில் அடி வாங்க தோதுப்பட மாட்டார்கள் என்று அக்காட்சிகளில் இவர்களுக்குப் பதிலாக ஸ்டண்ட் நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் ஷரவணசக்தி.
இவர்கள் தாண்டி போஸ் வெங்கட் தொடங்கி இதில் ஒரு டஜன் நடிகர்களாவது வந்திருப்பார்கள். மருத்துவக் கல்லூரி மாணவிகளாக வரும் இரண்டு பெண்களும் அதில் அடக்கம்.
அனைவரும் ஒரே டேக்கில் வசனம் பேசினார்களோ என்று கருதும் வகையிலேயே படமெடுத்திருக்கிறார் இயக்குனர். அவரது எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வைட் ஆங்கிள் ரவி. பல இடங்களில் ஒளிப்பதிவு தரம் டிவியில் பழைய வீடியோ பார்க்கிறோமோ எனும் வகையிலேயே அமைந்துள்ளது.
இரண்டு பாடல்களோடு பின்னணி இசையும் தந்திருக்கிறார் மகாலிங்கம். பொதுவாக, பின்னணி இசை இடம்பெறாத இடங்கள் கதையின் கனத்தைக் கூட்டுவதாக இருப்பதே திரையுலக வழக்கம். இப்படத்தில் அது தலைகீழாக இருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசையைத் தொடர்ந்து கோபி கிருஷ்ணனின் படத்தொகுப்பும் கூட பழைய படம் பார்க்கும் உணர்வையே அதிகப்படுத்துகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார்; அப்படித்தான் டைட்டில் காட்சி சொல்கிறது. ஒவ்வொரு காட்சியும் முடியும்போதும், எதற்காக இந்த படத்தில் தனது பங்களிப்பு இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார் எனும் கேள்வி பூதாகரமாகிறது.
பிரபல இயக்குனர்களே குறிப்பிட்ட படங்களில் தாங்கள் வசனம் எழுதவில்லை என்று பேட்டி அளித்திருக்கின்றனர்; விளம்பரத்திற்காகவும் கவன ஈர்ப்புக்காகவும் தனது பெயரைப் பயன்படுத்த அனுமதித்ததாகச் சொல்லியிருக்கின்றனர். எதிர்காலத்தில் அப்படி விஜய் சேதுபதி பேட்டியளித்தால் மட்டுமே, ‘குலசாமி’யில் அவரது பங்கு என்னவென்று தெரிய வரும்!
கொஞ்சம் யோசித்திருக்கலாமே?
மாநிலத்திலேயே முதலிடம் பெறும் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நிச்சயம் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் தான் சேர்ந்திருப்பார். அதற்கேற்ப ஒரு ஊரைத் திரையில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதிலோ, கல்லூரிப் படிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் பழைய படம் பார்த்தாற் போல் உள்ளன.
வில்லன் கும்பலையும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பையும் இணைக்கும் வகையில், இக்கதையில் பேராசிரியை பாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் அவருக்கான இடம் கேள்விகளை எழுப்பாமல் இருக்க, ஏதேனும் ஒரு கலை, அறிவியல் அல்லது பொறியியல் கல்லூரியில் நாயகனின் தங்கை படிப்பது போல காட்டியிருக்கலாம். ஆனால், மதியம் சரியாக 1 மணிக்குத் தன் தங்கையின் உடலை நாயகன் பார்க்க வருவான் என்கிற காட்சியை முன்வைத்தே, மொத்தப்படமும் மருத்துவக் கல்லூரி பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சரியாகக் கையாளாத காரணத்தால், நம் கவனம் உடனடியாகத் திரையில் இருந்து விலகி விடுகிறது.
படம் பார்த்து முடிந்தபிறகு, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி உட்படப் பல காட்சிகள் எடுக்கப்படாமல் கைவிட்டிருப்பது புரிகிறது. நாயகனின் தங்கை பாதிக்கப்பட்டதில் வில்லன் தரப்பின் பங்கு என்னவென்பது கூட முழுமையாகச் சொல்லப்படவில்லை; அதேநேரத்தில், அரைகுறையாக அவர்களது சம்பந்தம் திரையில் வெளிப்படுகிறது. முழுதாக படம்பிடிக்கப்பட்டு கோர்க்கப்பட்ட காட்சிகளே கொஞ்சம் கூட கவராததால், அந்த காரணங்களை யோசிப்பது தேவையற்ற ஆணிகளாகி விடுகிறது.
இடைவேளையில் கனல் கண்ணன் ஆக்கிய சண்டைக்காட்சி தவிர, ‘குலசாமி’யில் கொண்டாடத்தக்க விஷயம் என்று எதுவுமில்லை. அந்த காட்சிக்கு ஏற்றவாறு மொத்த திரைக்கதையையும் மாற்றி யோசித்திருந்தால், ’குலசாமி’யைக் கொண்டாடியிருக்கலாம். இப்போது, ‘ஏஞ்சாமி இந்த சோதனை’ என்றே கேட்கத் தோன்றுகிறது.
உதய் பாடகலிங்கம்
கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?
“காவலர் பள்ளியை மூட நினைப்பதா?”: எடப்பாடி கண்டனம்!