மீண்டும் தள்ளிப்போகும் தங்கலான்?
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தங்கலான், திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான். பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி,பார்வதி திருவோத்து,மாளவிகா மோகனன்,டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படம் 2024 பொங்கல் போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் தயாராகவில்லை என்பதால் ஜனவரி 26 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.அந்த தேதிக்குள்ளும் தயாராகவில்லை என்பதால், வெளியீட்டை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைத்தார்கள்.
ஏப்ரல் 11 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் நடந்துவருவதாக தயாரிப்பாளர் வட்டாரம் கூறுகிறது.இந்நிலையில்,ஏப்ரல் மாதமும் படம் வெளியாகாது என்றும், படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும்,மே முதல்வாரத்துக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய அரசு அமைக்கப்படவேண்டும். எனவே,நிச்சயம் ஏப்ரலில் தேர்தல் இருக்கும் என்கிறார்கள்.தேர்தல் பிரச்சாரம்,அனல் பறக்கும் விவாதங்கள்,அறிக்கை அக்கப் போர்கள் அதிகம் இருக்கும்.
அந்த நேரத்தில் படம் வெளியானால் அதைப்பற்றிய கவனம் அதிகம் இல்லாமல் போய்விடும், எனவே தேர்தல் சூடு முடிவுக்கு வந்ததும் படத்தை வெளியிடலாம்.இந்தப்படத்துக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளோம், அவை எல்லாம் வெகுமக்கள் கவனத்துக்கு வராமல் போய்விடும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறதாம்.
அதனால் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்த பின்பு வெளியிட்டால் கல்லா கட்டலாம், படத்துக்கும் நல்ல கவனம் கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுவதும் பரிசீலனையில் இருக்கிறதாம். இதனால் தங்கலான் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒருமுறை தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி… தன்னார்வலர்களை கௌரவப்படுத்திய கார்த்தி
மக்களவை தேர்தலில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? – அமீர் கேள்வி!