கோட்… டிக்கெட் விலை 500 முதல் 1000 ரூபாயா?

சினிமா

தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பின் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவரும் திரைப்படம் ‘கோட்’.

வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியானது. கோட் படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு விஜய் ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தலையில் அடித்துக் கொண்டனர்.

தமிழ் நாட்டில் மால்தியேட்டர்களில் அரசு அனுமதி வழங்கியுள்ள அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 190 ரூபாய். மால் அல்லாத தியேட்டர்கள், தனித் திரையரங்குகளில் இதை விட குறைவான விலைகளில் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் திரையரங்குகளில் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க, அதிகாலை சிறப்புக் காட்சி, அதிக காட்சி திரையிடல் என எதனையும் நிர்வாகம் அனுமதிப்பது இல்லை.

டிக்கெட் விற்பனை வருவாயில் 60% மேல் படத்தின் விநியோகஸ்தருக்கு பங்குத்தொகை வழங்க மாட்டார்கள். இந்த சதவீதம் அடுத்தடுத்த வாரங்களில் குறைவாகவே விநியோகஸ்தருக்கு கிடைக்கும். இதனால் மால் தியேட்டர்கள் மூலம் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றாலும் புறநகர், தனித்திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் குறைவாகவே கிடைக்கும்.

அதனால் புதிய படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அதிக வருவாயை பெற கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தாத திரையரங்கங்களை டார்கெட் செய்வது வாடிக்கை.

அதிகபட்ச முன்தொகை, டிக்கெட் வருவாயில் 80% வரை பங்கு தொகை என படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கிய கடந்த மூன்று வருட காலமாக திரையரங்குகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதுடன் சில இடங்களில் 90% பங்கு தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மதுரை திரைப்பட விநியோக பகுதிக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் கோட் படத்தின் தொடக்க காட்சிக்கு டிக்கெட் 500 முதல் 1000ம் ரூபாய் வரை விற்கப்பட வேண்டும் என்று படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்றுள்ள ரோமியோ பிக்சர்ஸ் உரிமையாளர் ராகுல் நிபந்தனை விதித்திருப்பதாக கூறுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், கோட்படத்தை திரையிடுவதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளனர். தியேட்டர்களின் ‘சீட்’ எண்ணிக்கை அடிப்படையில் முன்னதாகவே தாங்கள் நிர்ணயிக்கும் விலைப்படி பணத்தை செலுத்த வேண்டும். அல்லது உத்திரவாதம் தர வேண்டும்.

மறுப்பவர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு டிஜிட்டல் திரையிடலுக்கான கீ ஓபன் ஆகாது என ராகுல் தரப்பில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்மடங்குக்கு மேலான கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளாவதுடன் அரசு அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகாமல் இருக்க அதிகபட்ச தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். இந்த குழப்பத்தால் ஆன்லைன் புக்கிங் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து, ரசிகர் கூட்டம் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தான் தியேட்டருக்கு கூட்டம் வருகிறது. போட்ட முதலீட்டை போராடி எடுக்க முடிகிறது. சில படங்களில் லாபம் கிடைக்கிறது. அதற்கும் முடிவு கட்ட பார்க்கின்றனர் ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள்.

இது சம்பந்தமாக தொடர்ந்து தமிழ்நாடு முதல் அமைச்சர், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருந்து அமைச்சராக ஆகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருக்கிறது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகி விட்டாலும் அவர் தொடங்கி நடத்தி வந்த’ ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தொடர்ந்து புதிய படங்களை விநியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய, நெருக்கமான நட்பில் இருந்தவர்கள் பெயரில் படங்களை வெளியிடுவதையும் ரெட் ஜெயண்ட் செய்து வருகிறது.

அரசியல் ரீதியாக திமுகவிற்கு எதிரான நிலை எடுத்திருக்கும் நடிகர் விஜய், தனியாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இந்நிலையில் அவர் நடித்துள்ள கோட் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவது சர்ச்சைக்குள்ளாகும் என்பதால் அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த, உதயநிதியின் நண்பரான ராகுல் உரிமையாளராக இருக்கும் ரோமியோ பிக்சர்ஸ் பெயரில் கோட் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஃபார்முலா கார் பந்தயம் வெற்றி : அமெரிக்காவில் இருந்து பாராட்டிய ஸ்டாலின்

வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

ஊட்டியில் வீடு வாங்க விஷம் வைத்து பெண்ணைக் கொன்ற கணவர் குடும்பம்!

வால்பாறை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *