விக்ரமின் கோப்ரா வெளியாவதில் தாமதம்: ஏன்?

சினிமா

விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள கோப்ரா படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

கோப்ரா படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் பல்வேறு தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூன் 27,2022 இரவு, ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி அப்படம் வெளியாகாது என திரையரங்குகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளிவருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தசூழலில் கோப்ரா தள்ளிப்போக என்னதான் காரணம் என தயாரிப்பாளர், இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தபோது, “இயக்குநர் அஜய்ஞானமுத்து கோப்ரா படத்தின் படத்தொகுப்பை முடிக்கவில்லை அந்த பணி முழுமையடைந்தால் மட்டுமே ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை சேர்க்கமுடியும். அதனால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்பதால் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார்கள்

கோப்ரா படம் கதை கூறி அதற்கான பட்ஜெட் கொடுக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட படம் ஆனால் இயக்குநர் அஜய் ஞானமுத்து அதன்படி பணியாற்றவில்லை என்பதால் தயாரிப்பாளருக்கும் – இயக்குநருக்கும் அவ்வப்போது பஞ்சாயத்துக்கள் நடந்தது. ஒரு வழியாக படம் முடிந்தது என்ற நிம்மதி பெருமூச்சை விட முடியாமல் தயாரிப்பாளர் லலித்குமார் தவித்து வருகிறார்” என்கின்றனர்.

கொரோனா பொது முடக்கத்தின் போது சூர்யா போன்றவர்கள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டபோது விஜய் நடிப்பில் தயாராக இருந்த மாஸ்டர் படத்தை அதிகபட்ச விலைக்கு ஓடிடி தளங்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன. அப்போது தியேட்டரில்தான் மாஸ்டர் படத்தை ரீலீஸ் செய்வேன் என தீர்க்கமான முடிவு எடுத்து அமல்படுத்திய தயாரிப்பாளர் லலித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *