சென்னையில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கையில் தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ‘I will come back’ என பேட்டியளித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணன் தலைமையில் நலத்திட்டம் வழங்குதல் மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மயிலாப்பூரை சேர்ந்த கஜபதி-பிரியா தம்பதியின் மகன் கிரிஷ்வா(வயது 11) கலந்து கொண்டார். 7ஆம் வகுப்பு படித்து வரும் கிரிஷ்வா கராத்தே மாஸ்டர் ராஜன் மூலமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சாகசம் செய்து காட்டினார்.
சிலம்பம், ஸ்கேட்டிங், வாள் சுற்றுதல், தீப்பற்ற வைக்காமல் 5 ஓடுகளை வைத்து சிறுவன் உடைத்தார். பின்னர் 3 ஓடுகளை வைத்து பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து கையால் அடித்து உடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுவன் கையில் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்த கராத்தே மாஸ்டர் ராஜன், மற்றும் விஜய் கட்சியினர் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மாஸ்டர் கையில் இருந்த பெட்ரோல் ஊற்ற தீ மேலும் எரிந்தது.
பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் சிறுவன் மற்றும் மாஸ்டர் ராஜனுக்கு தீக்காயம் ஏற்பட்டது, இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
பின்னர் தீக்காயமடைந்த சிறுவனின் தாயார் பிரியா பேசுகையில், “என் மகனுக்கு சிறிய காயம் தான் ஏற்பட்டது. தற்போது நன்றாக இருக்கிறார். இது போன்ற பல சாகசங்கள் ஏற்கனவே செய்துள்ளார்.
இன்று ஏற்பட்ட விபத்து எதிர்பாராத விதமாக நடந்தது. எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். எனக்காக என் மகன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவருக்கும் விஜய்யை பிடிக்கும்.
தயாராக பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருந்தோம். மீண்டும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்கள். நாங்கள் விருப்பப்பட்டு வந்தோம், விபத்து தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை” என பேசினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிறுவன் கிரிஷ்வா, “15 உலக சாதனை செய்துள்ளேன். இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தீப்பற்றியது. இது சகஜம் தான். வலி குறைவாகவே உள்ளது. ஓடு மற்றும் கைகளில் பெட்ரோல் ஊற்றுவது வழக்கமான ஒன்று தான். நிச்சயம் கம்பேக் கொடுப்பேன். ‘I will come back’” என கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மெட்ரோ 2-ம் கட்ட பணி: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை!
இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு இவர்… அம்பத்தி ராயுடு புகழ்ந்த வீரர் யார் தெரியுமா?