பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் வசனத்தை பேசி நடித்த சிறுவனை, நடிகர் விக்ரம் பாராட்டியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான இப்படத்தில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா என பெரிய திரைப் பட்டாளமே நடித்திருந்தது.

உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.450 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருப்பதாக லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் பாடல்கள் இணையத்தில் அதிகளவில் ரீல்சாக வெளியானது. அந்தவகையில், சிறுவன் ஒருவன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் பேசிய வசனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளான்.
அந்த வீடியோவில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் தனது முன்னாள் காதலி நந்தினியை மறப்பதற்காக பேசிய வசனமான, “இந்த கள்ளும், பாட்டும், போர்க்களமும், ரத்தமும் எல்லாம் அவளை மறக்கத்தான்…என்னை மறக்கத்தான்” என்ற வசனத்தை பேசி அசத்தியிருந்தான்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விக்ரம், “மழலை ஆதித்த கரிகாலன். பின்றியே பா…”என்று பதிவிட்டுள்ளார்.
விக்ரம் பகிர்ந்த குழந்தையின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
செல்வம்